‘ராக்கெட்ரி: நம்பி விளைவு’ பட செய்தியாளர் சந்திப்பில், நடிகர் மாதவன் தெரிவித்துள்ள கருத்துதான் சமூகவலைத்தளங்களில் தற்போது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.
இயக்குநர் மணிரத்னத்தால் தமிழ் திரையுலகில் ‘அலைபாயுதே’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்ட மாதவன், பின்னர் பாலிவுட் திரையுலகிலும் குறிப்பிடத்தக்க அளவில் நடித்து வந்தார். இடையில் சில காலங்கள் அவரது படங்கள் வெளிவராத நிலையில், தற்போது அவர் நடித்து முடித்துள்ளப் படம் ‘ராக்கெட்ரி: நம்பி விளைவு’. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகியுள்ளார் நடிகர் மாதவன். இந்தப் படத்தில் கதாநாயகியாக சிம்ரனும், கௌரவ தோற்றத்தில் நடிகர்கள் ஷாருக்கான், சூர்யா ஆகியோரும் நடித்துள்ளனர்.
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன், ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக கைதாகி, அதனால் அவர் அனுபவித்த துன்பங்களும், அதிலிருந்து அவர் மீண்டுவந்து தன்னை நிராபராதி என்று நிரூபித்த சட்டப் போராட்டங்களையும் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய 5 மொழிகளில், வருகிற ஜூலை 1-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகிறது. ஏற்கனவே இந்தப் படத்தின் ட்ரெயிலர் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், படத்தினை புரமோஷன் செய்யும் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது.
அந்தவகையில், பட புரமோஷனை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்தப்போது, நடிகர் மாதவன் கூறிய கருத்துக்கள் தான் அவரை நெட்டிசன்கள் கிண்டல் செய்யும் நிலைக்கு மாறியுள்ளது. செய்தியாளர் ஒருவர், உலகத்தில் பல நாடுகள் இருந்தாலும், நம் நாட்டில் மட்டும் விஞ்ஞான சாஸ்திரம், வானியல், கோள்கள் உள்ளிட்டவற்றை அந்தக் காலத்திலே கணித்திருந்தார்கள். அதுக்கும் இப்போது உள்ள விஞ்ஞானத்திற்கும் தொடர்பு இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய மாதவன் “நிச்சயமாக தொடர்பு இருக்கு. ‘மார்ஸ் மிஷன்’ என்பது பூமியிலிருந்து, செவ்வாய் கிரகம் வரை அந்த செயற்கைகோள் சென்று சேருவதுதான். அமெரிக்கா, நாசா, ரஷ்யா, சீனா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் பல முறை 800 மில்லியன், 900 மில்லியன் என கோடிக்கணக்கில் செலவழித்து 30-வது தடவை, 32-வது தடவை தான் செவ்வாய்க்கு செயற்கைக்கோளை அனுப்பி வெற்றி பெற்றார்கள். அதிநவீன இன்ஜின் (3 விதமா சொல்வாங்க) தொழில்நுட்பத்தின் மூலம் அவர்கள் இந்த வெற்றியைப் பெற்றனர். ஆனால் இந்தியாவிடம் இருக்கும் இன்ஜின் மிகவும் சிறியது. அவர்களது விண்கலம் செல்லும் தூரத்தை விட குறைவாகத்தான் செல்லும்.
இருந்தாலும் இந்தியா கடந்த 2014-ம் ஆண்டு செவ்வாய்க்கு செயற்கைக்கோளை அனுப்பியது. ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் செலுத்தும்போது, 1000 வருடங்களுக்கு முன்பே கணித்து வைத்து செலஸ்டியல்னு சொல்ற பஞ்சாங்கம் மூலம் துல்லியமாக மற்ற கிரங்களை எல்லாம் தட்டிவிட்டுட்டு நேரடியாக அனுப்பினாங்க. நம்பி நாராயணின் மருமகன் அருணண், அவர் தான் மங்கள்யான் (செவ்வாய்) திட்டத்தின் இயக்குநர். அவர் இந்தக் கதையை சொல்ல சொல்ல அப்படியே புல்லரிச்சு போயிருச்சு. பஞ்சாங்கம் வானியல் வழிமுறை வரைபடத்தைப் பார்த்து ஈர்ப்பு விசையை பயன்படுத்தி மைக்ரோ செகண்ட்டில் செவ்வாய்க்கு இஸ்ரோ செயற்கைக்கோளை அனுப்பியுள்ளது. அது வெற்றிகரமாகத் தனது வேலையைச் செய்தது.
அருணண்
மின்சாரம் இல்லாமல், சின்ன பட்ஜெட்டில் செயற்கைகோள் அனுப்பப்பட்டதற்கு காரணம் இந்த பஞ்சாங்கம் தான். இந்த மாதிரி நம்ம நாட்டிலேயே பல விஷயங்கள் இருக்கு. ஹாலிவுட்ல ‘கிராவிட்டி’, ‘இண்டர்செல்லர்’, ‘இன்செப்ஷன்’, ‘ஸ்டீவ் ஜாப்ஸ்’ போன்று படம் பண்ணும்போது, அவங்கதான் மேதைங்கனு உலகமே நம்பிடுது. ஆனா அவங்கள விட பல விஞ்ஞானிகள் நம் நாட்டில் இருக்காங்க. இங்க சாதிக்க முடியலனு அங்க போய் சாதிக்கிறாங்க. உலக நாடுகளில் டாப் கம்பெனிகளில் 13 தலைமை செயல் அதிகாரிகள் நம் இந்தியர்கள் தான். முக்கியமாக தமிழர்கள்” இவ்வாறு அவர் பேசியிருந்தார்.
இதையடுத்து மங்கள்யான் திட்டத்திற்கு இந்து பஞ்சாங்கம் தான் உதவியதா என பிரபல இசைக்கலைஞரான டி.எம். கிருஷ்ணா உள்பட நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து ட்வீட் செய்து வருகின்றனர். டி.எம்.கிருஷ்ணா தனது ட்விட்டரில், இஸ்ரோவின் இணையதளத்திலேயே இந்த செய்தி வெளியிடாதது ஏமாற்றத்தை அளிக்கிறது என்றும், மேற்கத்திய நாட்டு ராக்கெட்டுகள், செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் தங்களைத் தாங்களே செலுத்துவதற்கு உதவும் மூன்று இயந்திரங்களான (திட, திரவ மற்றும் கிரையோஜெனிக்) ஆகியவை இந்திய ராக்கெட்டுகளில் இல்லை, எனினும் பஞ்சாங்கத்தில் இந்த விஷயங்கள் உள்ளதால் அதனை பயன்படுத்தி செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்பப்பட்டது என்றும் நகைச்சுவையாகவும், மறைமுகமாகவும் மாதவனை சாடியுள்ளார்.
Disappointed that @isro has not published this vital information on their website https://t.co/LgCkFEsZNQ
Time to also consider a Mars Panchangam! https://t.co/VsD0xmswR9— T M Krishna (@tmkrishna) June 23, 2022
இதேபோல் நெட்டிசன்கள் பலரும் மாதவனை கிண்டல் செய்து வருகின்றனர். “ஒரே ஒரு படத்தை இயக்கிவிட்டு எல்லாவற்றையும் அதிலேயே கண்டுபிடித்தாரா?” என்று நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். “இது என்ன முட்டாள்தனம்? அறிவியலுடன் பஞ்சாங்கம்? கடவுளே என் நாட்டைக் காப்பாற்று” என மற்றொரு நெட்டிசன் தெரிவித்துள்ளார். “விஞ்ஞானம் என்பது எல்லோருக்கும் விருப்பமானது அல்ல. அறிவியல் தெரியாவிட்டாலும் பரவாயில்லை.
ஆனால் உண்மையில் எவ்வாறு விஞ்ஞானம் செயல்படுகின்றன என்பது பற்றி உங்களுக்குத் தெரியாதபோது உங்கள் வாயை மூடிக்கொண்டு இருப்பது நல்லது; சில வாட்ஸ்அப் விஷயங்களை மேற்கோள் காட்டி உங்களை நீங்களே கேலிக்கு ஆளாக்கி கொள்ளாதீர்கள்” இவ்வாறு ஒரு நெட்டிசன் கூறியுள்ளார். “ஒரு காலத்தில் தமிழ் காதல் திரைப்படங்களின் சாக்லேட் பையனாக இருந்த மாதவன், தற்போது வாட்ஸ்அப் மாமாவாக மாறியுள்ளார்” என்று ஒரு நெட்டிசன் தெரிவித்துள்ளார்.