புதுடெல்லி: குஜராத் கலவர வழக்கில் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி பிரதமர் மோடியை புகழ்ந்துள்ளார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்தப் பேட்டியில், “பிரதமர் நரேந்திர மோடி ஓர் உயர்ந்த தலைவர். அவர் மீது குஜராத் கலவர வழக்கு 19 ஆண்டுகள் நடந்தன. அவர் அத்தனை காலமும் பொறுமையாகவே இருந்தார். அந்த வழக்கு நிலுவையில் இருந்த காலத்தில் அவர் வழக்கு தொடர்பாக எதுவுமே விமர்சிக்கவில்லை. அவருடைய வேதனைகளை நான் அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். கடவுள் சிவனைப் போல் சோதனைகளை தாங்கினார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பலரும் மோடிக்கு எதிராக அவதூறு பேசினர். எதிர்க்கட்சிகள், அரசியல் சார்புடைய பத்திரிகையாளர்கள், சில என்ஜிஓக்கள் என கூட்டு சேர்ந்து மோடிக்கு எதிராக பேசினர். அவர்களின் பொய் வேகமாக மோடிக்கு எதிராக கட்டமைக்கப்பட்டது. அந்த கட்டமைப்பை உண்மை என சிலரும் நம்பத் தொடங்கினர். ஆனாலும் அவர் சோர்ந்து போகவில்லை.
சமூக செயற்பாட்டாளராக அறியப்படும் டீஸ்டா செடால்வட் பற்றி எல்லோருக்கும் இப்போது தெரியவந்துள்ளது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அவரைத் தூண்டிவிட்டது. அவருக்கு துணையாக இருந்தது. அவர் பாஜகவையும் மோடியையும் குற்றவாளி ஆக்கினார். ஆனால், இன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பால் அந்த போலி என்ஜிஓக்களின் உண்மை முகம் அம்பலமாகியுள்ளது. குஜராத் கலவரத்தில் காங்கிரஸ் தலைவர் ஈஷான் ஜாஃப்ரி உயிரிழந்தார். அவரது மனைவி ஜாகியா ஜாஃப்ரி வேறு ஒருவருடைய பேச்சின்படி இயங்கியதும் நிரூபணமாகியுள்ளது.
19 ஆண்டு கால வழக்கை சந்தித்த மோடி, எந்தவித ஆர்ப்பாட்டமும் செய்யவில்லை. போராட்டமும் நடத்தவில்லை. சிறப்பு புலணாய்வு விசாரணைகளுக்கு ஒத்துழைத்தார். எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் யாரும் அவருக்கு ஆதரவாக தர்ணா செய்யவில்லை. ஜனநாயக நாட்டில் அரசியல் சாசனத்திற்கு மரியாதை தருவதில் பிரதமர் நரேந்திர மோடி ஓர் உதாரணம்.
ஆனால் இன்று ராகுல் காந்தி விசாரணைக்கு இத்தனை எதிர்ப்புகள் அக்கட்சியினரால் எழுப்பப்படுகின்றன” என்று கூறினார்.
அவசரநிலை… காங்கிரஸ் மீது சாடல்: இன்று அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட 47வது நினைவுநாள். இதனை ஒட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், 1975ல் இதே நாளில் காங்கிரஸ் நாட்டு மக்களுக்கான அரசியல் சாசன உரிமைகளைப் பறித்தது.
அடக்குமுறைகளில் அந்நிய ஆட்சியை மிஞ்சியது. அவசரநிலைக்கு எதிராகப் போராடி நாட்டில் ஜனநாயகத்தை மீட்டெடுத்த தலைவர்களுக்காக நான் இன்று பிரார்த்தனை செய்து கொள்கிறேன். அவர்கள்தான் சர்வாதிகாரி மனம்ப்பான்மையை தோற்கடித்தனர் என்று பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.