நடப்பு கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களில் 47,000 பேர் தமிழ் பாடத்தில் தோல்வியடைந்துள்ளனர். பத்தாம் வகுப்பில் 9.12 லட்சம் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதினர்.
அவர்களில், ஆங்கிலத்தில் 45 பேரும், கணிதத்தில் 2,186 பேரும், அறிவியலில் 3,841 பேரும், சமூக அறிவியலில் 1,009 பேரும் 100-க்கு 100 என மதிப்பெண் பெற்றுள்ளனர். ஆனால், தமிழ் பாடத்தில் திருச்செந்தூரைச் சேர்ந்த துர்கா என்ற மாணவி மட்டுமே 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார். இந்த செய்தி, தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அறிஞர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து தமிழ்நாட்டுக் கல்வி இயக்கத்தின் செய்தித்தொடர்பாளரும், மேடவாக்கம் திருவள்ளுவர் தமிழ் வழிப் பள்ளியின் செயலாளருமான பா.மு.திருமலை தமிழரசனிடம் பேசினோம். “பல அரசுத் தொடக்கப் பள்ளிகளில் ஒரே ஓர் ஆசிரியர்தான் இருக்கிறார். அவர் தான் எல்லா பாடங்களையும் நடத்த வேண்டும் என்கிற அவல நிலை இருக்கிறது. தொடக்கப் பள்ளியிலிருந்தே தமிழுக்கென்று ஆசிரியர்களை அனைத்துப் பள்ளிகளிலும் நியமித்திருந்தால், தமிழ் பாடத்தில் தோல்வியடையும் நிலை எந்த மாணவருக்கும் ஏற்பட்டிருக்காது.
இங்கு சமமான கல்வி முறை இல்லை என்பதும் ஒரு முக்கியக் காரணம். பன்னாட்டு பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.சி பள்ளிகள் போன்ற பள்ளிகளில் தமிழுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்கிற நிலை இருக்கிறது. தனியார் பள்ளிகளைப்போல, அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி வந்துவிட்டது. தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்றால் போதும் என்ற மனநிலைதான் மாணவர்களுக்கு இருக்கிறது. அதனால், தமிழை அவர்கள் சரியாகப் படிப்பதில்லை. இதற்கு அரசுதான் முழுப் பொறுப்பு.
2006-ம் ஆண்டு, கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சியில், தமிழைக் கட்டாயமாக ஒரு மொழிப் பாடமாகப் படிக்க வேண்டும் என்று கொண்டுவரப்பட்டது. அதிலிருந்து விதிவிலக்கு பெறும் வகையில் நீதிமன்றத்தில் ஓர் உத்தரவைப் பெற்று, பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைத் தமிழை ஒரு மொழிப்பாடமாக படிக்காமல் செய்கின்றனர். வேறு எந்த மாநிலத்திலும் இப்படியொரு கொடுமை இல்லை.
சி.பி.எஸ்.சி பள்ளி மாணவர்கள் தமிழை ஒரு பாடமாக எடுப்பதே கிடையாது. கேரளாவிலோ, கர்நாடகாவிலோ அவர்களின் தாய்மொழி ஒரு கட்டாயப் பாடமாக பள்ளிகளில் இருக்கிறது. தமிழகத்திலோ, முதல் பாடமாகக்கூட தமிழ் இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது. மகாராஷ்டிரா, குஜராத் உட்பட எல்லா மாநிலங்களிலும் மதிப்பெண் அட்டையில், முதல் பாடத்தை மராத்தி, குஜராத்தி என்று அவரவர் தாய் மொழியைக் குறிப்பிடுகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் தமிழ் என்று இருக்க வேண்டிய இடத்தில் ‘லாங்குவேஜ்’ என்று இருக்கிறது. இது மிகப்பெரிய கொடுமை.
இந்த நிலையை மாற்றுவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முக்கியமாக, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை என்பது போன்ற நடவடிக்கையை எடுத்தால், தமிழ் வழியில் படிக்க பலரும் ஆர்வம் காட்டுவார்கள். முதலில் தமிழாசிரியர்களுக்கு கௌரவமான நிலையை அரசு ஏற்படுத்த வேண்டும். தமிழாசிரியர் என்றாலே இரண்டாம்பட்சமாகக் கருதப்படும் நிலை இருக்கிறது. இந்த நிலையை மாற்றி, தமிழாசிரியர்களுக்கு உரிய மரியாதை கொடுத்தாலே, கல்வியில் பெரிய மாற்றம் ஏற்படும்” என்கிறார் பா.மு.திருமலை தமிழரசன்.
இது குறித்து ஓய்வுபெற்ற தமிழாசிரியர் புலவர் கதிர் முத்தையனிடம் பேசினோம். “குழந்தைகள் தொடக்கக் கல்வியை கட்டாயம் தாய்மொழியில் படிக்க வேண்டும். ஐந்து வயதுக்கு உட்பட்ட பருவத்தில் தாய் மொழியில் படித்தால் சிந்திக்கும் ஆற்றல் சிறப்பாக இருக்கும். அதன் பிறகு, அவர்கள் கற்கும் ஆங்கிலம் போன்ற பிற மொழிகள் அவர்களுக்கு துணையாக இருந்து, பாடங்களைத் தெளிவாக உணர்ந்து படிக்க ஏதுவாக இருக்கும்.
ஆனால், தமிழகத்தில் அங்கன்வாடிகளிலேயே ஆங்கிலத்தைக் கொண்டுவந்துவிட்டார்கள். தொடக்கக் கல்வியில் தமிழ் மீது நாட்டம் இல்லாமல் போனதுதான், பத்தாம் வகுப்பில் அவர்கள் தோல்வியடைவதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. கர்நாடகாவில், கன்னட மொழியில் கற்பிக்க அரசு வலியுறுத்துகிறது என்பதை எதிர்த்து ஒரு தனியார் பள்ளி உச்ச நீதிமன்றம் வரை சென்றது. ஆனால், கன்னட மொழியில்தான் தொடக்கக் கல்வியை கற்பிப்போம் என்பதில் அந்த மாநில அரசு உறுதியாக இருந்தது. இன்று அங்கு அனைத்துப் பள்ளிகளிலும் கன்னடம் வழியாகவே தொடக்கக் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. அதுபோல, தமிழகத்தில் தொடக்கக் கல்வியில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என்றார் புலவர் கதிர் முத்தையன்.
இது குறித்து நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தியிடம் பேசினோம்.
“எங்கும் தமிழ்… எதிலும் தமிழ் என்ற முழக்கத்தை முன்னிறுத்தி தி.மு.க ஆட்சிக்கு வந்தது. இன்றைக்கு தமிழை முழுமையாக அவர்கள் நிராகரித்துவிட்டார்கள். இந்திக்கு பதிலாக அந்த இடத்தில் ஆங்கிலத்தைக் கொண்டுவந்துவிட்டார்கள். தமிழ் பயிற்றுமொழியாக இருக்க வேண்டும். கர்நாடகாவிலோ, கேரளாவிலோ, ஆந்திராவிலோ அந்த மாநில மொழியைப் படிக்காமல் எந்தப் படிப்பையும் முடிக்க முடியாது என்கிற நிலை இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் தமிழ் படிக்காமல் தொடக்கக் கல்வி தொடங்கி உயர்கல்வி வரை படித்துமுடிக்க முடியும்-
அரசுப் பள்ளிகளில் உள்கட்டுமானம் முக்கியப் பிரச்னையாக இருக்கிறது. தேவையான ஆசிரியர்கள், விளையாட்டுத்திடல் போன்ற வசதிகள் அரசுப் பள்ளிகளில் சரியாக இல்லை. அதனால்தான், தனியார் பள்ளிகளை நோக்கி பலரும் செல்கிறார்கள். அரசுப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்களை நியமிக்காமல், போதுமான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்காமல், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஆங்கில வழிக் கல்வியைக் கொண்டுவந்தார்கள். அதை அன்றைக்கு தி.மு.க எதிர்க்கவில்லை.
தமிழ், தமிழர் என்று நாம் பெருமையுடன் பேசினாலும், தமிழ் குறித்து தமிழர்களிடம் ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கிறது. தமிழ் படித்தால் வேலைவாய்ப்பு இல்லை என்கிற எண்ணமே உளவியலாக தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்திவிட்டது. அதனால், தமிழ் படிப்பது இழிவு என்று நினைக்கிறார்கள். தமிழோடு ஆங்கிலத்தைக் கலந்து பேசுகிறார்கள். ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்கள் தமிழுக்கு முன்னுரிமை கொடுக்காததால், தமிழ் பின்தங்கிவிட்டது. தாய்மொழியை மாணவர்கள் கற்க முடியாததும், தாய்மொழிப் பாடத்தில் மாணவர்கள் தோல்வியடைவதும் வெட்கக்கேடான விஷயம்.
50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழுக்காக மாணவர்கள் போராடினார்கள். இன்றைக்கு அடுத்த தலைமுறை மாணவர்கள் தமிழ் மொழியில் தேர்ச்சி பெறாத நிலை உருவாகிவிட்டது என்றால், அதற்கு பொறுப்பேற்க வேண்டியது திராவிட கட்சிகள்தான்” என்கிறார் இடும்பாவனம் கார்த்தி.