புதுடெல்லி: காற்று மாசினால் இந்தியர்களின் சராசரி ஆயுள் 5 ஆண்டுகள் குறையும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியா பாகிஸ்தான் வங்கதேசம் நேபாளம் ஆகிய தெற்காசிய நாடுகளில்தான் காற்று மாசின் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. இந்தியாவின் கங்கை சமவெளி பகுதிதான் உலகிலேயே மிக மோசமான மாசடைந்த பகுதியாக உள்ளது. 1998க்குப் பின் இந்தியாவில் சராசரி காற்று மாசு ஆண்டுக்கு 61.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
சர்வதேச ஒப்பீடுகளை கணக்கில் கொள்ளும் போதும் இந்தியாவின் அதிக மக்கள் தொகையும் காற்று மாசு அதிக அளவில் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டின்படி இந்தியாவில் டில்லி பீஹார் உத்தரபிரதேச மாநிலங்களில்தான் மிக மோசமான காற்று மாசு பிரச்னை உள்ளது.
தற்போதைய நிலை தொடர்ந்தால் டில்லி மக்களின் ஆயுள் 10.1 ஆண்டுகளும் உத்தர பிரதேச மக்களின் ஆயுள் 8.9 ஆண்டுகளும் பீஹார் மக்களின் ஆயுள் 7.9 ஆண்டுகளும் குறையும் என்று அமெரிக்காவின் சிகாகோ பல்கலையின் ஏர் குவாலிட்டி லைப் இன்டெக் அமைப்பு காற்றின் தரம் மனித வாழ்வு ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பாக விரிவான ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் காற்று மாசினால் ஆயுள் காலம் குறையும் என்ற விவகாரத்தில் விரிவான விளக்கம் அளிக்ககோரி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Advertisement