குவாஹாட்டியில் தங்கியிருக்கும் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் – நட்சத்திர ஓட்டலில் ஒரு நாள் செலவு ரூ.8 லட்சம்

குவாஹாட்டி: அசாம் மாநிலம் குவாஹாட்டி நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருக்கும் சிவசேனா மற்றும் சுயேச்சை எம்.ஏல்.ஏ.க்களுக்கான ஒரு வார கட்டணம் ரூ.56 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை முறித்து, பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என சிவசேன கட்சி எம்.எல்.ஏ.க்கள், மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் சுமார் 40 பேர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இவர்கள் முதலில் குஜராத்தின் சூரத் நகருக்கும், பின்னர் அசாம் மாநிலம் குவாஹாட்டிக்கு தனி விமானத்தில் சென்றனர். இவர்களுக்காக குவாஹாட்டியில் உள்ள ரேடிசன் ப்ளூ என்ற நட்சத்திர ஓட்டலில் 70 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஓட்டலில் மொத்தம் 196 அறைகள் உள்ளன.

இங்கு வேறு யாரும் புதிதாக அறைகள் முன்பதிவு செய்ய ஓட்டல் நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இங்குள்ள உணவு விடுதியிலும், ஓட்டலில் தங்கியிருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

உணவு மற்றும் இதர சேவைகள் உட்பட இந்த 70 அறைகளுக்கு ஒரு நாள் கட்டணம் ரூ.8 லட்சம். ஒருவார காலத்துக்கு இந்த அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதால், நட்சத்திர ஓட்டலுக்கான கட்டணம் ரூ.56 லட்சம் என மதிப்பிடப்பட் டுள்ளது. இந்த எம்.எல்.ஏ.க்களை மும்பையிலிருந்து குஜராத்துக்கும் பின்னர் அசாம் மாநிலத்துக்கும் தனி விமானங்களில் அழைத்து சென்றதற்கான செலவு விவரங்கள் தெரியவில்லை.

தகுதி நீக்கம் செய்ய கோரிக்கை

போர்க்கொடி தூக்கிய சிவசேனா கட்சி எம். எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி சபாநாயகரிடம், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியினர் மனு கொடுத்துள்ளனர்.

அதில், ‘‘கட்சி தாவல் குற்றம் புரிந்த எம்.எல்.ஏக்கள், கட்சிக்குள் பிளவையும் ஏற்படுத்தவும், ஆட்சியை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதேபோன்ற நிலை கர்நாடகாவில் ஏற்பட்டபோது, அங்கு போர்க்கொடி தூக்கிய எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது சரி என உச்ச நீதிமன்றம் கூறியது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மகாவிகாஸ் அகாதி அரசை நிலைகுலைய செய்யவும், சிவசேனா கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தவும் 16 எம்.எல்.ஏ.க்கள் இதர எம்.எல்.ஏ.க்களுடன் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் கட்சி உத்தரவுகள் மற்றும் கொள்கைக்கு எதிராக செயல்படுகின்றனர். பா.ஜ.க உத்தரவுப்படி செயல்படும் இந்த எம்.எல்.ஏ.க்கள் சிவசேனா கட்சியின் உறுப்பினர் பதவியை தாங்களாக கைவிடுகின்றனர். இதனால் இவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த கட்சியும் தொடர்பில் இல்லை

எனது தலைமையிலான எம்.எல்.ஏ.க்களுக்கு மிக சக்திவாய்ந்த தேசிய கட்சி ஆதரவளிப்பதாக மகாராஷ்டிர அமைச்சரும், சிவசேனா கட்சியின் அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே நேற்று முன்தினம் கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து பேட்டியளித்த தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், ஏக்நாத் ஷிண்டே குறிப்பிடுவது பா.ஜ.க.வை தவிர வேறு எந்த கட்சியாக இருக்க முடியும்? என்றார்.

இந்நிலையில் உங்களுக்கு ஆதரவு தெரிவிப்பது பாரதிய ஜனதா கட்சியா என ஏக்நாத் ஷிண்டேவிடம் நிருபர்கள் நேற்று கேட்டபோது, ‘‘மிகப் பெரிய சக்தி என்று நான் கூறியது, மறைந்த சிவசேனா தலைவர்கள் பால் தாக்கரே மற்றும் ஆனந்த் திகே போன்றவர்களின் சக்தியை பற்றி கூறினேன்’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.