திருச்சிக்கு குட் நியூஸ்: ரூ350 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு; ஓராண்டில் பஞ்சப்பூர் பஸ் நிலையம்!

தமிழகத்தின் மையப்பகுதியாக இருக்கும் திருச்சி மாவட்டத்தை தமிழகத்தின் 2-வது தலைநகராக அறிவிக்க அவ்வப்போது கோரிக்கை எழுந்து வருகிறது. சென்னைக்கு நிகராக உள்ள திருச்சிக்கு நாள்தோறும் லட்சக்கணக்காக மக்கள் வந்து செல்கின்றனர்.

 மேலும் திருச்சியை மையமாக வைத்து போர் தளவாடத் தொழிற்சாலை, மத்திய அரசின் பங்களிப்பில் பெல் தொழில் நிறுவனம், மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ரயில்வே தொழிற்சாலை என பிரபலமான தொழிற்சாலைகளும், இதனை நம்பி சிறு குறு தொழில் நிறுவனங்களும் இயங்கி வருகின்றது.

 அதைப்போல் மத்திய பல்கலைக் கழகத்துக்கு இணையான பல்கலைக்கழகங்களும், என் ஐ டி கல்லூரி, விவசாயக் கல்லூரி பல தொழில் வாய்ப்பை உருவாக்கக்கூடிய கல்லூரிகளும் இங்கு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

 இப்படி பல்வேறு உள்கட்டமைப்பை கொண்ட திருச்சி மாநகரில் சமீபகாலமாக சென்னைக்கு இணையாக போக்குவரத்து நெருக்கடி இருப்பதால் மாநகரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் நீண்ட கால கோரிக்கை வைத்து வருகின்றனர்.

 இந்த கோரிக்கைக்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக திமுக தலைமையிலான தமிழக அரசு  திருச்சி மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பஞ்சப்பூரில் ரூ. 850 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் அமைக்க உத்தரவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்திற்காக அடிக்கல்லும் நாட்டினார்.

பேருந்து நிலைய பணிகள் 2 கட்டமாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் முதற்கட்ட பணிக்கு ரூ.350 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இந்த பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 350 பேருந்துகள் நிற்கும் வசதி, மொத்த மற்றும் சில்லறை காய்கறி விற்பனை மையம், வணிக வளாகம், லாரி நிறுத்துமிடம் போன்ற பல்வேறு வசதிகள் இடம்பெற உள்ளன.

இந்த பேருந்து நிலையத்ததை ஒரு வருடத்திற்குள் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உள்ளதாக உறுதி அளித்துள்ளது. இந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் திருச்சியில் அமைவது தென் மாவட்ட மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

க. சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.