வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
“செகண்ட் ஃபாரத்தில் இரண்டாவது வருஷமும் ஃபெயில் ஆகிவிட்டான் துரைராமன்.
பள்ளிக்கூடம் அலர்ஜியாகிவிட்டது அவனுக்கு.
“வீட்டோடு கிடக்கேன்…!” முரண்டு பிடித்தான்.
‘பருத்தி, புடவையாய்க் காய்த்தாற்போல’ சந்தோஷித்தார் மாதய்யா.
“சரி…! கூடமாட வயலுக்கு என்னோட வா, வெவசயத்தைக் கத்துக்கோ…” என்றார்.
“நான் நாலாவது ஃபாரம் வரைக்கும் படிச்சேன்… நீ ரெண்டாவது ஃபாரம் போதும்கறே…!” சமாதானமும் சொன்னார்.
இந்த உரையாடலை எதேச்சையாகக் காதில் வாங்கினார், புழக்கடைப்பக்கமிருந்து வந்த மைத்துனர் சுப்பாமணி, துரையின் மாமா.
‘சொரேல்..’ என்றது அவருக்கு.
‘வளரவிடக்கூடாது.. ! முளையிலேயே கிள்ளி எறியணும்…’ முடிவு செய்தார்.
‘சட்’டென்று மூக்கை நுழைத்தார்.
“ஸ்கூல் ஃபைனல் வரைக்கும் துரை படிக்கட்டும்… அத்திம்பேர்… உங்க காலம் வேற அவன் காலம் வேற…” என்றார்.
“………………..”
“விவசாயம் எங்கே போகப்போறது. இப்போப் படிக்கட்டுமே…!”
மடை மாற்றினார்.
*******************
துரையை கடைத்தெரு, கோவில், ரயிலடி… என்று நெடுக அழைத்துப்போனார்.
கடலை உருண்டை, கமெர்கட் என்று வாங்கிக் கொடுத்தார்.
மூடு பார்த்து, முகம் பார்த்துக் கண்ணே மூக்கே எனக் கொஞ்சிப் பேசினார்.
கோட்டை ஆர்ச் எதிரில் அமைந்துள்ள, தெப்பக்குளம் போஸ்ட் ஆபீஸ் அருகே இருக்கும் ‘மைக்கேல்ஸில்’ ஐஸ் க்ரீம் வாங்கித்தந்தார்.
அப்படி இப்படிப் நல்ல வார்த்தைச் சொன்னார்.
முகம்மது கஜினி இந்தியாவின் மீது 17 முறை படையெடுத்து வந்து தோற்று, 18 வது முறை வெற்றி பெற்றதைச் சிலாகித்துச் சொன்னார்.
தோல்வி என்பது வெற்றியின் முதல்படி என்பதை அவன் மனதில் பதிய வைத்தார்.
மேலே படிக்க துரையிடம் சம்மதம் பெற்றார்.
************************
‘ஆறின கஞ்சி பழங்கஞ்சியாகிவிடும் அல்லவா…’
பாலகுருகுலம் பள்ளியிலிருந்து டி சி வாங்கி, சூட்டோடு சூடாக, கையும் மெய்யுமாய், திருச்சி நேஷனல் ஸ்கூலில் கொண்டுபோய் சேர்த்தார்.
“ரெண்டாவது ஃபாரத்துல சேர்க்க முடியாது. அவனுக்கு ஓவர் ஏஜ்…” என்று தொளசிரங்கன் சார் உறுதியாய் மறுத்தார்.
பிறகு ஆங்காங்கேயிருந்து ஏகப்பட்ட சிபாரிசு வந்தது.
“சரியா வரலேன்னா டி சியைக் கிழிச்சிக் கொடுத்துருவோம்…” என்று மிரட்டிவிட்டு அட்மிஷன் போட்டார்.
***************************
காலையில், சீக்கிரமாகவே துரை பள்ளிக்கு வந்துவிடுவான்.
‘மகாத்மா காந்தி மரம்’ (இன்று அது இந்திரா காந்தி கல்லூரியில் உள்ளது’ என்று கொண்டாடப்படும், 1934 ல் காந்தி உரையாற்றிய அரசமரத்தடியில் ஒரு சின்ன வினாயகர் கோவில் இருக்கும். (தற்போது கோவில் அங்கு இல்லை)
கனியூர் போர்டிங் வார்டனும், சமையலருமான சிவராமய்யர், வினாயகருக்கு அபிஷேக அலங்காரங்கள் செய்வதை ‘ப்ரசாத பக்தியோடு’ பார்ப்பான்.
நைவேத்யம் செய்த பழம், கல்கண்டு, உலர் திராட்சை, சதுர்த்தி நாட்களில், கொழுக்கட்டை, சர்க்கரை பொங்கல், சுண்டல் இப்படி எதாவது அவனுக்குக் கொடுப்பார்.
தினம் தினம் ப்ரசாதம் அனுக்ரஹித்த அந்த வினாயகர்கூட துரைக்கு ஏன் படிப்பை அனுக்ரஹிக்கவில்லை என்பதுதான் புரியாத புதிர்.
*********************
படிப்பு, எட்டிக்காயாகக் கசந்தது துரைக்கு.
வகுப்பில் உட்காரவேப் பிடிக்கவில்லை.
வகுப்பில் புத்தகப்பையைக் கொண்டு வந்து வைப்பான்.
முதல் பிரிவேளை அட்டனன்ஸ் மார்க் செய்துவிடுவார்களல்லவா..?
இரண்டாவது பீரியட்டுக்கு வாத்யார் வரும் முன்னே கம்பி நீட்டிவிடுவான்.
சாப்பாட்டுப் பையை தூக்கிக் கொண்டு, ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், மலைக்கோட்டை எனத் திரிவான்.
நந்தி கோவில் தெரு, பர்மா பஸார், பொலிவர் ரோடு என மனம் போன போக்கில் நடப்பான்.
திருச்சிக் கோட்டை ரயில் நிலைய மாடிப் படிகளில் உட்கார்ந்து பொழுது போக்குவான்.
மலைக்கோட்டைப் பக்கம் தான் நிறைய நாள் போவான்.
மலைவாசலுக்கு எதிரில் வலது கைப்புறம் உள்ள வாழைப்பழ வியாபாரிகள் சத்திரத்தில் அருமையான நீர்மோர் தருவார்கள். அதைக் குடித்துவிட்டு மலையேறுவான்.
தாயுமானவர் சந்நிதியில் உட்கார்ந்து மதியச் சாப்பாடு முடிப்பான்.
மாலை நாலு மணிக்கு மீண்டும் சத்திரத்திற்கு வந்து ஒரு டோஸ் நீர்மோர் குடிப்பான்.
*******************
இன்று போல அப்போது பாபுலஸ் சிடியாக இருக்கவில்லை திருச்சி. சாதாரண ஒரு டவுன்தான்.
தெப்பக்குளத்தைச் சுற்றி இப்போது போல அடைப்புகளெல்லாம் இருக்காது.
சாதாரணமாக ஜனங்கள் வந்து குளிப்பார்கள். துணி துவைப்பார்கள்.
படிக்கட்டுகளில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள்.
மீன்களுக்குச் சிலர் பொறி வாங்கிப் போடுவார்கள்.
தெப்பக்குளம் படிக்கட்டில் உட்கார்ந்து திரும்புவான் சிலநாள்.
வானப்பட்டரை மாரியம்மன் கோவிலில் உட்கார்ந்து பொழுதைக் கழிப்பான்.
காந்தி சிலைக்குப் பின்னால் இருக்கும் அருணாசலம் மன்றத்தில் உட்கார்ந்து பேப்பர் படிப்பான்.
சிறிது நேரம் சர்ச்சுக்குள் உட்கார்ந்து வேடிக்கைப் பார்ப்பான்.
திருச்சிக் கோட்டை ரயில் நிலைய மாடியில் உட்கார்ந்து போகிற வருகிற ரயில் கூட்ஸ் வண்டிகளில் இருக்கும் பெட்டிகளை எண்ணிக் குறித்துவைப்பான்.
வழக்கமாக நந்திகோவில் தெருவில் இருக்கும் முனிசிபல் மருத்துவமனைதான் அவன் போகும் கடைசீ இடம்.
பின்கட்டில் இருக்கும் ஃபார்மஸி முன் நின்று இருமுவான்.
‘டப்’ என்று துப்பாக்கிச்சத்தம் கேட்டவுடன் சரக்’கென்று ஓடும் மரத்தான் வீரனைப் போல, இருமல் சத்தம் கேட்டதும் உடனே ஒரு சின்ன எவர்சில்வர் டம்ளரை ‘டப்’ பென வைப்பார் மருந்தாளுநர்.
அந்த டம்ளரில் இருக்கும் இனிப்பான அரை அவுன்ஸ் ‘சிரப்’ பை ரசித்து ருசித்துக் குடிப்பான் துரை.
கொக்கக்கோலா குடித்த திருப்தியோடு ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வருவான்.
நாலரைக்குப் வீட்டுக்கு மணி அடித்ததும், வகுப்புக்குள் மகிழ்ச்சியுடன் நுழைவான். பையை எடுத்துக்கொண்டு வீடு திரும்புவான்.
பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பதுதான் எவ்வளவு நிஜம்.
ஒரு நாள் வானப்பட்டரை மாரியம்மன் கோவிலில் உட்கார்ந்து பொழுது போக்கிக்கொண்டிருந்தபோது அம்மன் தரிசனத்துக்கு வந்த சுப்பாமணி மாமாவிடம் கையும் களவுமாக மாட்டினான்.
அதன் பிறகுதான் வகுப்பாசிரியர், பாட ஆசிரியர்களிடமெல்லாம், சொல்லிவைத்து கையகலக் கைச்சாத்து நோட்டில் காலை மாலை இரண்டு வேளையும் வகுப்பாசிரியரிடம் கையெழுத்து வாங்க ஏற்பாடு செய்தார் சுப்பாமணி மாமா.
வேறு வழியில்லாமல் பள்ளியில் கட்டிப் போட்டாற்போல் அடங்கிக் கிடந்தான் துரை.
*******************************
அங்கே இங்கே விசாரித்து, ரிடையர்ட் விநாயகம் வாத்யாரிடம் டியூஷனுக்கும் ஏற்பாடு செய்தார் சுப்பாமணி.
விநாயகம் வாத்யாருக்கு வானப்பட்டரைத் தெருவில் கனியூர் போர்டிங் ஹாஸ்டலுக்கும், மாயவரம் லாட்ஜ்கும் இடையில் உள்ள ஒரு சந்தில் வீடு.
(அப்போது ஆண்டார் தெருப்பக்கமும், சத்திரம் பஸ் ஸ்டாண்ட் இரு புறமும் நுழைவாயில் உண்டு நேஷனல் பள்ளிக்கு.
இப்போது இருக்கும் இந்திராகாந்தி காலேஜ் உள்ள இடத்தில் பள்ளியின் ஹாஸ்டலும், பள்ளியின் விளைட்டரங்கமும் இருந்தது.
காஞ்சி புது பெரியவா, வழக்கமாக முகாம் போடும் மைதானம் இது.
‘ஆண்டார் தெருப்பக்கம்’ உள்ளே நுழைந்தால் முதலில் வருவது இஞ்சினியரிங் ப்ளாக், அடுத்தது கைத்தொழில் அறை.
ராமனாதய்யர் ஐந்து தறிகள் வைத்து மாணவர்களுக்குத் துணி நெய்யக் கற்றுத்தருவார்.
ஆனால் முதல் ஃபாரம் இரண்டாம் ஃபாரம் மாணவர்களுக்கு தக்கிளியில் நூல் இழைத்தல் மட்டுமே செய்யச் சொல்லுவார்.
செல்லா ஸ்டோரில் தக்கிளியும். காதி வஸ்திராலயத்தில் பஞ்சுப் பட்டையிம் வாங்கிக்கொண்டு சந்தோஷமாக வருவார்கள் மாணவர்கள்.
மாணவர்கள் நூற்கும்போது அங்கங்கே உப்பி கொடுக்காப்புளிக் காய்போல், இறைதின்ற பாம்புபோல், பயந்த கோளாறுக்கு மந்திரித்துக் கட்டிய முடி கயிறுபோல் இழை வரும்.
ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டு பொழுது போகும்.
வாரத்துக்கு ஒரு பீரியட் கைத்தொழில் வகுப்பு.
வருஷத்துக்கு நாப்பது பீரியட்டும் விடேன் தொடேன் என்று வைராக்கியமாக இருந்து நூற்று, நூற்ற நூலைச் சிட்டம் போட்ட மாணவர்களும் ஓரிருவர் உண்டு.
மாணவர்கள் நூற்கக் கற்கிறார்களோ இல்லையோ, அங்கே வந்து போனதும் மனசு ஃப்ரீயாகிவிடும்.
அதைப் பொறுமையாய் செய்பவர்களை மட்டுமே தேர்ந்தேடுத்து மூன்றாவது ஃபாரம் வந்ததும் ‘கட்டில் நாடாத் தறியில்’ உட்கார வைப்பார்.
அதில் நேர்த்தியாக நெய்பவர்களுக்கு மட்டுமே டிசைன் தரிகளில் நெய்ய அனுமதி கிடைக்கும்.
தேங்காய்ப் பூத் துவாலை நெய்வது வரை பல்வேறு டிசைன் தறிகளும் அங்கு உண்டு.
பாய்முடைதலுக்கும் ஒரு தறி அங்கு இருக்கும்.
பாவு போடுவதற்கு பாவாலை முதற்கொண்டு இருந்த ஒரே பள்ளி அதுவாகத்தான் இருந்தது. அப்போது.
*********************
சுப்பாமணி மாமா வரும்போதெல்லாம் துரையை ஆர் டி சி ஓட்டலுக்கு (இப்போது அந்த ஓட்டல் இல்லை அங்கு) அழைத்துச் செல்வார்.
டிபன் முடித்துவிட்டு வானப்பட்டரை மாரியம்மனையும் தரிசனம் செய்ய அழைத்துச் செல்வார்.
ஒவ்வொரு நாளும் ஆர்டிசி ஓட்டலைக் கடந்துபோகும்போதும், மைக்கேல்ஸை பார்க்கும்போதும், நாக்கில் எச்சில் ஊறும்.
அடுத்த முறை மாமா வரும் நாளை மனதுக்குள் எண்ணி ஏங்குவான் துரை.
**************************
பள்ளிக்கூடம் விட்டதும் சுலபமாகப் போய்விடலாம். அவ்வளவு பக்கம் விநாயகம் சார். வீடு.
விநாயகம் வாத்தியார் டியூஷனுக்கு ஃபீஸ் வாங்கிக் கொள்ளவில்லை.
அவருக்கு மலைவாசல் அருகே இருக்கும் TAS ரத்தினம் பட்டணம்பொடிக் கடையிலிருந்து மூக்குப் பொடி வாங்கி வருவது…
ஆர் டி சியில் மெதுவடை வாங்கி வருவது…
பென்ஷன் வாங்க கருவூலம் செல்லத் துணை…
போன்ற வேலைகளுக்கு ஓடும் பிள்ளையாகத் துரையை வைத்துக் கொண்டார்.
படிப்பு பற்றி அதிகம் கேட்காததாலும், அவ்வப்போது ஆர் டி சி ஐட்டங்கள் சாப்பிட வாய்ப்பு கிடைத்ததாலும் துரைக்கும் விநாயகம் சாரை மிகவும் பிடித்துப் போயிற்று.
அவ்வப்போது வீட்டுக் கொல்லையில் விளையும் தேங்காய், வாழைப்பழம், வாழைக்காய், வாழைத்தண்டு, வாழை இலைகள், எலுமிச்சம்பழம், கிடாரங்காய், கொளிஞ்சி நார்த்தங்காய்…மிதி பாகற்காய், பசலைக் கீரை, மணத்தக்காளிக் கீரை என்று அவ்வப்போது தேவையானதைக் கேட்டு வாங்கிக்கொண்டார்.
*************************
வருஷத்தில் விநாயகம்சார் வீட்டில் நான்கு திவசங்கள் வரும்.
திவசத்துக்கு முதல்நாள், தன் வீட்டு வேலைக்காரம்மா, காமாட்சியை அனுப்பிவைப்பார் மாதய்யா.
அவள் போய், செப்பு, பித்தளை, வெங்கலம் ஐட்டங்களான, வெண்கலப்பானை, சொம்பு, கிண்ணங்கள், தாம்பாளங்கள், போகினி பஞ்சபாத்திரங்கள், கிண்டி போன்றவைகளை புளி போட்டு பளிச்சென்று விளக்கிவைத்துவிட்டு வருவாள்.
********************
பாளம்பாளமாக, அகலமும் காத்திரமுமாக பேயன் தலைவாழை இலைகள்…
ரேக்கு ரேக்காக பேயன் ஏடுகள்…
லாட்டு லாட்டாக விண்ணென்று ரயில்தார் வெட்டிச் சீப்பரிந்த மொந்தன் வாழைக்காய்கள்…
விண்ணென்று கொழுத்துச் சதைபிடித்தப், பூசனி, பறங்கி.
ஆவக்காய்க்கும், அறுத்துப்போடவும், பச்சடிக்குமாக தினுசு தினுசான நாட்டு, ஒட்டு மாங்காய்கள்…
‘கம்…’ மென்று கொய்த மணம் மாறாமல் கொழுஞ்சி நாரத்தங்காய்கள், கிடாரங்காய்கள், எலுமிச்சை, தம்பரத்தங்காய்…
சீசனுக்குத் தகுந்தாற்போல பலாமூசு (பலாப் பிஞ்சு), பலாப்பழம்.
வருவலுக்கான நேந்திரங்காய்…
தம்பலைத் தளிராகப் பிரண்டை, கறிவேற்பிலை. மின்னி இலை…
வீட்டில் காய்ச்சிய பசும் நெய், எல்லாவற்றையும் வில் வண்டியில் போட்டுக் கொண்டு போய் உலுப்பை வைத்துவிட்டு வருவான் கலியன்.
*****************
வினாயகம் வாத்யாருடையப் பித்ருக்களை வருஷத்துக்கு நாலுமுறை இப்படியெல்லாம் திருப்திப் படுத்தினாலும், துரைராமன் ஒவ்வொரு வகுப்பிலும் மினிமம் ‘பாஸ்’ மார்க்குக்கே தத்திக்கிணத்தோம் போட்டான்.
அங்கு சொல்லி, இங்கு கேட்டு, அதைச் சரி செய்து, இதை அனுசரித்துச்… சிம்பு வைத்துச் சப்பைக் கட்டித்தான் அடுத்தடுத்த வகுப்புக்கு மாற்றப்பட்டான்.
**********************
சிந்தாமணி கோபு சார், சென்னையிலிருந்து திருச்சிக்கு வந்து செட்டிலாகிவிட்டதால், வளர்ப்பு மகன் ராமநாதனை கொண்டுவந்து நேஷனல் ஸ்கூலில் சேர்த்தார்.
‘LOVE AT FIRST SIGHT’ என்பது ஷேக்ஸ்பியரின் காதலர்களுக்கு எவ்வளவு பிரசித்தமோ, அந்த அளவுக்குப் பிரசித்தம் நேஷனல் பள்ளியில் துரை, ராமனாதனின் FRINDSHIP AT FIRST SIGHT’ நட்பு. ‘
அவர்களுக்குள் அப்படி ஒரு சிநேகிதம்.
இனம் இனத்தோடுதானே சேரும்…
***********************
ராமநாதன் பள்ளிப் படிப்பில்தான் ரொம்ப வீக். எந்த வாரப்பத்திரிகையில் எந்தப்பக்கத்தில் எந்த நடிகைப் படம் வந்தது. எந்த நடிகைக்கு எத்தனை வயசு என்று கேட்டால் பளிச் பளிச் என்று பதில் சொல்வான்.
கண்ணின் கருவிழியை மட்டும், உதட்டை மட்டும், கை விரலைமட்டும்… எனக் காட்டினால் கூட அது எந்த நடிகை என்பதை டக் கென்று சொல்லிவிடுவான்.
திருச்சியில் எந்த சினிமா டாக்கீசில் எந்த சினிமா என்று ரிலீஸ் என்றால் ‘டான்…டான்…’ என்று பதில் வரும்.
“ஏண்டா துரை.. பள்ளிக்கூடம் போகலை… மாமா அழைச்சிண்டு வந்தாரா…” என்று திடீரென்று வந்து திடீரென்க் கேட்ட மணிமாமாவைப் பார்த்து பேச்சு வராமல் ‘திருக் முறுக்’ என முழித்தான்.
மணிமாமா கெய்ட்டி டாக்கீசில் மேனேஜர் என்பதை பிறகுதான் தெரிந்து கொண்டான்.
ராமநாதனுடன்,கெய்ட்டி டாக்கீசில் ஷோலே சினிமா பார்க்கப் போனதுதான் முதலும் கடைசியுமானது துரைக்கு.
நமக்கு கோவில் குளம்தான் சரி என்ற முடிவுக்கு வந்துவிட்டான் துரை.
*************************
*************************
எம் ஜி ஆரின் சண்டைக் காட்சிகளை அப்படியே பிரதிபலிப்பான் ராமநாதன்.
எம் ஜி ஆர் படம் ரிலீஸ் என்றால் ஒரே கொண்டாட்டம்தான் அவனுக்கு.
வீட்டில் அவன் கர்லாக் கட்டை, கத்திகள், மான் கொம்பு, ஈட்டி, குத்துக் கட்டை என்று எதையாவது வைத்துக்கொண்டு வீர வசனம் பேசிக் கொண்டிருந்தால் அவன் ஸ்கூலுக்கு கட்டடித்துவிட்டு எம் ஜி ஆர் சினிமா பார்த்துவிட்டு வந்திருக்கிறான் என்பதை அறிந்துகொண்டுவிடுவார் கோபு.
**************************
ராமநாதனுக்கு சிதம்பரமும் ஒரு உயிர் நண்பன்.
சினிமா டிஸ்ட்ரிப்யூட்ரின் மகன் சிதம்பரம்.
சிதம்பரம் வாயைத் திறந்தாலே ‘ஜெயமாலினி’ பற்றித்தான் வர்ணிப்பான்.
வகுப்பில் ஜெயமாலினுக்கு ரசிகர் மன்றமே உண்டு.
பெட்டியோடு சினிமா போஸ்டர்களும் வருமல்லவா.. அதைக் கொண்டு வருவான் சிதம்பரம்.
வாத்யார் இல்லாத நேரங்களிலும், இடை வேளை நேரங்களிலும், சிதம்பரம் அதை விரித்துக் காட்ட எல்லோரும் பார்வை நிலை குத்திய நிலையில் ஜெயமாலினியை ரசித்துப் பரவச நிலை அடைவார்கள்.
வழக்கமாக புதுப்படம் ரிலீஸ் ஆகும் வெள்ளிக்கிழமை நாளன்று , அதுவும் ஜெயமாலினி நடித்த படமாக இருந்தால், சிதம்பரத்தோடு ஓசியில் ரசிகர் ஷோ பார்க்கப் போய்விடுவான் ராமனாதன்.
*************************
சிதம்பரத்தின் கனவுக் கன்னி ஜெயமாலினி. அழகை அடிக்கடி அங்கம் அங்கமாக வர்ணிப்பான்.
கெட்ட வார்த்தைகள் பேசுவான்.
எது எப்படி இருந்தாலும், வகுப்பில் மூன்று இடத்துக்குள் வருமாறு மார்க்கும் வாங்கிவிடுவான்.
படிக்கிற நேரத்திலும் பாடம் கவனிக்கிற நேரத்திலும் நட்புக்கள் அவனுக்குப் பகையாகிவிடும்.
*********************
பள்ளிக்கூடத்தில் ராமநாதன், துரை இருவருக்கும், பாடங்கள் படிப்பது எழுதிப் பார்ப்பது, ஒப்பிப்பது, இதையெல்லாம் யாருமே பார்த்திருக்கமுடியாது.
அநேகமாக எல்லாப் பிரிவேளைகளிலும்
‘உன்னால நான் கெட்டேன்… என்னால நீ கெட்டே…’ என்று ஒரு நாளைப் பார்த்தாற்போல், ஒருவர் காதை ஒருவர் பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போடத்தான் நேரம் சரியாய் இருக்கும்.
****************************
சிந்தாமணி கோபுசார் மிகவும் புத்திசாலி.
பளிச்சென, முடிவு எடுத்துவிட்டார்.
‘ராமனாதனுக்குப் படிப்புச் சரிவராது’ தீர்மானித்தார்.
மூணாவது ஃபாரத்தோடு நிறுத்தினார்.
‘ரிக்கார்டு ஷீட்’ வாங்கினார்.
படிப்பை நிறுத்தின கையோடு நியூஸ் பேப்பர் ஏஜன்சி எடுத்து, அவனை உட்கார வைத்துவிட்டார்.
****************************
ராமநாதனின் சிநேகிதம் அறுந்துவிட்டதால், நாலாவது ஃபாரத்தில் ‘துரை படிப்பில் ‘பிக்அப்’ ஆகிவிடுவான்’ என்று எதிர்பார்த்தார் சுப்பாமணி மாமா.
‘ஊம்ஹூம்…’ உள்ளதும் போன கதையாகிவிட்டது.
வழக்கமாக, இரண்டு பக்கமும் கேட் போடப்பட்ட, ஒற்றைப்படை மார்க்கும், இப்போது சூன்யமாகிவிட்டது.
“மார்க் ஏறவே மாட்டேங்குதே…! பதிலுக்கு இறங்குமுகமாயிடுத்தே சார்?”
சுப்பாமணி நேரில் பார்த்து ஆதங்கத்தோடு அவ்வப்போதுக் கேட்பார்.
“பெரியக் க்ளாஸ்ப் போகப் போக சுறு சுறுன்னு படிக்க ஆரம்பிச்சிடுவான். பொறுப்பு வந்துடும்…!…”
சமாதானம் சொல்வார் விநாயகம் வாத்தியார்.
அவன் பொறுப்பாய்ப் படிக்கிறானோ இல்லையோ, தவறாமல் வினாயகம் வாத்தியாருக்கு ‘உலுப்பை’ சென்று கொண்டுதான் இருந்தது.
ஸ்கூல் ஃபைனலுக்கு அனுப்பும் முன் அப்போதெல்லாம் செலக்ஷன் என்று வைப்பார்கள் அல்லவா….!
அந்த செலக்ஷனில் தோற்றுப் போன துரைராமனுக்கு, சப்பை கட்டித் தூக்கி நிறுத்தி ஃபைனல் எழுத வைக்க உதவியது, மாதய்யா கொல்லையில் விளைந்த தேங்காய் மாங்காய்கள்தான்.
****************************
‘ஸ்கூல் ஃபைனல்’ தேர்வுகள் முடிந்தகையோடு, துரைராமனை சென்னைக்கு அழைத்துச் சென்றுவிட்டார் சுப்பாமணி.
பேப்பர் திருத்தியவர்களின் தாராள குணமோ,
துரைராமனின் ஜாதக கட்டங்களில் இருந்த அனுகூலமான கிரஹநிலைகளோ,
பஹவான் கிருபையோ…,
ஏதோ ஒன்றோ…,
எல்லாமோ… அவனுக்குச் சாதகமாக இருந்திருக்கவேண்டும்.
துரைராமன் ஸ்கூல்ஃபைனல் பாஸ் செய்துவிட்டான்.
ஊரே ஆச்சர்யப்பட்டது…
ஊர் மட்டுமா,,,
பூ, புவ, சுவர், மஹர், ஜன, தபோ, சத்யலோகம் என்ற ஏழு மேல் உலகவாசிகளும்,
அதல, விதல, சுதல, தராதல, மகாதல, ரசாதல, பாதாள லோகம் எனப்படும் ஏழு கீழ் உலகவாசிகளும் கூட ஆச்சரியப் பட்டிருப்பார்கள்.
அதற்குமேல் படிக்கவேண்டாம் என்று சுப்பாமணி மாமாவே அனுமதி கொடுத்துவிட்டார்.
********************
‘உத்யோகம் புருஷ லட்சணம்’ அல்லவா.
சென்னையில் தனக்குத் தெரிந்த, ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் சொல்விவைத்து, துரைக்கு குமாஸ்தாவேலை வாங்கித் தந்தார் சுப்பாமணி.
வேலைக்குப் போகத் தொடங்கி ஆறேழு மாதம் கூட ஆகவில்லை, பொறுப்பு வரவேண்டும் என்று சொல்லி, அக்கா அத்தான் சம்மதத்தோடு ஒரு பெண்ணையும் பார்த்துத் திருமணமும் செய்துவைத்து விட்டார்.
“நாலு பேருக்கு வேலை கொடுக்கற அளவுக்கு நம்மகிட்டே சொத்துப் பத்து இருக்கும்போது, துரைராமனை வேற எவனுக்கோ சேகவம் பண்ற உத்யோகத்துக்கு அனுப்பிட்டீரே…!”
மைத்துனர் சுப்பாமணியிடம் வருத்தப்படத்தான் முடிந்தது மாதய்யாவால்.
“அத்திம்பேர்…! நாலு எடத்துல முட்டி மோதி அடிபட்டு மிதிபட்டு சீப்பட்டுச் சின்னப்பட்டு வரும்போதுதான் சொந்த சொத்துமேலே அவனுக்கு மரியாதை வரும்.”
“………………”
“ரெண்டு மூணு வருஷம் அடிபடட்டும். அப்பறம் அவனேத் தேடி வருவான்…”
சுப்பாமணிச் சொல்வதுக் கூட சரிதானோ எனப்பட்டது மாதய்யாவுக்கு.
அடிபட்டு வருவான் என்று நினைத்தது, ‘குஞ்சிரிப்புக்கு மருந்து சாப்பிடப்போய், இருந்த சிரிப்பையும் இழந்த’ கதையாகிவிட்டது.
அடிபட்டு அடிபட்டு மரத்துப்போய், அடிபடுவதே பழகிப்போய், அதுவே வாழ்க்கையுமாகிப் போனது அவனுக்கு.
***********************
துரைராமன், ஒரு சமயம், பட்டணம் பற்றியும், தன் உத்யோகத்தில் உள்ள கஷ்ட நஷ்டங்களைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தான்.
மாதய்யா இடைமறித்து, “ஏண்டா இப்படி எவனுக்கோ போய் மாடாய் உழைக்கறே… நமக்கு இருக்கற சொத்துக்கு, நாம நாலு பேருக்கு வேலை கொடுத்துண்டு, ஜாம்ஜாம்னு ராஜாவாட்டம் இருக்கலாமே…!” என்றார் இயல்பாக.
உரிமையாய், யதார்த்தமாகத்தான் சொன்னார் மாதய்யா.
“நாலு எழுத்து படிச்சிருந்தா உனக்குத் தெரியும்… நீங்க வந்து மெட்ராஸ்ல ஒரு மாசம் இருந்து பாருங்கோ…!” என்று பேசிவிட்டான் துரைராமன்.
“போடாப் பரதேசி நாயே…!”
இடிப் போலக் குரல் கேட்டு, அடுக்களையிலிருந்த குந்தலாம்பாளும், துரைராமன் மனைவி மோகனாவும் பட்டகசாலைக்கு ஓடி வந்தார்கள்.
“ஐ ஏ எஸ் படிச்சி கலெக்டர் உத்யோகம் பார்கறதா நெனப்போ… பேச வந்துட்டான்…”
“……………………”
“முன்னால நிக்காம போயிடு… டம்பத்தெரு நாயே… போடா…!”
அப்பாவின், கத்தலைப் பொருட்படுத்தாமல் துரைராமன் ஏதோ வாயாடினான்.
கோபத்தை அடக்கமுடியாமல், தலைக்கு மேல் வளர்ந்து, திருமணமும் ஆகிவிட்ட மகனை கை நீட்டி அடித்தும் விட்டார் மாதய்யா…
அடிபட்ட புலியாய் துரைராமனும் சீறினான்.
அடுத்த அரைமணி நேரத்தில், கோபித்துக்கொண்டு வைராக்யம் பேசிவிட்டு, மனைவியோடு சென்னைக்கு ரயிலேறிவிட்டான்.
*************************
“இந்த வீட்டுக் குத்துக்கல் மிதிக்க மாட்டேன்” சபதம் செய்துவிட்டுப் போய்விட்டான் துரை.
மாதய்யா எதிரில் இருக்கும்போது உறவு முறை சொல்லி, புத்தி சொன்னார் சுப்பாமணி மாமா.
எட்ட இருக்கும்போது பேரு ஊரு சொல்லி ‘அவர்நடந்துண்டது சரியில்லை…” எனப் பேசினார்.
மாதய்யாவின் மேல் இருந்த கோபத்தைப் படிப்படியாய் குறைத்து, துரைராமனை ஊருக்கு வந்து போகச் செய்வதற்குள் சுப்பாமணி தலையால் தண்ணீர் குடிக்கவேண்டியதாகிவிட்டது.
சுப்பாமணியின் பெரு முயற்சியால் ஏதோ ‘கடனே…!’ என்று வந்து போகிறான்.
அன்று அவர்களுக்குள் நின்று போன பேச்சு வார்த்தைதான் இன்று வரை ஒட்டவில்லை.
அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு துரைராமன் ஊருக்கு வருகிறான் என்று தெரிந்தாலே, மாதய்யா வயல்வெளிக்குக் கிளம்பிவிடுவார்.
கூடியவரை அப்பாவும் மகனும் சேர்ந்து வீட்டில் இருப்பதில்லை.
அப்படி இருக்கும் பட்சத்தில், ‘எந்தக் கனத்தில், எந்தப் புயல் வீசுமோ…?’ என்ற அச்சமான அமைதியில்தான் இருக்கும் வீடு.
**********************
கர்ண கொல்லை வாய்க்காலில் போடப்பட்டிருந்த பாலத்தில் பாறாங்கற்களுக்கு நடுவே விரிந்த இடுக்கில் வண்டிச் சக்கரம் மாட்டி, தனவேலு மகம் மாரிமுத்து மூலம் வீட்டுக்கு வந்தது.
வீட்டில் புளிப்பத்து போட்டுக் கொண்டு வலியோடு அவஸ்தைப்படுவது…
இதெல்லாம் எதுவுமேத் தெரியாதக் கலியன் சொன்னபடி, இரண்டாம் பாட்டம் இரண்டாம் நாள் அறுவடைக்காக விடிகாலையிலேயே களத்துக்குப் போய்விட்டான்.
பட்டரைமேல் போர்த்தியிருந்த படுதா பிரித்தான்.
சாணிப்பாலால் ‘திருகல் குறி’யைச் சோதனை செய்தான்.
ஆட்களோடு, பட்டரை உடைத்துக் களம் பூராவும் பரத்தித் திராவினான்.
வெளிச்சம் வந்ததும், அறுப்பைத் தொடங்கித் தொடர்ந்து கொண்டிருந்தான்.
*************************
சூரியனைப் பார்த்தான்.
நேரத்தைக் கணக்கிட்டான்.
‘அய்யா இன்னம் காணலையே…?’
நினைத்தவன், ‘வீட்டுக்குப் போயி ‘ஒரு எட்டு’ப் பாத்துட்டு வரலாமே..’
போனான்.
வாசல் சாரமனையில் யானைக்கால் போல வீங்கிய காலோடு சாய்ந்திருந்தார் மாதய்யா.
பேரதிர்சி அடைந்தான் கலியன்.
அப்பிய ரத்தம் உரைந்தாற்போல போடப்பட்டிருந்த புளிப் பற்று, வீக்கத்தை இன்னும் அதிகரித்துக் காட்டியது.
“ வா கலியா… நேத்தே ராவோட ராவா கலியனை வண்டி கட்டச் சொல்லி ஜீவபுரம் டாக்டர்கிட்டே போங்க” ன்னு சொன்னேன்.
“………………………”
“அதெல்லாம் வேண்டாம்னு புளிப்பத்து போட்டுக்கிட்டு எப்படி அவஸ்தைப் படறாரு பாரு உங்க அய்யா…!”
கலியனிடம், உரிமையாகப் புகார் செய்தாள் குந்தலாம்பாள்.
******************
அடுத்த நிமிஷம் பின்கட்டுக்கு ஓடினான்.
வீரனைப் பூட்டி வண்டியோடு வந்து தயாராய் நின்றான்.
“ஏறுங்கய்யா…!”.
வலி ‘விண்…விண்…ணெ’ன்று தெறித்ததால், வண்டி ஏற முடியவில்லை.
கைத்தாங்கலாக அவரை வண்டியில் ஏற்ற அருகில் சென்றாள் குந்தலாம்பாள்.
பற்ற வைத்ததிலிருந்து 12 மணி நேரம் தொடர்ந்து விரகிட்டு எரிந்துகொண்டிருக்கும் செங்கல் காளவாய்க்கு பதினைந்தடி முன் செல்லும்போதே, அனல் தாக்குமல்லவா…
அப்படி ‘அனலாய்த் தாக்கியது’ மாதய்யாவின் உடம்பு.
குந்தலாம்பாள் பதறினாள்.
வண்டி ஜீவபுரம் நோக்கிச் சென்றது.
மாதய்யாவின் மனம் எதிர் திசையில் இருக்கும் திருச்சியை நோக்கிச் சென்றது.
***********************
நேஷனல் ஹைஸ்கூலில் முதல் ஃபாரம் தொடங்கி, நாலாவது ஃபாரம் வரை ஒன்றாகப் படித்த பள்ளித் தோழன் அருணகிரி.
மாதவன் நாலாவது ஃபாரத்தோடு படிப்பை நிறுத்திக்கொள்ளப் போவதாகச் சொன்னபோது, “படிப்பை பாதீல விடாதடா…” என்று கெஞ்சவதுபோல் கேட்டவன்.
“அருணகிரி… உன் வார்த்தைக்குக் கட்டுப்பட்டுத்தான் நாலாவது ஃபாரம் படிச்சேன்.”
‘என்னோட எய்ம் மிலிட்டடில சேர்ந்து தேச சேவை செய்யறதுதான். தயவு செய்து என்னைத் தடுக்காதே…” மாதவன் சொன்னபோது….
“சரி… உன் இஷ்டம்…” என்று விட்டுவிட்டான் அருணகிரி.
***********************
காஜாமலை மைதானத்தில், ராணுவத்துக்கு ஆள் எடுப்பு முகாமில் கலந்துகொண்டான் மாதவன்..
அதில் தேர்வாகி ராணுவத்தில் இணையும் வரை விடுப்புக் கிடைக்கும்போதெல்லாம், மாதவனை வீட்டுக்கு வந்து பார்த்துப் பேசிவிட்டுப் போவான் அருணகிரி.
ராணுவத்திற்குப் போன பிறகு கூட, வருஷத்துக்கு ஒரு மாதம் விடுப்பில் ஊருக்கு வரும்போது, அருணகிரி வீட்டுக்குச் சென்று இரண்டு நாட்கள் ஜீவபுரத்தில் தங்கி வருவான் மாதவன்.
அப்படிப்பட்ட பள்ளி நட்பு அவர்களுடையது.
******************************
மிலிட்டரி வேலைக்கான ‘காண்ட்ராக்ட்’ முடிந்துவிட்டது.
ரிடையராகிவிட்டார்.
வீட்டோடு இருந்து மாதய்யா விவசாயத்தில் ஈடுபடத்துவங்கிய சமயத்தில், அருணகிரி மெடிக்கல் படித்துக்கொண்டிருந்தான்.
******************************
“மாதவா… நான் எம்பிபிஎஸ் முடிச்சுட்டேன். ஜீவபுரத்துல ‘க்ளீனிக்’ வைக்கலாமானு யோசிக்கறேன்.”
“அருணகிரி…! இந்த அகண்டகாவேரிக் கரைல போய் ஆஸ்பத்திரி ஆரம்பிக்கலாமானு நினைக்கறியே…! யாரு வருவான் வைத்தியம் பண்ணிக்க…?”
“இந்தக் காவேரி ஜலத்துல குளிக்கறவாளுக்கும், இந்தத் தண்ணியைக் குடிக்கற ஜனங்களுக்கும் ஆஸ்பத்திரி எதுக்கு…? டாக்டர் எதுக்கு…?” என்றார் மாதய்யா.
Along the shore of silver streaming Thames,
Whose rutty bank, the which his river hems,
Was painted all with variable flowers
Sweet Themes Run softly till I end my song
என்று Edmund Spenser, Prothalamion என்ற கவிதையில் தேம்ஸ் நதியின் தூய்மையை வர்ணிப்பதைப்போல இருந்தது, காவிரியைப் பற்றி மாதய்யாச் சொன்னது.
க்ளீனிக் திறந்தபோது போய்விட்டு வந்ததோடு சரி…
அதன் பிறகு, அந்தனூர் பள்ளிக்கூட வளாகத்தில் அவ்வப்பொழுது நடைபெறும், இலவச கண்சிகிச்சை, காது சிகிச்சை, அம்மை ஊசி… குடும்பக் கட்டுப்பாடு முகாம், காசநோய், தொழுநோய் விழிப்புணர்வு என்று நடத்தப்படும் முகாமில் டாக்டர் அருணகிரி கண்டிப்பாக இருப்பார்.
அங்கு சந்திப்பதோடு சரி.
அப்படி முகாமுக்கு வரும்போது அருணகிரிக்கும் அவரோடு வரும் டாக்டர்களுக்கும் மாதய்யா வீட்டில்தான் விருந்து.
******************************
ஒரு சமயம், காமாலை வந்து கஷ்டப்பட்டார் மாதய்யா.
கீழாநெல்லியோடு வேறு சில நாட்டுச் சரக்குகளைப் போட்டு கலுவத்தில் அரைத்துக்கொண்டிருந்தார்.
யார் மூலமோ விஷயம் கேள்விப்பட்டு, “மாதவா… மஞ்ச காமாலைனு கேள்விப்பட்டேனே…?”
கேட்டுக்கொண்டே வந்தார் டாக்டர் அருணகிரி.
“அருணா, தெரியாமத்தான் கேக்கறேன்… காமாலைக்கு கீழா நெல்லியை விட வேற என்னத்தை உங்க இங்க்லீஷ் வைத்தியத்துல வெச்சிருக்கேள்…!”
உரிமையோடு கிண்டலடித்துவிட்டு, அருணா… நான் உன் வீட்டுக்கு விருந்தாளியா வருவேனே தவிர வியாதியஸ்தனா வரவே மாட்டேன்…” என்று சவால் விட்டது இப்போது அவர் கண்முன் காட்சியானது.
***********************************
அருணா க்ளீனிக், ஜீவபுரம்
ஓட்டுக் கட்டடத்தில் இயங்கிய ஆஸ்பத்திரி முன் வண்டி நிறுத்தினான் கலியன்.
மாதய்யா கொடுத்த சீட்டை உள்ளே கொண்டு போய்க் கொடுத்தார் கம்பவுண்டர்.
சீட்டை பார்த்தார் டாக்டர் அருணகிரி.
கன்சல்டிங் அறையை விட்டு வெளியே வந்தார்.
**********************
டாக்டர் அருணகிரி…
காசித்தும்பை மாதிரி ஒரு ரோஸ் கலந்த நிறம்.
சதுரமாக வடித்துவிட்டு அதில் கண், காது, மூக்கு எல்லாவற்றையும் ஒட்டவைத்தாற் போன்ற முகம்.
நடு நெற்றியில் கீறியிருந்தத் திருச்சூர்ணம்.
குடைமிளாகாய்ப் போன்ற உப்பின மூக்கு, அகலமான கண்களை மேலும் குண்டுக் குண்டாகக் காட்டியது.
அவர் அணிந்திருந்த தடித்த பிரேம் மூக்குக் கண்ணாடி.
‘பச்சையாக’ முகச்சவரம் செய்யப்பட்ட கன்னத்தில், தெளிவாய், எடுப்பாய்த் தெரிந்த அம்மைத் தழும்புகள்.
காதோரம் சிலிர்த்துக்கொண்டு நிற்கும் ஓரிரு வெள்ளைக் கம்பிகள்.
தும்பைப் பூவாய் வெளுத்த தலை.
தலைமுடிக்கு மேட்சாய் போட்டுக்கொண்டிருந்த வெள்ளைச் சட்டை.
பூண்டுத் தோல் போல், மிருதுவாய், நீராவிபோல் கலங்கலாய் தெரிந்த உள் முண்டா பனியன்.
அசப்பில் பார்த்தால் ஓவியமேதை கோபுலு போல இருப்பார்.
********************************
மாதய்யாவுக்கும், டாக்டர் அருணகிரிக்கும் சம வயதுதான், என்றாலும், மாதய்யாவிடம் இருக்கும் உரம், கட்டு, கம்பீரம் இதெல்லாம் அவரிடம் இல்லை.
அவர் நடந்து வரும்போது முதுகுக் கூன் போட்டது.
அதிகமாய் நடக்காமல் கொள்ளாமல், எப்போதும் உட்கார்ந்திருப்பதால் அந்தக் கூன் விழுந்திருக்கலாம்.
போட்டிருக்கும் மெல்லிய சட்டைக்குச் சற்றும் பொறுத்தமில்லாத வகையில் முரட்டுப் பேண்ட் அணிந்திருந்தார்.
“மாதவா… என்னாச்சு உனக்கு…?” கேட்டுக்கொண்டே கையை நீட்டினார்.
அடிக்கடி சோப்பு போட்டு அலம்பித் துடைத்துக்கொள்வதால், பசையற்ற ஒரு வெளுப்பு அந்தக் கையில் பளிச்சிட்டது.
விரல்களின் பின்னால் சிலிர்த்துத் துருத்திக்கொண்டு நிற்கும் முடிகளுக்கு நடுவே நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட மோதிரம் தகதகத்தது.
போர்த்தியிருந்த துணியை விலக்கிக் காலைக் காட்டினார் மாதய்யா.
அபரிமிதமான அந்த வீக்கத்தைப் பார்த்துப் பதறிவிட்டார் டாக்டர் அருணகிரி.
நெற்றியில் கை வைத்து, “நெருப்பாய்க் கொதிக்கறதே மாது..” பதறினார்
காலில் இறுகிப் போயிருந்த பற்றைத் துடைத்தார்.
அழுத்தித் துடைக்கும்போது வலியால் துடித்தார் மாதய்யா.
********************
“அடிபட்ட உடனே எனக்குச் சொல்லியிருந்தா நானே வந்திருப்பேனே மாது…” டாக்டரின் பேச்சில் வாஞ்சை தெரிந்தது.
“புளிப்பத்து தொடர்ந்து போட்டாலே ரெண்டு மூணு நாள்ல வீக்கம் வடிஞ்சிருக்கும். இந்தக் கலியன்தான் கம்பல் பண்ணி இங்கே அழைச்சிண்டு வந்துட்டான்…”
“மாதவா… புளி, மல்லி, மிளகாய், வெந்தயம்… இதெல்லாம் சமையலுக்கு இருக்கட்டும். நிறைய இருந்துதுன்னா எனக்கு அனுப்பிவிடேன்…” நகைச்சுவைக் கலந்தார் டாக்டர்.
அழுத்திக் கட்டுப்போட்டபோது பொறுத்துக்கொண்டு, கண்களை மூடியபடி அமைதியாக இருந்தாலும் வலியின் மிகுதி முகச் சுருக்கங்களில் அப்பட்டமாய்த் தெரிந்தது.
*****************
இது எலும்பு முறிவு மாது. புத்தூர் கட்டுதான் சரியா வரும்.”
“…………….”
மாவுக் கட்டுப் (புத்தூர் கட்டு) போட்டு முடித்தார்.
“ரெண்டு மாசமாவது ‘பெட் ரெஸ்ட்’ல இருக்கணும் மாது. இல்லேன்னா எலும்பு சேராது.”
“எனக்குத் தெரிஞ்சி சாமான்யத்துல முறியவே முறியாத குதிகால் எலும்பை முறிச்சிண்ட ஒரே மனுசன் நீயாத்தான் இருப்பே…” சிரித்தார் டாக்டர்.
“எதுக்குச் சொல்றேன்னா… “குதிகால் ‘டோ’ எலும்புக்கு அப்டி ஒரு அமைப்பு . அது எப்படி சீக்கிரம் முறியாதோ, அதே போலத்தான் முறிஞ்சா சீக்கிரம் சேரவும் சேராது…”
ஒரு லெக்சரே கொடுத்தார் டாக்டர்.
“சரிங்க டாக்டர்…! உங்க உத்தரவுப்படியே…!” என்று மாதய்யா சொல்ல நண்பர்கள் இருவரும் வாய்விட்டுச் சிரித்தார்கள்.
“நீ ஒண்ணும் சிரமப்படவேண்டாம். பீரியாடிக்கலா, நான் வந்து பாத்துக்கறேன். அலையாம ரெஸ்ட் எடுப்பியா?…, இல்லே…, ஆஸ்பத்திரி வார்டுலயே ரெண்டு மாசம் அட்மிஷன் போட்ரவா…?” அருணகிரி நட்பு முறையில் பேசினார்.
வியாதி காண்டம் முடிந்து, உபய குசலம் தொடங்கியது.
************************
“அருணா.. உன் புள்ளாண்டான் இப்போ …”
“காவேரி இல்லாத இடத்துல என்னை க்ளீனிக் திறக்கச் சொன்னே நீ…, என் புள்ளாண்டான் விஷயத்துல பலிச்சிடுத்து.”
“…………….”
“அவன் ‘யு.எஸ்’ ல செட்டில் ஆயிட்டான். இன்னொண்ணு தெரியுமோ… அவன் பெண்டாட்டியும் டாக்டர்தான்.”
“அப்டியா.. ரொம்ப சந்தோஷம்…!”
“உன் புள்ளாண்டான் கல்யாணத்துக்கு , அழைக்கவே இல்லையே நீ…?”
“அவன் என்னையே அழைக்கலையே… ரிஜிஸ்தர் பண்ணிண்டு வந்து நிக்கறான். அட்சதை போட்டேன்…” குரல் உடைந்தது.
“எப்படியோ, மனுஷாளை சித்ரவதைப் படுத்தணும்னு குடும்பத்தோட ‘டாக்டர் வேஷம்’ கட்டிண்டு கிளம்பிட்டேள்…” சொல்லிச் சிரித்தார் மாதய்யா.
**********************************
அடிக்கடி அருணகிரி டாக்டர் வீட்டிற்கு வந்து பார்ப்பதும், கட்டு மாற்றுவதும், காட்லீவர் ஆயில் போட்டு உருவி விடுவதுமாய் கொஞ்ச நாள் ஓடியது.
அடுத்த கட்டம், மசாஜ் செய்துவிட்டு க்ளாத் பாண்டேஜ் சுற்றிவிட்டு எக்ஸசைஸ் செய்யச் சொல்லி கொஞ்ச நாள் ஓடியது.
‘கால்கொடுத்த தெய்வமாக’ ஆகிப் போனார் அருணகிரி.
*************************
குடும்ப விஷயங்களை ஒவ்வொரு சந்திப்புலும் நிறையப் பகிர்ந்து கொண்டார்கள்.
“மாதவா…! எங்கப்பா விட்டுப் போன பிதிரார்ஜித சொத்துக்கள் போக, சுய சம்பாத்யத்தில் வாங்கினது எல்லாத்தையும் வித்துட்டேன்.”
“…………….”
“அந்தக் காசுல, திருவல்லிக்கேணீல ஒரு பழைய வீட்டை வாங்கி, இடிச்சிக் கட்டி, மகன் பேருக்கு உயில் எழுதிட்டேன்.”
“…………….”
“பிதிரார்ஜித சொத்து விற்க, புள்ளாண்டான் கையெழுத்துப் போடணும். அவனண்ட கையெழுத்துக் கேட்டு வாங்கி அதுகளை செட்டில் பண்ணணும்னு தோணலை எனக்கு.”
“…………….”
“எனக்குப் பிறகு அவன் அதை என்னமோ செஞ்சிக்கட்டும். அவன் முகத்துல முழிக்கக் கூட பிடிக்கலை எனக்கு.”
“பெத்த கடமை. மெட்ராஸ் சிட்டீல அவன் பேர்ல, ஒரு வீடு வாங்கி வெச்சுட்டேன். வேணும்னா வெச்சிக்கட்டும், ஏதோ பண்ணிண்டு போகட்டும்…”
‘அருணகிரியின் சிரித்த முகத்திற்குப் பின், இவ்வளவு கசப்பா…! இத்தனை காரமா…! இந்த அளவுக்குச் சோகமா…!’
ஆச்சர்யமாய் இருந்தது மாதய்யாவுக்கு.
************************
மாதய்யாவும் ஒரு முடிவுக்கு வந்தார்.
“சேஷா, நீ செஞ்ச ஏற்பாட்டையே எனக்கும் செஞ்சிக் கொடேன்…” என்றார்.
அதன் பிறகு காதும் காதும் வைத்தாற்போல் காரியங்கள் நடந்தன.
நேற்று முன்தினம் வந்தபோதுகூட சேஷன் மாதய்யாவிடமிருந்து சில பத்திரங்களில் கையெழுத்துகளும், குறிப்பிட்ட தொகையும் வாங்கிக்கொண்டுதான் போனார்.
‘இன்னும் கொஞ்சநாள் நடக்காம வீட்டோட இருக்கட்டுமே…’ என்று எண்ணியோ என்னமோ…
“மாது… நடக்க முடியறதேனு ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணிக்காதே… ரெஸ்ட் எடு… ரெஸ்ட் எடு… ரெஸ்ட் எடு….” என்று பலமுறை சொல்லிவிட்டுத்தான் போனார்.
கோல் ஊன்றாமல் நடக்க முடிகிறது என்றாலும், கொஞ்ச தூரம் நடந்தாலே கால் வீங்குகிறது.
***************************
“அய்யா… நம்ம பட்டாளத்தாரு பேரன் மலேயாவுலேந்து வந்துருக்கான்.” என்றான் கலியன்.
“அப்படியா…”
“கலியாணம் கட்டப் போறானான். வீட்டை செப்பனிடறான். படுக்கை அறையை சுத்தமாப் பிரிச்சி எடுத்துட்டு, ‘பனங்கிளாஸ்’ போட்டு ஒட்டியிருக்கான்யா…”
“அதுக்கென்ன இப்போ…” என்றார் சுவாரஸ்யமில்லாமல்.
“வூடு பிரிச்ச உத்தரம், குத்துக்கால், குறுக்குக் குத்துக் கட்டை, வளை, சரம், மோட்டுவளைச் சரம், அனந்தரம், காக்காக் கால், நாட்டு ஓடுங்க… கிழங்கு மாதிரி கருங்கல் தண்டியம் எல்லாம் எறக்கி வெச்சிருக்காருங்க.”
“……………..”
“ஒரு வெலை பேசி கொண்டாந்துரலாம்யா. நம்ம வூட்ல போனது வந்தது கை பாத்து ஓடு மாத்தணும்னு சொல்லிக்கிட்டே இருக்கீங்களா… வாங்கிப் போட்டா ஒபயோகமா இருக்கும்.”
வெளியே செல்லமுடியாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கிற இந்த நேரத்தில், இது சரியான யோசனையாகப் பட்டது.
பட்டாளத்தார் வீட்டிலிருந்து வீடு பிரித்த சரக்கு எல்லாவற்றையும் பாரவண்டியில் கொண்டு வந்து இறக்கிவிட்டான் கலியன்.
***********************
ஆசாரி அழகுமுத்து வந்தான்.
போனது வந்தது எல்லாவற்றையும் முட்டுக்கொடுத்துப் பிரித்து புதுசு மாற்றினான்.
கூர் போன, காதறுந்த மரச்சட்டங்களையெல்லாம் பிரித்து மாற்றினான்.
கூடவே கொத்தனார் திரிசங்கு ஆசாரி வேலைக்குக்குத் தோதாக, உத்தரத்துப் புருவம் கொத்திப் பூசினான்.
மரத்தண்டியத்தை பிடுங்கி எடுத்துவிட்டு கருங்கல் தண்டியம் செருகினான்.
உப்பு அலர் அடித்த சுவற்றின் அடிப்பகுதியைக் கொத்திப் பூசினான்.
காக்கா வெடிப்பு, பொக்கை போரை, இண்டு இடுக்கு, எலிப்பொந்து, பெருச்சாளி வளை என இடிப்பதும், அள்ளுவதும், கிடிப்பதும், திமிசு தட்டுவதும், பூசுவதுமாக ஒரு வாரம் வேலை ஆசாரியும் கொத்தனாருமாக வீட்டு வேலையில் மும்மரமாக இருந்தார்கள்.
தூண்களின் அடிபாகத்தில் இருந்த சிமெண்ட் கட்டைகளைச் சரிபார்த்தாகிவிட்டது.
தூணின் மேல் நீண்டு ஓடிய சரமச்சுப் பலகைகளும் போனது வந்தது பார்த்து செப்பனிடப்பட்டன.
*******************
ரெங்கராஜூ விடி கருக்கலிலேயே ஓடு மாற்ற வந்துவிட்டான்.
இரண்டடி அகலத்துக்கு ஓடு இறக்கி வைத்துவிட்டு, அடுத்த நாலடி அகலத்துக்கு ஓட்டைப் புரட்டி வைத்தாகிவிட்டது.
கட்டை விளக்குமாறால் குறுக்கும் நெடுக்குமாகக் கூட்டித் தள்ளிவிட்டான்.
செல்லரித்த பிளாச்சுகளையும், உளுத்துக்கொட்டிய பிளாச்சுகளையும் பிய்த்து எறிந்துவிட்டு புதுப்பிளாச்சுகளை வைத்து பிளாச்சி ஆணிகள் தைத்து நிறுத்தினான்.
சாத்து ரீப்பர் இருந்த பகுதிகளில் கைப் பார்த்து புது ரீப்பர் மாற்றினான்.
வாய்பட்டையை எதிர் எதிர் வசத்தில் தைத்துச் சரிக் கட்டினான்.
நாட்டு ஓட்டை நெடுக்காய் உடைத்துச் சின்னச்சின்ன வாழைக்காய் வளைவுகளை நிமிர்த்தினான்.
வெற்றிலை போல நெருக்கமாக நிமிர்த்தியும் கவிழ்த்தும் மிக நேர்த்தியாக ஓடு பரத்தினான். ரெங்கராஜன்.
சமையலரையில் புகை வெளியேற வசதியாக அடுப்புக்கு மேல் குறுக்குச் சட்டங்கள் கொடுத்து ஓடுகளை தூக்கி அடுக்கினான்.
வெளிச்சம் உள்ளே வரத் தேவைப்படும் இடங்களிலெல்லாம் கண்ணாடி வைத்து லாகவமாக ஓடு மாற்றினான்.
கூடல்வாயில் தோணித்தகரம் பொருத்தப்பட்டு, ஓடுகள் நழுவாதிருக்க ஆங்காங்கே சிமிண்ட் சாந்தும் மெழுகியாகிவிட்டது.
வீட்டின் நடு நாயகமான உச்சி மோட்டில் பொருத்தியிருந்த இடிதாங்கியை கூர் பார்த்து மீண்டும் பொருத்தியாயிற்று.
நாட்டு ஓட்டு வீட்டின் குளிச்சியே அலாதி. கோடையில் வெயிலை உள்ளே வாங்கி விடாது குளிர்ச்சியாய் வைத்திருக்கும். மழை பொழிந்துவிட்டாலோ, ஏசி ஆன் செய்ததைப் போல ஒரு குளிர்ச்சி வீடு பூராவும் பரவும்.
***********************
பழைய ஓடு கிடைக்காததால் இரண்டு வண்டி புது ஓடு இறக்கினார்கள்.
புது ஓடுகள் பளிச்சென்று நல்ல சிகப்பாகவும்…
பாசி படித்த பழைய ஓடு நிறம் மங்கியும்…
ஏற்கெனவே அடிவரிசையில் நிமிர்ந்து கிடந்த ஓடு அரைகுரைச் சிகப்புடன் கவிழ்க்கப்பட்டும்…
மாறி மாறி உமிழும் வண்ணக்கலவை, கண்களுக்குப் புது அனுபவமாய் மிளிர்ந்தன.
‘காட்லீவர் ஆயிலைத் தடவிக்கொண்டு, அதிக அழுத்தம் கொடுக்காமல் அங்கே இங்கே உட்கார்ந்தபடி கிட்டத்தட்ட இருபது நாட்கள், ஆசாரிவேலை, கொத்தனார்பணி, ஓடுமாற்றுதல் இப்படி ஓடிவிட்டது. நேற்றுதான் வேலை முடிந்து வீடு பூராவும் அலசி விட்டிருந்தார்கள்.
வீட்டுக்குள் தட்டு முட்டுச் சாமான் சட்ஜாக்களை இன்னும் அந்தந்த இடங்களில் வைக்கவில்லை இன்னும்.
வீடு ‘ஹா……’வென்றிருந்த்து.
சொன்னதைத் திரும்பச் சொல்லி, எதிரொலித்தது.
வாசல் சாரமனையில் “அப்பாடா…” என்று உட்கார்ந்து கொண்டார் மாதய்யா.
எதேதோ யோசித்துக் கொண்டிருந்தார்.
************************
‘ எப்படியும் இன்னும் ஒரு வாரம் நடவு வேலை இருக்கும். நடவு முடிவதற்குள் வயலுக்கு ஒரு முறையாவது போகவேண்டும்…” என்றெல்லாம் எண்ணிக்கொண்டு உட்கார்ந்திருந்தவருக்கு
‘துரைராமன், திடீர்னு குடும்பத்தோடு வருவான், இப்போதே வயலுக்குக் போகும் நிர்பந்தம் வரப்போகுது..’ என்றெல்லாம் நினைத்துக்கூட பார்க்கவில்லை.’
“வா…” துரைராமனை வரவேற்றாள் குந்தலாம்பாள்.
காலில் கட்டுடன் உட்கார்ந்திருக்கும் மாதய்யாவை, “என்ன…? ஏது…?” என்று ஒரு வார்த்தைக் கேட்கவில்லை அவன்.
நுழைந்தும் நுழையாததுமாய் “ நெலபுலங்கள் சிலதெல்லாம் கிரயம் பண்ணிட்டாராமே உன் வீட்டுக்காரர்…?”
மாதய்யா காதில் விழவேண்டும் என்பதற்காகவே, அம்மாவிடம் குரல் உயர்த்திக் கேட்டான்.
மாதய்யருக்குக் கொலைவெறி வந்தது. ஏற்கெனவே மனதில் எடுத்த முடிவு இப்போது மேலும் உறுதியானது.
எழுந்து அமைதியாய், கால் தாங்கியபடி உள்ளே போனார்.
*******************
தனது ட்ரங்க் பெட்டியிலிருந்து கொஞ்சம் டிம்மி பேப்பர்கள், கிளிப் பொருத்தின அட்டை, பேனா, மைப்புட்டி அனைத்தையும் எடுத்துக்கொண்டார்.
கால் வலி ‘விண்… விண்… விண்… விண்… விண்…’ணெனத் தெரித்தது.
மாட்டுத்தொழுவம் சென்றார்.
அசைப் போட்டுக்கொண்டுப் படுத்திருந்த வீரன் காளையை எழுப்பினார்.
வண்டியைக் கட்டிக்கொண்டு, மாதய்யாப் புறப்பட்டபோது, குந்தலாம்பாளுக்கு ‘அவரைப் போகவிடக்கூடாது..’ என்பதுதான் எண்ணம்.
ஆனால் ‘அவர் போவதுதான் நல்லது’ என்பது போல் அவரைப் பார்த்துக்கொண்டே நின்றாள்.
தொடரும்…
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.