திருச்சி விமான நிலையத்தில் இருந்து பன்னாட்டு விமான சேவைகள் அதிகரிப்பு

திருச்சி: திருச்சி விமானநிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. திருச்சியில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், மலிண்டோ, ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ், ஸ்கூட் ஆகிய விமான நிறுவனங்கள் விமான சேவை அளித்து வருகின்றன. தமிழக அளவில் சென்னைக்கு அடுத்தப்படியாக திருச்சி விமான நிலையம் உள்ளது.

இந்நிலையில், 2019-ம் ஆண்டில் உலக நாடுகள் முழுவதும் கரோனா பரவலால், வெளிநாட்டு சேவை மட்டுமின்றி உள்நாட்டு விமான சேவையும் பாதிக்கப்பட்டது. இருந்தபோதும் நாட்டில் உள்ள அனைத்து சர்வதேச விமானநிலையங்களில் இருந்து வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களை மீட்க சிறப்பு மீட்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. இதில், திருச்சி விமானநிலையம் கூடுதல் மீட்பு விமானங்களை இயக்கி அதிகளவில் வெளிநாடு வாழ் இந்தியர்களை மீட்டு அழைத்து வந்த வழித்தடத்தில் முதலிடத்தில் உள்ளது.

இதற்கிடையே உலக அளவில் கரோனா தொற்றுப் பரவல் கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து, திருச்சி விமானநிலையத்தில் இருந்து கடந்த மார்ச் மாதம் முதல் வெளிநாட்டு விமான சேவை தொடங்கியது. தொடக்க நாட்களில் குறைந்தளவில் விமான சேவையை தொடங்கிய ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் பயணிகளின் வரத்து அதிகரிப்பால், தங்களது சேவையை அதிகரித்து வருகின்றன. பல்வேறு நாடுகளுக்கு இயக்கப்படும் அனைத்து விமானத்தின் இருக்கைகளும் நிரம்பிவிடுவதால், அடுத்தடுத்த நாட்களில் பயணக் கட்டணம் இருமடங்காகிவிடுகிறது.

இதனால், தொடக்கத்தில் நாளொன்றுக்கு ஒரு சேவையை மட்டுமே அளித்த விமான நிறுவனங்கள், தற்போது 2 அல்லது 3 விமான சேவைகளாக அதிகரிக்க முன்வந்துள்ளன. அதுமட்டுமின்றி, கரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தில் குவைத், தோகா ஆகிய நாடுகளுக்கான விமான சேவை இல்லாதபட்சத்தில் தற்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தலா இரு சேவையை இங்கிருந்து அந்த நாடுகளுக்கு தொடங்கியுள்ளது. இதனால் வரும் காலங்களில் வெளிநாட்டு பயணிகளை கையாள்வதில் திருச்சி வி்மானநிலையம் சாதனை படைக்கும் என்கின்றனர் விமானநிலைய அதிகாரிகள்.

இதுகுறித்து விமானநிலைய அதிகாரி ஒருவர் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: கரோனா கட்டுப்பாடு தளர்வுக்கு பிறகு மார்ச் மாதம் முதல் திருச்சி விமானநிலையத்தில் இருந்து தொடங்கிய வெளிநாட்டு விமான சேவை நாளொன்றுக்கு 5 ஆக இருந்து ஏப்ரல் மாதத்தில் 8 ஆக அதிகரித்தது. இதனால், ஏப்ரல் மாதத்தில் மட்டும் 493 வெளிநாட்டு விமான சேவைகளில் 68,188 பயணிகளை கையாண்டு இந்தியளவில் அதிக அளவிலான வெளிநாட்டு பயணிகளை கையாண்ட விமான நிலையங்களில் 11-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், கரோனாவுக்கு முந்தைய கால கட்டத்தில் திருச்சியில் இருந்து 72 ஆக இருந்த வெளிநாடுகளுக்கான விமான சேவை கடந்த ஜூன் 1 முதல் 82 ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி ஜூன் 25-ம் தேதி முதல் குவைத், தோகா, மலேசியாவுக்கு கூடுதலாக ஒரு விமான சேவை அளிப்பதாக ஏர் இந்திய நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் திருச்சி வி்மானநிலையத்தில் வெளிநாட்டு விமான சேவை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் அதிகளவில் வெளிநாட்டு பயணிகளைக் கையாண்டு 10-வது இடத்தில் உள்ள கொல்கத்தா விமானநிலையத்தை பின்னுக்கு தள்ளி திருச்சி விமானநிலையம் சாதனைப் படைக்கும் என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.