மும்பை: மகாராஷ்டிராவில் உச்சக்கட்ட குழப்பம் நிலவி வருகிறது. சிவசேனாவின் ஆட்சி, சின்னம் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அடுத்தக்கட்டமாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே என்ன செய்ய போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வரும் சிவசேனாவில் பிளவு ஏற்பட்டுள்ளது. சிவசேனா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் மாயமானதில் இருந்து மகாராஷ்டிர அரசியலில் நாளுக்கு நாள் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. சூரத் சென்ற அவருடன் 11 சிவசேனா எம்எல்ஏக்கள் சென்றதாக முதலில் தகவல் வெளியானது. பின்னர் 30க்கு மேல் உயர்ந்தது. சூரத்தில் இருந்து வெளியேறி, எம்எல்ஏக்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஷிண்டே தங்கியுள்ளார். அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் எண்ணிக்கை தற்போது 40ஐ தாண்டியுள்ளது. நேற்று இறுதி நிலவரப்படி சிவசேனா எம்எல்ஏக்கள் 42 பேர், தன்னுடன் இருப்பதாக ஷிண்டே கூறியுள்ளார். தவிர சுயேச்சைகளுடன் சேர்த்து அவருடன் ஓட்டலில் உள்ள எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 50ஐ தொட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.எம்எல்ஏக்கள் மட்டுமின்றி, சிவசேனா எம்பிக்களில் 14 பேர் ஷிண்டேவுக்கு ஆதரவாக உள்ளதாக வெளியான தகவல், உத்தவ் தாக்கரேவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ஷிண்டே ஆதரவாளர்கள் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமான வர்ஷா பங்களாவில் இருந்து இரவோடு இரவாக வெளியேறி, தனது இல்லமான மாதோஸ்ரீக்கு சென்று விட்டார்.இந்நிலையில், ஷிண்டேவிடம் உள்ள சிவசேனா எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை குறைத்தால் மட்டுமே தனது ஆட்சிக்கு ஆபத்து ஏற்படாது என்பதை உத்தவ் தாக்கரே உணர்ந்துள்ளார். எனவே, ஷிண்டே உட்பட 12 எம்எல்ஏக்கள் மீது கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதியிழப்பு நடவடிக்கை எடுக்குமாறு, துணை சபாநாயகரிடம் சிவசேனா கேட்டு கொண்டுள்ளது. இதற்கு ஷிண்டே, டிவிட்டரில் காரசாரமான பதிலடி கொடுத்துள்ளார். அதில், ‘யாரை பயமுறுத்த பார்க்கிறீர்கள்? எங்களுக்கும் சட்டம் தெரியும். அரசியலமைப்பு சட்டத்தின் 10வது பிரிவின்படி, கட்சி கொறடா என்பவர் பேரவை பணிகளுக்குதானே தவிர, கட்சி கூட்டம் கூட்டுவது அவரது வேலையல்ல. இதுதொடர்பாக பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்புகள் வந்துள்ளன. என் மீதும் என்னுடன் உள்ள எம்எல்ஏக்கள் 12 பேர் மீதும் நடவடிக்கை எடுப்பதாக கூறுகிறீர்கள். இப்படியெல்லாம் சொல்லி பயமுறுத்த முடியாது. ஏனெனில் நாங்கள் உண்மையான சிவசேனைகள். பால் தாக்கரேயின் சிவசேனைகள். போதுமான பலம் இல்லாமல் ஆட்சி நடத்துகிறீர்கள். எனவே, உங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோர வேண்டிய தருணம் இது’’ என கூறியுள்ளார். உத்தவ் தாக்கரேக்கு ஷிண்டே நேரடியாக விடுத்த இந்த பதிலடி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஷிண்டேவின் இந்த கருத்தால் முதல்வர் உத்தவ் தாக்கரே கொந்தளித்து போயிருக்கிறார். முதல் கட்டமாக அதிருப்தி எம்எல்ஏக்கள் 38 பேரையும் மீண்டும் வசப்படுத்த சிவசேனா பல்வேறு முயற்சிகளையும் எடுத்துள்ளது. அது ஒருபுறம் இருக்க அதிருப்தி எம்எல்ஏக்கள் 12 பேரை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ் இன்று அல்லது நாளை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அந்த 12 பேருடன் மேலும் 4 அதிருப்தி எம்எல்ஏக்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக சிவசேனா எம்.பி. அரவிந்த சாவந்த் தெரிவித்தார். நேற்றிரவு அவர் நிருபர்களை சந்தித்தபோது, ‘சஞ்சய் ராய்முல்கர், சிமன் பாட்டீல் ரமேஷ் போர்னேர், பாலாஜி கல்யாண்கர் ஆகியோர் தகுதி நீக்கம் செய்யப்படலாம்’ என்றார். ஆனாலும் உத்தவ் தாக்கரேவின் கலக குரலை ஜீரணிக்க முடியவில்லை. அடுத்தடுத்து சமூக வலைதளங்களில் பேசும் உத்தவ் தாக்கரே, நேருக்கு நேராக வந்து சொல்லுங்க.. பதவியை ராஜினாமா செய்கிறேன். என்னால கட்சியை நடத்த முடியாதுன்னு நேரில் வந்து சொல்லுங்க. கட்சியை விட்டே போகிறேன்’ என உருக்கமாக பேசி வருகிறார்.உத்தவ் தாக்கரேவின் இந்த உருக்கமான பேச்சு சிவசேனா தொண்டர்களை கொந்தளிக்கவும் வைத்திருக்கிறது. அதிருப்தி எம்எல்ஏக்களின் அலுவலகங்களை சிவசேனா தொண்டர்கள் சூறையாடி இருக்கின்றனர். இப்போதைக்கு சிவசேனா என்ற கட்சியின் பெயர், அதன் வில் அம்பு சின்னம் என அத்தனைக்கும் ஏக்நாத் ஷிண்டே உரிமை கோர திட்டமிட்டுள்ளார். இது பால்தாக்கரே குடும்பத்துக்கே பெருத்த அவமானமாக பார்க்கப்படுகிறது. இதனை உத்தவ் தாக்கரே அவ்வளவு எளிதாக விட்டு கொடுத்து விடுவார் எனவும் கூற முடியாது. இனிவரும் நாட்களில் சிவசேனா தொண்டர்கள் தெருக்களில் இறங்கி அதிருப்தியாளர்கள் மற்றும் பாஜவுக்கு எதிராக உக்கிர முகத்தை காட்டுவார்கள் எனவும் கூறப்படுகிறது.இந்நிலையில், சிவசேனா கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று மதியம் 1 மணிக்கு கூடியது. அதேபோல் கட்சி தொண்டர்களுக்காக பிர்லா மாதோஸ்ரீஅரங்கத்தில் மகாராஷ்டிரா அமைச்சரும் உத்தவ் தாக்கரேவின் மகனுமான ஆதித்ய தாக்கரே உரையாற்றுகிறார். அதே நேரத்தில் அடுத்தக்கட்ட நகர்வு குறித்தும் கிளர்ச்சியாளரான சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே இன்று பிற்பகல் கவுகாத்தியில் உள்ள தனியார் ஓட்டலில் ஆலோசனை நடத்த உள்ளார்.பாஜவுக்கு தொடர்பில்லை சந்திரகாந்த் பாட்டீல்பாஜ மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறுகையில், “மகாவிகாஸ் அகாடி அல்லது சிவசேனா கட்சிக்குள் நடக்கும் பிரச்னைகளுக்கும் பாஜவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நேற்று முன்தினம் மதியம் மும்பையில் தேவேந்திர பட்னாவிசுடன் நான் மதிய உணவு சாப்பிட்டேன். அதன் பிறகு அவர் சில வேலை காரணமாக டெல்லி சென்று விட்டேன்” என்றார். இதேபோல பாஜ மும்பை நிர்வாகி மோகித் கம்போஜ் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களுடன் அசாமில் இருப்பது குறித்து கேட்ட போது, ‘மோகித் கம்போஜிக்கு எல்லா கட்சியிலும் நண்பர்கள் உள்ளனர். எனவே சிலருக்கு உதவி செய்ய அவர் அங்கு சென்றிருக்கலாம்’ என்றார்.ஷிண்டே துரோகம் செய்து விட்டார் ஆதித்யா தாக்கரேமகாராஷ்டிரா மாநில சுற்றுலா துறை அமைச்சர் ஆதித்யா தாக்கரே கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘பேஸ்புக்கில் முதல்வர் உத்தவ்தாக்கரே பேசியதில் எனக்கு கண்ணீர் வந்துவிட்டது. பதவிக்காக அரசியலில் துரோகம் செய்வதை ஏற்க முடியாது. பதவி இன்று போகும், நாளை வரும். நண்பர்கள் துரோகம் செய்தால் தாங்கி கொள்ளலாம். ஆனால் ஏக்நாத் ஷிண்டேவிற்கு அமைச்சர் பதவி கொடுத்து குடும்ப உறுப்பினராக நன்றாக பழகி இறுதியில் துரோகம் செய்து விட்டார். 25 ஆண்டாக எதிரியாக இருந்த எதிர்கட்சியினரான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியினர், தற்போது நண்பர்களாக இணைந்து மாநில அரசை வழிநடத்தி வருகிறோம். கடந்த இரண்டரை ஆண்டாக முதல்வர் உத்தவ்தாக்கரே கடும் உழைப்பை வழங்கி உள்ளார். கொரோனா காலத்திலும், கட்சியை பார்க்காமல் அனைத்து மக்களுக்கும் உதவிகளை செய்ததை யாரும் மறுக்க முடியாது’ என்றார்.நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிருப்தி எம்எல்ஏக்கள்இந்த சம்பவம் தொடர்பாக சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் கூறுகையில், ‘அதிருப்தி எம்எல்ஏக்களின் காரணமாக சட்டமன்றத்தில் எங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதிருப்தியாளர்கள் குழு, தன்னிடம் தேவையான எண்ணிக்கையில் இருப்பதாகவும், ஜனநாயக முறையில் தாங்கள் இயங்குவதாகவும் கூறுகின்றனர். ஆனால் இந்த எண்ணிக்கை எப்போது வேண்டுமானாலும் மாறலாம். அதிருப்தியாளர்கள் திரும்பி வரும்போது, பாலாசாகேப் தாக்கரே மற்றும் சிவசேனா மீதான அவர்களின் விசுவாசத்தை அது சோதிக்கும். இது ஒரு சட்ட போராட்டம். சில விதிகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் சில உத்தரவுகள் உள்ளன. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உள்ளடக்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி ஒன்றாக உள்ளது. அதிருப்தி எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது மகா விகாஸ் அகாடிக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று நம்புகிறோம். அதிருப்தி எம்எல்ஏக்கள் மும்பைக்கு திரும்புவதற்காக கட்சி காத்திருக்கிறது. முதல்வரும் நம்புகிறார்’ என்றார்.