புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி காய்கறி வண்டியில் அமர்ந்திருந்த ஏழரை வயது சிறுமியை பெற்றோர் முன்னிலையில் மனோஜ் பிரதாப் சிங் என்ற 28 வயது வாலிபன் கடத்தி சென்றான். உத்தர பிரதேசத்தை சேர்ந்த இவன், மனநலம் குன்றிய, மாற்றுத் திறனாளியான அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அந்த வாலிபர் சிறுமியின் தலையை தரையில் அடித்து சிதைத்து கொடூரமாக கொலை செய்தான். இந்த வழக்கை விசாரித்த ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டு மே 29ம் தேதி பிரதாப்புக்கு மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவன்மேல்முறையீடு செய்தான். இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.எம்.கான்வீல்கர், தினேஷ் மகேஸ்வரி மற்றும் சிடி ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், ‘குற்றம் மிகவும் கொடூரமாக உள்ளது. மனசாட்சியை அதிர்ச்சிக்கு உள்ளாகுகிறது. மனநலம் பாதிக்கப்பட்ட, மாற்றுத் திறனாளி சிறுமி திட்டமிட்டு பாலியல் பலாத்காரம் செய்து தலை அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. குற்றத்தின் தன்மையை பார்க்கும்போது மரண தண்டனையை உறுதி செய்வது தவிர வேறு வழியில்லை. எனவே, உயர் நீதிமன்றம் விதித்த மரண தண்டனை உறுதி செய்யப்படுகிறது,’ என்று உத்தரவிட்டு மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.