கடந்த சில தினங்களாகச் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்துவருகிறது. மேலும், சென்னை மாநகரின் பல இடங்களிலும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்தவர் வாணி கபிலன் (57). இவர் கே.கே. நகர்ப் பகுதியில் உள்ள ஒரு வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர், நேற்று மாலை வங்கி பணியை முடித்துவிட்டு தனது சகோதரி எழிலரசியுடன் காரில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.
இவர்கள் காரை கார்த்திக் என்பவர் ஓட்டியிருக்கிறார். அந்தக் கார் கே.கே நகர் லட்சுமண சாலையிலிருந்து, பி.டி.ராஜன் சாலை வழியாகச் சென்றுகொண்டிருந்தது. அப்போது கர்நாடக வங்கியருகில் கார் வந்தபோது, சாலையில் நின்றுகொண்டிருந்த மரம் வேரோடு சாய்ந்து காரின் பின்பக்கம் மீது விழுந்தது. இதில், பின்னிருக்கையில் அமர்ந்திருந்த வாணி உடல் நசுங்கி உயிரிழந்தார். எழிலரசி, கார்த்திக் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர்.
விபத்திலிருந்து மீட்கப்பட்ட இருவருக்கும் கே.கே நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சம்பவமறிந்து வந்த தீயணைப்புப் படையினர் சாலையில் சாய்ந்துகிடந்த மரத்தை அப்புறப்படுத்தினர். உயிரிழந்த வங்கி மேலாளரின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
விபத்து நடந்த சாலையில் மழைநீர் வடிகாலுக்கான பள்ளம் தொடப்பட்டிருந்தது. அதனால், அந்த சாலையிலிருந்த மரம் பிடிமானம் இல்லாது சாய்த்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகளின் அஜாக்கிரதை மற்றும் அலட்சியம் காரணமாகவே இந்த விபத்து நடந்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
எனினும் இந்த விபத்துக்கு, மழைநீர் வடிகால் பணிகள் காரணமில்லை என்று சென்னை மாநகராட்சி விளக்கமளித்துள்ளது. “விபத்து நேரிட்ட இடத்துக்கு 10 அடிக்கு முன்னதாகவே பள்ளம் தோண்டும் பணி நிறுத்தப்பட்டுவிட்டது. 2 நாள்களாகப் பெய்த மழையாலும் மண்ணின் ஈரத்தன்மை காரணமாகவும் பழமையான அந்த மரம் சாய்ந்துள்ளது. அங்கு 2 நாள்களாக மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை” என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. எனினும் பள்ளம் தோண்டிய ஊழியர்களிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.