மும்பை: ஷிண்டேயுடன் உள்ள தங்கள் கட்சி எம்எல்ஏக்கள் 12 பேர் மீது தகுதியிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துணை சபாநாயகரிடம் சிவசேனா கேட்டுக் கொண்டுள்ள நிலையில், இதற்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தன்னிடம் சிவசேனா எம்எல்ஏக்கள் 42 பேர் உள்ளதாகவும் கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வரும் சிவசேனாவில் பிளவு ஏற்பட்டுள்ளது. சிவசேனா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் மாயமானதில் இருந்து மகாராஷ்டிர அரசியலில் நாளுக்கு நாள் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. சூரத் சென்ற அவருடன் 11 சிவசேனா எம்எல்ஏக்கள் சென்றதாக முதலில் தகவல் வெளியானது. பின்னர் 30க்கு மேல் உயர்ந்தது. சூரத்தில் இருந்து வெளியேறி, எம்எல்ஏக்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஓட்டலில் ஷிண்டே தங்கியுள்ளார். அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது 40ஐ தாண்டியுள்ளது. நேற்று இறுதி நிலவரப்படி சிவசேனா எம்எல்ஏக்கள் 42 பேர் தன்னுடன் இருப்பதாக ஷிண்டே கூறியுள்ளார். இதுதவிர சுயேச்சைகளுடன் சேர்த்து அவருடன் ஓட்டலில் உள்ள எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 50ஐ தொட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எம்எல்ஏக்கள் மட்டுமின்றி, சிவசேனா எம்பிக்களில் 14 பேர் ஷிண்டேவுக்கு ஆதரவாக உள்ளதாக வெளியான தகவல், உத்தவ் தாக்கரேவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ஷிண்டே ஆதரவாளர்கள் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமான வர்ஷா பங்களாவில் இருந்து இரவோடு இரவாக வெளியேறி, தனது இல்லமான மாதோஸ்ரீக்கு சென்று விட்டார். இந்நிலையில், ஷிண்டேவிடம் உள்ள சிவசேனா எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை குறைத்தால் மட்டுமே தனது ஆட்சிக்கு ஆபத்து ஏற்படாது என்பதை உத்தவ் தாக்கரே உணர்ந்துள்ளார். எனவே, ஷிண்டே உட்பட 12 எம்எல்ஏக்கள் மீது கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதியிழப்பு நடவடிக்கை எடுக்குமாறு, துணை சபாநாயகரிடம் சிவசேனா கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கு ஷிண்டே, டிவிட்டரில் காரசாரமான பதிலடி கொடுத்துள்ளார். அதில், ‘யாரை பயமுறுத்த பார்க்கிறீர்கள்? எங்களுக்கும் சட்டம் தெரியும். அரசியலமைப்பு சட்டத்தின் 10வது பிரிவின்படி, கட்சிக் கொறடா என்பவர் பேரவை பணிகளுக்குதானே தவிர, கட்சி கூட்டம் கூட்டுவது அவரது வேலையல்ல. இதுதொடர்பாக பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்புகள் வந்துள்ளன. என் மீதும் என்னுடன் உள்ள எம்எல்ஏக்கள் 12 பேர் மீதும் நடவடிக்கை எடுப்பதாக கூறுகிறீர்கள். இப்படியெல்லாம் சொல்லி பயமுறுத்த முடியாது. ஏனெனில் நாங்கள் உண்மையான சிவசேனைகள். பால் தாக்கரேயின் சிவசேனைகள். போதுமான பலம் இல்லாமல் ஆட்சி நடத்துகிறீர்கள். எனவே, உங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோர வேண்டிய தருணம் இது’’ என கூறியுள்ளார். உத்தவ் தாக்கரேக்கு ஷிண்டே நேரடியாக விடுத்த இந்த பதிலடி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஷிண்டேவுக்கு எவ்வளவோ உதவிகள் செய்திருக்கிறேன்கொரோனா தொற்றால் பாதித்துள்ள உத்தவ் தாக்கரே, காணொலி மூலமாக சிவசேனா நிர்வாகிகளுடன் நேற்று உரையாற்றினார். அப்போது அவர், ‘எனக்கு பதவி ஆசை இல்லை என்று அப்போதும் கூறினேன். இப்போதும் சொல்கிறேன். ஏக்நாத் ஷிண்டேவுக்கு எவ்வளவோ உதவிகள் செய்திருக்கிறேன். கவுகாத்தியில் ஷிண்டேவுடன் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் கைதிகள் போன்றவர்கள். அவர்களை எப்படி மீட்டு வரலாம் என்று நாம் யோசிக்க வேண்டும். முதல்வர் பதவி எனக்கு முக்கியம் இல்லை. கட்சியை நடத்த எனக்கு தகுதியில்லை என்று நீங்கள் கருதினால், கட்சித்தலைவர் பதவியையும் ராஜினாமா செய்ய தயாராகவே இருக்கிறேன். கொரோனா பாதிப்பு குறைந்ததும், என் உடல் நலம் பாதித்தது. கழுத்தில் இருந்து கால் விரல் வரை வலியால் துடித்தேன். என்னால் எழுந்திருக்கக் கூட முடியவில்லை. இதுதான் சரியான நேரம் என்று பார்த்து எதிரிகள் தாக்கத் தொடங்கினர். இதற்கு பாஜதான் காரணம். நான் திரும்பி வரமாட்டேன் என்று அவர்கள் நினைத்ததுதான் இதற்கு காரணம்,’ என பேசினார்.தேசிய செயற்குழு கூட்டத்துக்கு அழைப்புபதற்றமான அரசியல் சூழ்நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், முதல்வர் உத்தவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, முதல்வரை ராஜினாமா செய்ய அவர் அறிவுறுத்துவதாக தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே, இன்று மதியம் ஒரு மணிக்கு, தேசிய செயற்குழு கூட்டத்தை நடத்துவதாகவும், இதற்கு முக்கிய தலைவர்கள் வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.