புதுச்சேரி : புதுச்சேரியில் பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வி, சிறுதொழில் கடன் வழங்குவதற்கு 5 கோடி ரூபாய் ஒதுக்கி தர வேண்டும் என, மத்திய சமூக நீதி அமைச்சர் வீரேந்திரகுமாரிடம், அமைச்சர் தேனீ ஜெயக்குமார் மனு அளித்தார்.டில்லியில் முகாமிட்டுள்ள வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார், மத்திய அமைச்சர்களை சந்தித்து தனது துறை தொடர்பான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்,
நிதி ஒதுக்கீட்டினை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.இந்நிலையில், மத்திய சமூக நீதி அமைச்சர் வீரேந்திரகுமாரை நேற்று சந்தித்து பேசினார். அப்போது, புதுச்சேரி பிற்படுத்தப்பட்டோர் துறைக்கு நிதி ஒதுக்கீடு சம்பந்தமாக மனு அளித்தார்.டில்லியில் உள்ள தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மேம்பாட்டுக் கழகம், புதுச்சேரி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கழகத்திற்கு கல்விக் கடன், காலக் கடன், சிறுதொழில் கடன் வழங்குவதற்கு நடப்பு நிதியாண்டுக்கு ரூ.1 கோடி ஒதுக்கி தந்துள்ளது.
இந்த தொகை போதுமானதாக இல்லை. இதனை ரூ.5 கோடியாக உயர்த்தி கொடுத்தால் மாநிலத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக அளவில் கல்விக் கடன், சிறு தொழில் கடன் வழங்க முடியும் என கோரிக்கை வைத்தார். அமைச்சரின் தனிச் செயலாளர் மனோகரன் உடனிருந்தார்.புதுச்சேரி மாநிலத்திற்கு 5 கோடி ஒதுக்க பரிசீலனை செய்வதாக, மத்திய சமூக நீதி அமைச்சர் வீரேந்திரகுமார் உறுதியளித்தார்.
Advertisement