க.சண்முகவடிவேல்
Karuppu Muruganantham BJP Tamil News: சூர்யா சிவாவை திருப்தி படுத்தும் நோக்கோடு தமிழக காவல்துறையை கண்டித்து தமிழக பாஜகவினர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அலுவலகத்தை முற்றுகையிட முயன்று கைதாகினர். இதுகுறித்த விபரம் வருமாறு;
திருச்சி பறவைகள் சாலையில் உள்ள பாஜக அலுவலகத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகனும், பாஜக மாநில ஓபிசி அணி பொதுச் செயலாளருமான சூர்யா சிவா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தனது கார் மீது உரசி பெரும் சேதத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், இதற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும், அமைச்சர் பொன்முடியும் தான் காரணம் எனத் தெரிவித்தார்.
அதேநேரம், கடந்த 11-ம் தேதியன்று தன் கார் மீது மோதிய தனியார் பேருந்து உரிமையாளரை சூர்யா சிவா ஒருமையில் பேசியும், அந்த பேருந்தை கடத்திச்சென்று தன் பொறுப்பில் வைத்துக்கொண்டு உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டியும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கிருஷ்ணா எனும் தனியார் பேருந்தின் உரிமையாளர் திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் சூர்யா சிவா மீது புகார் கொடுத்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரித்த போலீஸார் சம்பவங்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து சூர்யா சிவா மிரட்டியது உண்மை என்பதை கண்டறிந்து அவர் மீது கொலை மிரட்டல், பணம் கேட்டு மிரட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து நேற்று முன்தினம் பாஜக மாநில பொறுப்பு வகிக்கும் சூர்யா சிவாவை போலீஸார் கைது செய்தனர்.
இந்த கைது நடவடிக்கைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிதான் காரணம் எனச்சொல்லிய சூர்யா சிவாக்கு ஆதரவாக தமிழக பாஜகவினர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.போராட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் பொய்வழக்கு போடும் காவல்துறையை கண்டித்தும், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை கண்டித்தும், தமிழக அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கருப்பு.முருகானந்தம், தமிழக காவல்துறை திமுகவின் ஏவல்துறையாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. எங்கள் ஓபிஸி மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவா மீது தமிழக காவல்துறை வேண்டுமென்றே பொய்வழக்கு பதிந்திருக்கின்றது. அவர் கார் மீது மோதிய தனியார் பேருந்துக்கு பர்மிட் இல்லை, இன்சூரன்ஸ் இல்லை என்ற போது அந்த பேருந்தை ஆர்.டி.ஓ., கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லாமல் ஒருதலை பட்சமாக காவல்துறை நடந்து கொண்டது.
பேருந்தினை சூர்யா கடத்தி வந்து பெட்ரோல் பங்க்கில் நிறுத்தவில்லை. அந்த பேருந்தின் ஓட்டுநர்தான் கொண்டு வந்து நிறுத்தினார். சூர்யா திமுகவில் இருந்து பாஜகவுக்கு வந்ததை பொறுக்க முடியாத திமுக தலைமையிலான தமிழக அரசு காவல்துறை ஏவி விட்டு சூர்யா மீது பொய்வழக்கு போட்டிருக்கின்றது.
பாஜக விரைவில் தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போகின்றது. திமுகவாக இருக்கட்டும், அமைச்சர்களாகட்டும் ரொம்ப ஆடக்கூடாது, அப்படி ஆடினா ஒட்ட நறுக்கிடுவோம். அமைச்சர்கள் ஒவ்வொருத்தர் செய்யும் ஊழல் பட்டியல் எங்ககிட்ட இருக்கு, கூடிய விரைவில் எல்லாத்தையும் மக்கள் மன்றத்தில் வைப்போம்.
திமுகவின் ஏவல்துறையாக இருக்கும் காவல்துறையும் ரொம்ப ஆடக்கூடாது ஒட்ட நறுக்கிடுவோம், நாங்க ஆட்சிக்கு வந்ததும் எங்க மீது பொய் வழக்கு போட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்போம் என தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் மிரட்டல் விடுத்து பேசினார் கருப்பு.முருகானந்தம்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் என நேற்று அறிவித்திருந்த நிலையில் அண்ணாமலை இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக பாஜக மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம், மாநில ஓபிஸி அணித்தலைவர் சாய் சுரேஷ், திருச்சி பாஜக மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன், மாநகர் மாவட்ட துணைத்தலைவரும், பிரபல தொழிலதிபருமான ஜெயகர்ணா, ஓபிஸி அணி மாநில துணைத்தலவரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான எஸ்.பி.சரவணன், ஓபிஸி அணி மாவட்ட தலைவர் அழகேசன், காளீஸ்வரன், ஓபிஎஸ் அணி குரு, மாநில பொதுச்செயலாளர் ராஜ்குமார், வீர திருநாவுக்கரசு, அம்பிகாபுரம் கண்ணன், வழக்கறிஞரணியை சேர்ந்த முத்துமாணிக்கம், சிந்தை.சரவணன், மகளிரணியை சேர்ந்த வளர்மதி உள்ளிட்ட திரளான பாஜகவினர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர்.
காவலர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களை அமைச்சர் அலுவலகத்திற்கு முன்னதாகவே சத்திரம் பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகே தடுத்து நிறுத்தி சுமார் 271 பேரை போலீஸார் கைது செய்தனர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அலுவலகம் முற்றுகை காரணமாக மாநகர காவல்துறை துணை ஆணையர் ஸ்ரீதேவி தலைமையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், அமைச்சர் அலுவலக வளாகம் முழுவதும் காவல்துறையினர் ஏராளமானோர் குவிக்கப்பட்டிருந்தனர்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil