கர்நாடக மாநிலம் மாண்டியா அருகே சாலையில் சென்றுக் கொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
மைசூரைச் சேர்ந்த சிவராமு, அனந்தராமையா ஆகிய இருவர் டி.வி.எஸ் ஜூப்பிட்டர் இருசக்கர வாகனத்தில் தாசரகுப்பா பகுதியில் சென்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றியதில், நிலைதடுமாறி வாகனத்துடன் கீழே விழுந்த இருவரின் உடலிலும் தீப்பற்றியதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு பொதுமக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், சிவராமு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அனந்தராமையா சிகிச்சை பெற்று வருகிறார். இருசக்கர வாகனம் தீப்பற்றியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.