குவாஹாட்டி: நோயாளியை சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அசாம் மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் பரிமால் சுக்லபைத்யா படகோட்டியாக மாறினார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
அசாம் மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பிரம்மபுத்ரா, பராக் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அசாம் மாநிலத்திலுள்ள 35 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் உள்ள மக்கள் வெள்ளத்தால் சிக்கித் தவிக்கின்றனர்.
இந்நிலையில் கச்சார் மாவட்டத்திலுள்ள சில்சார் பகுதியில் வெள்ள நிவாரணப் பணிகளை பார்வையிட அமைச்சர் பரிமால் சுக்லபைத்யா நேற்று முன்தினம் சென்றார்.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள நோயாளி ஒருவர் மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல் தவித்தார்.
அவர் டயாலிசிஸ் செய்ய மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருந்தது. இதையடுத்து அவரை படகில் அமர வைத்து படகோட்டியாக மாறினார் அமைச்சர் பரிபால் சுக்லபைத்யா. ஆம்புலன்ஸ் வாகனம் வரை துடுப்புப் போட்டு படகில் அவரை அழைத்து வந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் அமைச்சர். நோயாளியை வைத்து அவர் படகோட்டிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.