”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!

பாஜகவின் குடியரசுத்தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு குறித்து அவதூறாக ட்விட்டரில் பதிவிட்டதாக, பிரபல திரைப்பட இயக்குநர் ராம் கோபால் வர்மா மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் சர்ச்சையான திரைப்படங்களை இயக்கி புகழ்பெற்றவர் ராம்கோபால் வர்மா. திரைப்படங்கள் மட்டுமின்றி பொதுவெளியிலும், சமூகவலைத்தளங்களிலும் இவர் கூறும் கருத்துக்களும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்மு குறித்து கருத்து கூறி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்தக் கருத்து தற்போது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்ததாவது, “திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் இதில் பாண்டவர்கள் யார்? மேலும் முக்கியமாக, கௌரவர்கள் யார்?” என்று குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து ராம்கோபால் வர்மா மீது தெலங்கானா பாஜக தலைவர் கூடூர் நாராயணா ரெட்டி, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யுமாறு கோரியுள்ளார்.
image
மேலும் அவர் அளித்துள்ள பேட்டியில், “ராம்கோபால் வர்மாவின் இந்த ட்வீட் பட்டியலினத்தவர் மக்களை அவமரியாதை செய்வதாக உள்ளது. திரௌபதியை, அவர் குடியரசுத் தலைவர் என்று கூறுகிறார். திரௌபதி, பாண்டவர்கள், கௌரவர்கள் என்று மட்டும் குறிப்பிட்டிருந்தால் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இருந்திருக்காது. ராம்கோபால் வர்மாவின் கருத்துக்களால் பாஜகவினராகிய நாங்கள் வேதனை அடைந்துள்ளோம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் பெரிதாகிய நிலையில், ராம் கோபால் வர்மா உடனடியாக தனது கருத்துக்கு விளக்கம் அளித்து ட்வீட் செய்துள்ளார். அதில்,“கேலிக்கூத்தாக சொல்லப்பட்டதே தவிர, வேறு எந்த வகையிலும் சொல்லவில்லை. மகாபாரத கதையில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் திரௌபதி. அதனால் மிகவும் அரிதாக தென்பட்ட இந்த பெயரை, அந்த கதாபாத்திரத்தை நினைவுப்படுத்தும் வகையில் தோன்றியதால், அதனை வெளிப்படுத்தினேன். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் இதை சொல்லவில்லை” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
image
ராம் கோபால் வர்மாவின் கருத்து குறித்து பாஜக எம்எல்ஏ டி ராஜா சிங்கையும் தன்னுடைய விமர்சனங்களை முன் வைத்துள்ளார். அவர் இதுபற்றி கூறுகையில் “வர்மா எப்போதுமே இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களைச் சொல்லி செய்திகளில் பிரபலமாக இருக்க முயற்சிக்கிறார்” என்று கூறியுள்ளார். முன்னதாக “இந்தி எங்கள் தேசிய மொழி அல்ல” என்று கிச்சா சுதீப் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்ததையடுத்து, பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் கடுமையாக சாடினார்.
இந்த விவகாரம் வடக்கு, தெற்கு என பெரிய விவாதமாக மாறியபோது, ராம் கோபால் வர்மா “கன்னட படமான ‘கே.ஜி.எஃ.ப். 2’ இந்தியில், முதல் நாளிலேயே 50 கோடி வசூல் செய்ததால், வடநாட்டு சினிமா நட்சத்திரங்கள் தென்னிந்திய சினிமா நட்சத்திரங்களைப் பார்த்து பாதுகாப்பற்றவர்களாகவும், பொறாமை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத அடிப்படை உண்மை” என்று கூறி சர்ச்சையை கிளப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.