கோவை: தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க மாநில எல்லைப் பகுதிகளில் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அரசு முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் உணவு, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கோவைக்கு இன்று (ஜூன் 25-ம் தேதி ) மதியம் வந்தார். பீளமேடு புதூரில் உள்ள நியாய விலைக்கடை, ரயில் நிலையம் சாலையில் உள்ள சிந்தாமணி கூட்டுறவு அலுவலகம் ஆகிய இடங்களில் நேற்று ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து அரசு முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் நியாய விலைக் கடைகளை நம்பியுள்ள 2.22 கோடி அட்டைகளுக்கு தரமான பொருட்கள் விநியோகிப்பதை உறுதி செய்ய முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை 34,877 கடைகள் உள்ளன. இந்த ஆய்வில் முதியவர்கள் பயோ-மெட்ரிக் முறையில் கைரேகை வைப்பதில் சில சிரமங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளனர். சில நேரங்களில் தரமற்ற பொருட்கள் வந்தால், அரிசி பழையதாக இருந்தால் மக்களுக்கு விநியோகிக்காமல் திருப்பி குடோனுக்கு அனுப்ப கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தபட்டுள்ளது. மாதிரி கடைகள் உருவாக்கவும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம்.
நியாய விலைக்கடையில் பொருட்கள் வாங்காத நபர்களை கண்டறித்து அவர்களது அட்டைகளை அகற்றவும், குடும்ப அட்டை கிடைக்காதவர்களுக்கு குடும்ப அட்டை வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. படிப்படியாக நியாய விலை கடைகளை நவீன கடைகளாக (மாடர்ன் கடைகள்) மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விவசாயிகளிடம் இருந்து செப்டம்பர் 1-ம் தேதியில் இருந்தே கொள்முதல் செய்வதற்கு முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதற்கேற்ப நாங்களும் எங்களை தயார்படுத்திக் கொள்கிறோம்.
கண்காணிப்புப் பணி
தமிழகத்தில் இலவசமாக கொடுக்கும் அரிசி வேறு மாநிலத்துக்கு கடத்திச் சென்று பாலிஷ் செய்து விற்பனை செய்யக் கூடாது என்பதற்காக எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தபட்டுள்ளன. கடந்தாண்டு மே மாதம் முதல் தற்போது வரை ரேஷன் பொருட்கள் கடத்தல் தொடர்பாக 2,853 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 40,458 குவிண்டால் ரேஷன் பொருட்கள், 901 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, கேரளா , ஆந்திரா மாநில எல்லைகளில் உள்ள 41 சோதனைக் சாவடிகளிலும் கடத்தலைத் தடுக்க கண்காணிப்புப் பணி தீவிரபடுத்தபட்டுள்ளது. நாங்களும் அங்கு ஆய்வு செய்ய உள்ளோம். ரேஷன் பொருட்கள் மட்டுமல்லாமல், மற்ற அத்தயாவசிய பொருட்களின் விலை குறித்தும், தரமான பொருட்களாக இருக்கின்றனவா என்பது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.