புதுடெல்லி: நிதி ஆயோக் அமைப்பின் தலைவராக ஐஏஎஸ் அதிகாரியான பரமேஸ்வரன் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1981-ம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநில பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வு பெற்று பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் செயலராக பணியாற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். இந்த துறையானது 2016-ம் ஆண்டு முதல் ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
தற்போது நிதி ஆயோக் அமைப்பின் தலைவராக உள்ள அமிதாப் காந்த்தின் பதவிக் காலம் இம்மாதம் 30-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதைத் தொடர்ந்து அவரது பதவிக்கு பரமேஸ்வரன் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
17 ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக பணிபுரிந்து 2009-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார். பின்னர் உலக வங்கியின் குடிநீர் மற்றும் சுகாதார பிரிவில் பணியாற்றினார். 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழான துறையில் செயலராக பணியாற்றினார்.
குடிநீர் மற்றும் சுகாதாரம் சார்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச அனுபவம் பெற்றவர். வியட்நாம், சீனா, எகிப்து, லெபனான் ஆகிய நாடுகளில் பணியாற்றியவர். உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் அதிக கவனம் செலுத்துபவர். தனது மகன் மற்றும் மகள் தொழில்முறை டென்னிஸ் விளையாட இரண்டு ஆண்டுகள் அரசு விடுமுறை எடுத்து மேலாளராக சென்றவர் ஐயர்.