பிரித்தானியாவில் குறைவான எண்ணிக்கையில் தடுப்பூசி விநியோகிக்கப்பட்டுள்ளதால், போலியோ தொற்று மீண்டும் தலைதூக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
பிரித்தானியாவில் போலியோ பவரல் தொடர்பான அச்சம் மீண்டும் எழுந்துள்ளது. இந்த நிலையில், 13 முதல் 14 வயதுடையவர்களில் பாதிக்கும் குறைவானவர்களே போலியோ தொற்றுக்கு எதிராக பூஸ்டர் தடுப்பூசியை எடுத்துக்கொண்டுள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
சமீபத்தில் லண்டனில் இருந்து எடுக்கப்பட்ட கழிவுநீர் மாதிரிகளில் போலியோ தொற்று இருப்பது கண்டறியப்பட்டது தேசிய சம்பவம் என சுகாதார அதிகாரிகள் தரப்பு அறிவித்திருந்தனர்.
இருப்பினும் பொதுமக்களுக்கான அச்சுறுத்தல் மிக குறைவு என்றே கூறப்படுகிறது. ஆனால் கொரோனா தொற்றுநோய் பரவலின் போது போலியோ தடுப்பூசி எடுப்பதில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி காரணமாக தொற்று மேலும் பரவத் தொடங்கும் என்று அஞ்சப்படுகிறது.
இதனிடையே, போலியோ பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத பதின்ம வயதினர் கண்டிப்பாக சிக்கலில் உள்ளனர் என நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
போலியோவால் முடங்கிப்போனவர்கள் தொடர்பான எண்ணிக்கை எதிர்வரும் நாட்களில் வெளியாகும் என எவரும் எதிர்பார்க்க வேண்டாம் என குறிப்பிட்டுள்ள அவர்,
ஆனால் அதன் தாக்கம் மக்களில் காணப்படும் வாய்ப்புகள் அதிகம் எனவும், அது பேரழிவாக இருக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
மேற்கு லண்டனில், 13- மற்றும் 14 வயதுடையவர்களில் 35% பேர் மட்டுமே போலியோ பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர்.
மேலும் நாட்டின் மிக மோசமான எண்ணிக்கையை இப்பகுதிக் கொண்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ப்ரெண்ட் பகுதியில் பதின்ம வயதுடைய 38% பேர்கள் தடுப்பூசி பெற்றுள்ளனர்.
மேலும் வெஸ்ட்மின்ஸ்டர், ஹேமர்ஸ்மித் மற்றும் புல்ஹாம், கேம்டன் மற்றும் ஈலிங் பகுதிகளில் 50% க்கும் குறைவான எண்ணிக்கையில் தடுப்பூசி பெற்றுள்ளனர்.
போலியோ பாதிப்பானது 1990 களில் இருந்து நாட்டில் எவருக்கும் உறுதி செய்யப்படாத நிலையில் 2003ல் போலியோ இல்லாத நாடாக இங்கிலாந்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.