மும்பை: குஜராத் கலவர வழக்கில் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து இந்த வழக்கில் மனுதாரர்களில் ஒருவராக இருந்த சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடால்வட் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பில் 58 கரசேவகர்கள் கொல்லப்பட்டனர். அதன்பின்னர் கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள குல்பர்க் சொசைட்டியில் கலவரம் ஏற்பட்டது. அதில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இசான் ஜாப்ரி உட்பட 69 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு விசாரணை குழு (எஸ்ஐடி) தீவிர விசாரணை நடத்தியது.
இந்த வழக்கில் அப்போதைய குஜராத் முதல்வர் மோடி மற்றும் உயரதிகாரிகள் பலர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த எஸ்ஐடி, அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி உட்பட 64 பேருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி வழக்கை முடித்துக் கொண்டது. இதை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் முன்னாள் எம்.பி. இஷான் ஜாப்ரியின் மனைவி ஜகியா ஜாப்ரி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து, குஜராத் கலவர வழக்கை எஸ்ஐடி சரியாக விசாரணை நடத்தவில்லை. இந்தக் கலவரத்தில் மிகப் பெரிய சதி உள்ளது. இதுகுறித்து மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் ஜகியா ஜாப்ரி மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு நேற்றுமுன்தினம் விசாரித்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘‘எஸ்ஐடி விசாரணை முடிவுக்கு எதிராக ஜகியா தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு தகுதியற்றது’’ என்று கூறி தள்ளுபடி செய்தனர்.
தள்ளுபடி செய்யப்பட்ட ஒருநாளுக்குப் பிறகு, இந்த வழக்கில் ஜகியா ஜாப்ரிக்கு உதவியாக இருந்த சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட் மற்றும் குஜராத்தின் முன்னாள் டி.ஜி.பி ஆர்.பி.ஸ்ரீகுமார் ஆகியோரை அகமதாபாத் குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். நீதிமன்ற உத்தரவில் சொல்லப்பட்டுள்ள தகவலின்படி, குற்றவியல் சதி, மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதே வழக்கில் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் என்பவரும் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே சிறையில் உள்ளார். அதேநேரம், டீஸ்டா செடல்வாட் மும்பையில் வைத்து கைது செய்யப்பட்டார்.
முன்னதாக, நேற்று மோடிக்கு எதிரான தீர்ப்பு குறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “எதிர்க்கட்சிகள், அரசியல் சார்புடைய பத்திரிகையாளர்கள், சில என்ஜிஓக்கள் என கூட்டு சேர்ந்து மோடிக்கு எதிராக பேசினர். அவர்களின் பொய் வேகமாக மோடிக்கு எதிராக கட்டமைக்கப்பட்டது. அந்த கட்டமைப்பை உண்மை என சிலரும் நம்பத் தொடங்கினர். ஆனாலும் அவர் சோர்ந்து போகவில்லை.
சமூக செயற்பாட்டாளராக அறியப்படும் டீஸ்டா செடால்வட் பற்றி எல்லோருக்கும் இப்போது தெரியவந்துள்ளது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அவரைத் தூண்டிவிட்டது. அவருக்கு துணையாக இருந்தது. அவர் பாஜகவையும் மோடியையும் குற்றவாளி ஆக்கினார். ஆனால், இன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பால் அந்த போலி என்ஜிஓக்களின் உண்மை முகம் அம்பலமாகியுள்ளது” என்று பேசியிருந்தார். அவர் பேசிய சில மணிநேரங்களில் டீஸ்டா செடால்வட் கைது செய்யப்பட்டுள்ளார்.