பல்லாரி, : பல்லாரி மாவட்டத்தின் பல கிராமங்களில், குடிநீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. காய்கறி போன்று, மக்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.கர்நாடகாவில், பல்லாரி மிகவும் முக்கியமான மாவட்டமாகும். சுரங்க தொழிலுக்கு மட்டுமின்றி, அரசியலுக்கும் பெயர் பெற்றதாகும். சுரங்க அதிபர்கள் அதிகம் உள்ளனர். சட்டவிரோத சுரங்கத் தொழில் வெளிச்சத்துக்கு வந்த போது, சர்வதேச அளவில் பரபரப்பு ஏற்பட்டது.
பல்லாரிக்கு பல்லாயிரம் கோடி ரூபாய், வருமானம் கிடைக்கிறது. இது பணக்கார மாவட்டம் என்ற கருத்து, மக்களிடையே உள்ளது. ஆனால் இங்குள்ள கிராமப் பகுதிகளில், குடிநீர் தட்டுப்பாடு தலை விரித்தாடுகிறது. காய்கறிகளை போன்று, குடிநீரை தெருவில் விலை கொடுத்து வாங்குவதை காணலாம்.சங்கர பண்டே, கம்மரசேடு, தனலட்சுமி கேம்ப், மாளகட்டே உட்பட பல்வேறு கிராமங்களில், குடிநீரை பணம் கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. டாடா ஏஸ், ஆட்டோக்களில் சிந்தடிக் தொட்டிகளை வைத்துக்கொண்டு, கிராமம், கிராமமாக சென்று குடிநீரை விற்கின்றனர். குடிநீர் வாகனங்கள் வரும் போது, ஒரு குடத்துக்கு ஐந்து ரூபாய் கொடுத்து வாங்குகின்றனர்.நிர்ணயித்த நேரத்தில், குடிநீர் வாகனங்கள் வருவதில்லை. இதனால் பலரும் பணிக்கு செல்லாமல், காத்திருக்க வேண்டியுள்ளது. கிராமப் பகுதிகளில், சுத்த குடிநீர் நிலையங்கள் அமைந்துள்ளன. இங்குள்ள இயந்திரங்கள் பழுதடைந்துள்ளன. இதை சரி செய்வதில் அதிகாரிகள் அக்கறை காண்பிப்பதில்லை. இதனால் கிராமத்தினர் குடிநீருக்கு பரிதவிக்கின்றனர். வெறுப்படைந்த மக்கள், அடுத்த முறை தேர்தலை புறக்கணிப்பதாக எச்சரித்துஉள்ளனர்.நகர்ப்பகுதிகளை போன்று, கிராமப்பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை, மாநில அரசு செலவிடுகிறது. மத்திய அரசிடமிருந்தும், பல்வேறு திட்டங்களின் கீழ் நிதியுதவி கிடைக்கிறது. ஆனால் பாவப்பட்ட கிராமங்களை பார்க்கும் போது, அவ்வளவு பணமும் எங்கு போனது என்ற கேள்வியெழும்.குறிப்பாக கனிம வளம் நிதியையும், குடிநீர் திட்டங்களுக்கு பயன்படுத்துகின்றனர்.ஆனால் கிராமங்களில் குடிநீர் பிரச்னை மட்டும், அப்படியே உள்ளது. பல்லாரி ரூரல் பகுதிகளில், இப்பிரச்னை தீவிரமாக உள்ளது.கிராம அபிவிருத்தித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கிராமங்களில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும்படி, குடிநீர் வினியோகத்துறையிடம் கூறியுள்ளோம்.
‘சுத்த குடிநீர் நிலையங்களில், பழுதடைந்த இயந்திரங்களை சரி செய்யும்படி, ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். இதை மீறுவோரை கறுப்பு பட்டியலில் சேர்ப்போம்’ என்றார்.பல்லாரி ரூரல் தொகுதியில், குடிநீர் பிரச்னை இருப்பது, என் கவனத்துக்கு வந்துள்ளது. சுத்த குடிநீர் நிலையங்களின் இயந்திரங்கள் பழையதாகி உள்ளன. சில இடங்களில் பழுதடைந்ததே, பிரச்னைக்கு காரணம். உடனடியாக பழுது பார்த்து, பிரச்னையை சரி செய்வோம்.
– நாகேந்திரா,எம்.எல்.ஏ., பல்லாரி ரூரல்.