ஜூலை 18-ம் தேதி நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களாக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா-வும் களமிறங்கியுள்ளனர். தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிவிட்ட நிலையில், பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரின் முன்னிலையில் திரௌபதி முர்மு டெல்லியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து, வரும் திங்களன்று யஷ்வந்த் சின்ஹா வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார். தேர்தலின் பரபரப்பான சூழலில், இருதரப்பினரும் தங்களுக்கான ஆதரவைத் திரட்டுவதில் மும்முரமாகச் செயல்பட்டுவருகின்றனர்.
இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா, தன்னை குடியரசுத்தலைவர் வேட்பாளராகத் தேர்ந்தெடுத்த எதிர்க்கட்சிகளுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், “குடியரசுத்தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கு என்னை உங்களின் பொது வேட்பாளராக, ஒருமனதாகத் தேர்ந்தெடுத்த அணைத்து எதிர்கட்சித்தலைவர்களுக்கும் நன்றி. குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்திய அரசியலமைப்பின் அடிப்படை விழுமியங்கள் மற்றும் அதன் லட்சியங்களை எந்தவித பயமோ, தயவோ இன்றி மனசாட்சியுடன் நிலைநிறுத்துவேன் என்று உங்களுக்கும், இந்திய மக்களுக்கும் நான் உறுதியளிக்கிறேன்.
குறிப்பாக அரசியலமைப்பின் பாதுகாவலன் என்ற முறையில், ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை ஒளியை நிர்வாகத்தால் மங்கிட விடமாட்டேன். மாநில அரசுகளின் உரிமைகள் மற்றும் அதிகாரங்களைப் பறிக்க முயற்சிக்கும், அரசியலமைப்பின் கூட்டாட்சி கட்டமைப்பின் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களை நான் அனுமதிக்க மாட்டேன். இந்தியா தற்போது மிகவும் கடினமான காலங்களில் சென்று கொண்டிருக்கிறது. மேலும், சாமானிய மக்களான விவசாயிகள், தொழிலாளர்கள், வேலையற்ற இளைஞர்கள், பெண்கள் மற்றும் சமூகத்தின் அனைத்து ஒதுக்கப்பட்ட பிரிவினருக்காக நான் குரலெழுப்புவேன்” என்று யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.