திரைப்பட பயிற்சி மாணவர்கள் உருவாக்கும் படம்

சென்னையில் உள்ள தனியார் திரைப்பட பயிற்சி மையத்தின் மாணவர்கள் இணைந்து உருவாக்கி உள்ள படம் 'அற்றைத் திங்கள் அந்நிலவில்'. இதில் ஹீரோவாக நவீன் குமார் நடித்திருக்கிறார். ஹீரோயினாக லாவண்யா நடித்திருக்கிறார். மாடலிங் துறையில் பிரபலமாக இருக்கும் இவர் மிஸ்.தமிழ்நாடு உள்ளிட்ட பல பட்டங்களை வென்றிருக்கிறார். இவர்களுடன் சுவாதி, ப்ரேமா உள்ளிட்ட பல புதுமுக நடிகர், நடிகைகள் இப்படத்தில் அறிமுகமாகிறார்கள்.

தாஜ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஆர். சி. ஐயப்பன் தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி எஸ்.எஸ்.ஜெயக்குமார் லாரன் இயக்கியிருக்கிறார். இவர், இயக்குநர்கள் கே. பாக்யராஜ், எஸ்.ஜே. சூர்யா, திருமுருகன் ஆகியோரிடம் பணியாற்றியவர். சென்னை லயோலா கல்லூரியில் 15 ஆண்டுகளாக மீடியா பாட பிரிவில் பேராசிரியராகவும் பணியாற்றியவர். தற்போது தனியார் திரைப்பட பயிற்சி மையத்தின் இயக்குனராக இருக்கிறார்.

படம் பற்றி ஜெயக்குமார் லாரன் கூறியதாவது: ஐ.டி. நிறுவனத்தில் புதிதாக இணையும் ஹீரோயினுக்கு, அங்கு மேஜேனிங் டைரக்டராக இருக்கும் ஹீரோ மேல் காதல் ஏற்படுகிறது. அந்த காதல் தீவிரம் அடையும் போது ஹீரோவுக்கு ஏற்கனவே திருமணமான தகவலோடு, அவர் திருமணம் செய்திருப்பதே ஹீரோயினின் அக்காவை தான் என்ற விஷயமும் சொல்லப்படுகிறது.

அக்காவின் கணவர் என்ற போதும், விவாகரத்திற்காகக் காத்திருக்கும் ஹீரோவை ஹீரோயின் தொடர்ந்து காதலிக்க, அந்த காதலை ஹீரோ ஏற்றாரா, சமூகம் அதை எப்படி பார்க்கிறது. இவற்றை கடந்து ஹீரோயினின் காதல் என்ன ஆனது? என்பதை சொல்வது தான் இப்படத்தின் கதை.
திரைப்படம் குறித்து படிக்கும் மாணவர்களை கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. நான் மற்றும் நடிக்கும் ஒரு சிலர் தவிர மற்ற அனைவருமே மாணவர்கள்தான். அவர்களுக்கு செய்முறை பயிற்சி அளிக்கும் நோக்கத்தில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.