குஜராத் கலவர வழக்கில், கடவுள் சிவன் விஷம் குடித்தது போன்ற வேதனையை தாங்கிக் கொண்டு, மோடி ஒரு வார்த்தை கூட பேசாமல், தொடர்ந்து போராட்டம் நடத்தினார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார்.
குஜராத் மாநிலத்தில், கடந்த 2002 ஆம் ஆண்டில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கில், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது:
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கவனமாக படித்து பார்த்தேன். தீர்ப்பில் தீஸ்டா செடல்வத் குறித்து தெளிவாக கூறப்பட்டுள்ளது. அவர் நடத்தும் தொண்டு நிறுவனம் தான் கலவரம் குறித்து தவறான தகவலை போலீசாரிடம் தெரிவித்தது. இந்த தொண்டு நிறுவனம் தான் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேசனிலும் பாஜக தொண்டர்களை தொடர்புப்படுத்தி மீது புகார் அளித்தது. மீடியாக்களின் அழுத்தம் காரணமாக, ஒவ்வொரு மனுவும் உண்மை என நம்பினார்கள்.
குஜராத் கலவரம் தொடர்பாக, தொண்டு நிறுவனத்தின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து அதிகாரிகளையும் நியமித்தது. அதில், எங்களுக்கு எந்த பங்கும் இல்லை. விசாரணை அதிகாரிகளும் உள்ளூர் ஆட்கள் அல்ல. அவர்கள் மத்திய அரசு அதிகாரிகள். அப்போது மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி இருந்தது. இந்த விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணித்தது. தொண்டு நிறுவனம் சார்பில், அதிக சம்பளம் வாங்கும் வழக்கறிஞர் ஆஜரானார்கள். அப்படியிருக்கையில் நாங்கள் எப்படி தலையிட முடியும்.
கலவரத்தின் போது, குஜராத் அரசு எந்தவித தாமதத்தையும் செய்யவில்லை. குஜராத்தில் பந்த் அறிவிக்கப்பட்ட போது, நாங்கள் உதவிக்கு ராணுவத்தை அழைத்தோம். ராணுவம் வந்து சேர கால அவகாசம் உண்டு. குஜராத் அரசின் சார்பில் எந்த தாமதமும் இல்லை. இதனை நீதிமன்றம் பாராட்டி உள்ளது.ராணுவ தலைமையகம் டெல்லியில் உள்ளது. கடந்த 1984ல் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின் போது ஏராளமானவர்கள் கொல்லப்பட்டனர். முதல் மூன்று நாட்களில் எதுவும் செய்யவில்லை. அதனை விசாரிக்க எத்தனை சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர். மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தோம்.
குஜராத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்த எனக்கு, பிரதமர் மோடி அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது தெரியும். தடியடி, துப்பாக்கிச்சூடு நடத்தி கலவரத்தை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தோம். அதில் 900 பேர் உயிரிழந்தனர். கலவர சூழ்நிலையை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய போலீஸ் அதிகாரி கில், மோடி அரசுக்கு உதவினார். மாநில அரசின் முறையான நடுநிலையான நடவடிக்கையை எனது பணிநாட்களில் பார்த்தது இல்லை என என்னிடம் அவர் கூறினார். ஆனால், அவர் மீதும் குற்றச்சாட்டுகளை வைத்தனர்.
2001 முதல் 2014 வரை குஜராத் முதல்வராக இருந்த மோடியை கலவரத்தில் தொடர்புபடுத்த தொண்டு நிறுவனத்திற்கு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான அரசு உதவி செய்தது. ஆனால், நீதிமன்ற தீர்ப்பில், சாட்சிகளை பாதுகாப்பதற்கான திட்டத்தை மாநில அரசு பாதுகாத்தது. கலவரத்தை கட்டுப்படுத்த பல கூட்டங்களை மோடி நடத்தியுள்ளார்.
அமைதியாக இருக்கும்படி மக்களிடம் கோரிக்கை விடுத்தார் என கூறப்பட்டுள்ளது. கலவரத்தை கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மாநில அரசு எடுத்தது. சரியான நடவடிக்கையை சரியான நேரத்தில் செய்தோம். குறைந்த பாதிப்புடன் சூழ்நிலையை மாநில அரசு கட்டுக்குள் கொண்டு வந்தது என நீதிமன்றம் பாராட்டி உள்ளது. சில சமூக விரோதிகள், அரசியல் காரணங்களுக்காக குற்றச்சாட்டுகளை தெரிவித்ததாக நீதிமன்றம் கூறியுள்ளது. பாஜக அரசு மீதான கரை துடைத்தெரியப்பட்டுள்ளது.
மோடிக்கு எதிராக அரசியல் ரீதியில் குற்றச்சாட்டுகள் புனையப்பட்டன. அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரித்த உச்சநீதிமன்றம், ஏன் குற்றம் சாட்டப்பட்டது என கேள்வி எழுப்பியது. அரசியல் ரீதியாக வழக்கு புனையப்பட்டது என்பது நிரூபணம் ஆகியது. இது கடந்த 19 ஆண்டுகளாக நடந்த போராட்டம். கடவுள் சிவன் விஷம் குடித்தது போன்ற வேதனையை தாங்கி கொண்டு, மோடி ஒரு வார்த்தை கூட பேசாமல், தொடர்ந்து போராட்டம் நடத்தினார். ஆனால், நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு உண்மை வெளியே வந்தது தான் எங்களது வெற்றி. அது தங்கத்தை விட மின்னியது.
மோடி மீது குற்றச்சாட்டுகளை கூறியவர்கள், இன்று உயிருடன் இருந்தால், அவர்களுக்கு மனசாட்சி இருந்தால் மோடியிடமும், பாஜகவிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். உண்மையின் பக்கம் இருந்தும் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட மோடி, வலியை சகித்து கொள்வை உன்னிப்பாக கவனித்திருக்கிறேன்.
நீதித்துறை நடவடிக்கைகள் நடந்து கொண்டுள்ளதால் அவர் பேசவில்லை. வலிமையான மனம் உள்ளவர் மட்டுமே இத செய்ய முடியும். நீதித்துறை நடவடிக்கைகள் முடியும் வரை மோடி எதுவும் கூறாமல், அதில் தலையிடாமல் இருந்தார். அனைத்தையும் அமைதியாக தாங்கினார். இன்று உண்மை வென்றுள்ளது. மோடி வெற்றி பெற்றுள்ளார்.
இவ்வாறு அமித்ஷா கூறினார்.