புதுடெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு (64), தனது வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார். பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உடன் இருந்தனர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்க ஜூலை 18-ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இந்தத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டார். அவர் தனது வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்தார். நாடாளுமன்ற வளாகத்தில் தேர்தல் அதிகாரி பி.சி.மோடியிடம் அவர் வேட்புமனுவை சமர்ப்பித்தார்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உடனிருந்தனர்.
முர்முவின் வேட்பு மனுவை நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தயாரித்தார். குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை 50 பேர் முன்மொழிய வேண்டும். 50 பேர் வழிமொழிய வேண்டும். இதன்படி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் முர்முவை முன்மொழிந்தனர். பாஜக தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் 50 பேர் வழிமொழிந்தனர்.
முன்னதாக, தேசத் தந்தை மகாத்மா காந்தி, அம்பேத்கர், பிர்ஸா முண்டா ஆகியோரின் சிலைகளுக்கு திரவுபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சந்தாலி பழங்குடி தலைவர்
ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டம் பைதபோசி கிராமத்தில் 1958-ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதி திரவுபதி முர்மு பிறந்தார். இவர் சந்தாலி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். முதலில் ஆசிரியராக பணியை தொடங்கிய முர்மு, பின்னர் ஒடிசா அரசின் நீர்வளத் துறையில் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தார். அதன்பிறகு அரசு பணியை ராஜினாமா செய்துவிட்டுமக்கள் பணிக்காக அரசியலில் ஈடுபட்டார்.
பாஜக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் ஒடிசாவின் ரைராங்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் இருமுறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். பிஜு ஜனதா தளம், பாஜக கூட்டணி ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்தார். கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். 2021 ஜூலை 12-ம் தேதி வரை அவர் பதவியில் நீடித்தார்.
முர்முவின் தனிப்பட்ட வாழ்க்கை சோகம் நிறைந்தது. அவரது கணவர் ஷியாம் சரண் முர்மு மாரடைப்பால் உயிரிழந்தார். கடந்த 2009-ம் ஆண்டில் அவரது மூத்த மகன் மர்மமான முறையில் உயிரிழந்தார். 2012-ம் ஆண்டில் அவரது 2-வது மகன் விபத்தில் உயிரிழந்தார். முர்முவின் ஒரே மகள் இதிஸ்ரீ, புவனேஸ்வரத்தில் உள்ள வங்கியில் பணியாற்றி வருகிறார்.
ஆதரவு பெருகுகிறது
பாஜக கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டவுடன், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் முழு ஆதரவை தெரிவித்தார். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டோரும் அவருக்கு ஆதரவு அளித்துள்ளனர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளும் முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இதனிடையே, எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆதரவையும் திரவுபதி முர்மு கோரி வருகிறார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோரை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்ட முர்மு அவர்களின் ஆதரவை கோரினார்.
இதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்ட முர்மு திட்டமிட்டுள்ளார். அதற்கான பிரச்சார திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. வரும் ஜூலை 4-ம் தேதி அவர் ஆந்திராவுக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் நடைமுறை
மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் 776 பேர், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 4,120 எம்எல்ஏக்கள் என 4,896 பேர் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் தகுதியை பெற்றுள்ளனர்.
எம்.பி., எம்எல்ஏக்கள் ஒவ்வொருவருக்கும் வாக்கு மதிப்பு உண்டு. அந்த வகையில் எம்.பி.க்கள், எம்எல்ஏக்களின் மொத்த வாக்கு மதிப்பு 10,86,431 ஆக உள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற மொத்த வாக்கு மதிப்பில், 50 சதவீதத்துக்கு அதிகமாக பெற வேண்டும். பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். அவர் வெற்றி பெற்றால் நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெறுவார்.
எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்
இதனிடையே, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா (84), வரும் 27-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய ஜூன் 29-ம் தேதி கடைசி நாளாகும். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 21-ம் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். நாட்டின் புதிய குடியரசுத் தலைவர் ஜூலை 25-ம் தேதி பதவியேற்க உள்ளார்.