அமெரிக்காவில் பெண்களின் கருக்கலைப்புக்கான அரசியலமைப்பு உரிமையை அமெரிக்க உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது. கருக்கலைப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இந்த தீர்ப்பினால் அமெரிக்கப் பெண்கள் தங்களுடைய கருக்கலைப்பு உரிமையை இழக்க உள்ளனர்.
அமெரிக்க பெண்களின் கருக்கலைப்பு உரிமைக்காக, 50 ஆண்டு காலமாக நடைமுறையில் இருந்த Roe v Wade வழக்கின் மூலம் அரசியலமைப்பு உரிமையை சட்டபூர்வமாக அங்கீகரித்த தீர்ப்பு, தற்போது உச்ச நீதிமன்றத்தால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
Roe v Wade வழக்கின் தீர்ப்பின் படி உச்சநீதிமன்றம் கருக்கலைப்பை சட்டபூர்மாக அங்கீகரித்தது. மேலும் 1992-ம் ஆண்டு Pennsylvania v Casey என்ற வழக்கின் தீர்ப்பில், ’22 வாரம் முதல் 24 வார கர்ப்பத்தை சம்பந்தப்பட்ட பெண் சட்டபூர்வமாக கருக்கலைப்பு செய்து கொள்ளலாம்’ என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் அமெரிக்காவின் குடியரசு கட்சியினர் மற்றும் சில அமைப்புகள் சேர்ந்து பெண்களின் கருக்கலைப்பிற்கான நடைமுறையில் மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும், மற்றும் கருக்கலைப்பை தடை செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர். வழக்கின் விசாரணை நடந்து வந்த நிலையில், கடந்த மாதம் ’கருக்கலைப்பு சட்டபூர்வமற்றது’ என்ற சட்ட வரைவு இயற்றப்பட்டது. தொடர்ந்து தற்போது, 15 வாரங்களுக்குப் பிறகான கருக்கலைப்பு சட்டபூர்வமற்றது என, தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அமர்வில், சாமுவேல் அலிட்டோ, கிளாரன்ஸ் தாமஸ், நீல் கோர்சுச், பிரட் கவனாக் மற்றும் ஏமி கோனி பாரெட் ஆகிய ஐந்து நீதிபதிகள், கருக்கலைப்பு சட்டபூர்வமானது இல்லை என்று கூறியுள்ளனர். ஸ்டீபன் ப்ரேயர், சோனியா சோட்டோமேயர் மற்றும் எலினா ககன் ஆகிய மூன்று நீதிபதிகள், ’இந்த நீதிமன்றத்துக்காக வருத்தப்படுகிறோம். இன்று அமெரிக்காவின் பல மில்லியன் பெண்கள் தங்கள் சுதந்திரந்தை இழந்துள்ளனர்’ என்று கூறியுள்ளனர்.
இந்தத் தீர்ப்பு வெளியானதும், நீதிமன்றத்திற்கு வெளியே குழுமியிருந்த, கருக்கலைப்பு உரிமைக்கு எதிரானவர்கள், தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர். ஆனால் நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் இந்தத் தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ’நீதிமன்றம் இதுவரை செய்யாத பிழையைச் செய்துள்ளது. நாட்டை 150 வருடங்கள் பின்னோக்கி செல்ல வைத்துள்ளது. இதன்மூலம் பல அமெரிக்க மக்களின் வாழ்க்கையை நீதிமன்றம் கேள்விக்குறியாக்கியுள்ளது’ என்று கூறியுள்ளார்.
ஜனநாயகக் கட்சியின் சபாநாயகர் நான்சி பெலோசி, ’குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள உச்ச நீதிமன்றம், அந்தக் கட்சியின் இருண்ட மற்றும் தீவிர இலக்கை அடைந்துவிட்டது. அமெரிக்க பெண்களுக்கு, இன்று தங்கள் அம்மாக்களைவிட குறைவான சுதந்திரமே உள்ளது. இந்தக் கொடூரமான தீர்ப்பு மூர்க்கத்தனமானது மற்றும் இதயத்தைத் துன்புறுத்துகிறது’ என்று கூறியுள்ளார்.