கருக்கலைப்பு உரிமை ரத்து: அமெரிக்காவில் வலுக்கும் எதிர்ப்பு!

அமெரிக்காவில் 1973 ஆம் ஆண்டு கருக்கலைப்பு செய்வதற்கான பெண்களின் உரிமை உறுதி செய்யப்பட்டது. ரோ மற்றும் வேட் இடையேயான வழக்கில் கருக்கலைப்பு என்பது பெண்ணின் தனிப்பட்ட உரிமை, அது அரசியலமைப்பு உரிமை என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த நிலையில், 15 வாரங்களுக்குப் பிந்தைய சிசுவை கருக்கலைப்பு செய்வதற்கு மிஸ்ஸிசிப்பி மாகாணம் விதித்த தடையை எதிர்த்து நடைபெற்ற டாப்ஸ் மற்றும் ஜாக்சன் மகளிர் சுகாதார அமைப்பு இடையிலான வழக்கை விசாரித்த அமெரிக்க உச்ச நீதிமன்றம், அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்வதற்கான பெண்களின் சட்ட உரிமையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம், அமெரிக்காவில் 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த கருக்கலைப்பு சட்ட உரிமை நீக்கப்பட்டுள்ளது. எட்டு நீதிபதிகள் அடங்கி அமர்வில் 5 பேர் கருக்கலைப்புக்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளனர். கருக்கலைப்பு உரிமையை அரசியலமைப்பு வழங்கவில்லை. கருக்கலைப்பை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மக்களுக்கும் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் திரும்பி வழங்கப்படுகிறது என்று நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

‘150 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டோம்’ – அதிபர் ஜோ பைடன் வருத்தம்!

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் சட்டங்களை 13 மாகாணங்கள் இயற்றியுள்ளன. மற்ற மாகாணங்கள் கருக்கலைப்புக்கு தடை விதித்தல் அல்லது கருக்கலைப்புக்கான விதிகளை கடுமையாக்கும் சட்டத்தை இயற்றவுள்ளதக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருக்கலைப்பு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு அமெரிக்கா முழுவதும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. “இது நாட்டிற்கு சோகமான நாள். இந்த தீர்ப்பு நாட்டை 150 ஆண்டுகள் பின்னோக்கி அழைத்து சென்றுவிட்டது.பெண்களின் உடல் நலம்,வாழ்க்கை கேள்விக்குரியாகியுள்ளது.” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஓபாமா மற்றும் அவரது மனைவி ஆகியோரும் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக கருதுவதை காட்டுகிறது. இத்தீர்ப்பு லட்சக்கணக்கான பெண்களை பாதிக்கும் என அமெரிக்க பெண்கள் நல அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன. அமெரிக்க பிரபலங்கள் பலரும் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தீர்ப்பை எதிர்த்து ஏராளமானோர் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். அதேசமயம், முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.