அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விடுத்துள்ள நிலையில், இன்று சென்னை சசிகலா வீட்டின் முன்பு திரண்ட அவரின் ஆதரவாளர்கள் (அதிமுகவினர் என்று சொல்லப்படுகிறது), அதிமுகவை வழிநடத்த சசிகலா வரவேண்டும் என்ற கோஷத்தை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் மீண்டும் ஒரு ஒற்றை தலைமை வரவேண்டும் என்றும், கட்சியை முழுமையாக அவர் தலைமையில் நடத்த வேண்டும் என்றும், பெரும்பாலான தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதில், எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கை சற்று ஓங்கி இருக்கும் நிலையில், ஓபிஎஸ் தரப்பு அதனை முறியடிக்கும் வழிகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஏகோபித்த ஆதரவு இருந்ததால், பொதுக்குழு மொத்தமும் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் இருந்தது.
மேலும் அதிமுகவின் இந்த பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படாமல் முடிவடைந்தது. அதுமட்டுமல்லாமல் அவைத்தலைவராக பொறுப்பேற்ற தமிழ்மகன் உசேன், அதிமுகவின் அடுத்த பொதுக்குழு கூட்டம் வருகின்ற ஜூலை 17ஆம் தேதி நடைபெறும் என்ற ஒரு அறிவிப்பையும் வெளியிட்டார்.
இந்த அறிவிப்புக்குப் பின்னர் ஓர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களும் மாற்றி மாற்றி செய்தியாளர்களை சந்தித்து, கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் உள்ள சசிகலா வீட்டின் முன்பு அதிமுக தொண்டர்கள் சிலர் பதாகைகளுடனும், கட்சி கொடியுடனும் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், அவர்கள் சசிகலா அதிமுகவை வழி நடத்த வேண்டும் என்று கோஷமிட்டனர். இதனால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.