புதுடெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு (64), தனது வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார். பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உடன் இருந்தனர்.
இந்த நிகழ்வில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோரை நேற்று முன்தினம் நேரில் சந்தித்து, குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு கோரினர். அத்துடன், முர்முவின் வேட்புமனு தாக்கல் நிகழ்வில் பங்கேற்கவும் அழைப்பு விடுத்தனர்.
இந்த அழைப்பை ஏற்று நேற்று முன்தினம் இரவே ஓபிஎஸ் டெல்லி சென்றார். அதேபோல், பழனிசாமி தரப்பில் மாநிலங்களவை உறுப்பினர் மு.தம்பிதுரையும் டெல்லி சென்றார். டெல்லியில் தம்பிதுரையை, வேட்பாளர் திரவுபதி முர்மு நேற்று சந்தித்து ஆதரவு கோரினார். அப்போது, அதிமுக சார்பில் முழு ஆதரவு அளிப்பதாக பழனிசாமி தெரிவித்ததை தம்பிதுரை கூறி, வாழ்த்து தெரிவித்தார்.
அதேபோல ஓபிஎஸ்ஸையும் திரவுபதி முர்மு சந்தித்து ஆதரவு கோரினார். அப்போது மத்திய அமைச்சர் எல்.முருகன், ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத், மனோஜ்பாண்டியன் எம்ல்ஏ ஆகியோர் உடனிருந்தனர்.
திரவுபதி முர்மு வேட்புமனு தாக்கலின்போது, பிரதமர் மோடி, பாஜக மேலிட தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருடன் ஓ.பன்னீர்செல்வம், மு.தம்பிதுரை, ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி. ஆகியோரும் பங்கேற்றனர்.