மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சிக்கு எதிராக அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கிளம்பியுள்ள நிலையில், கட்சி மற்றும் ஆட்சி தொடர்பாக கட்சி நிர்வாகிகளின் அச்சத்தை போக்கும் வகையில் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே காணொலி மூலம் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:
இதுபோன்ற கிளர்ச்சிகளை கட்சி இதற்கு முன்பும் எதிர் கொண்டுள்ளது. என்றாலும் இரண்டு முறை ஆட்சிக்கு வந்துள்ளது. முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை நான் காலி செய்திருக்கலாம். என்றாலும் மன தைரியத்தை நான் இழக்கவில்லை. கடந்த இரண்டரை ஆண்டுகளில் கரோனா பெருந்தொற்றுக்கு எதிராகவும் எனது உடல்நலக் குறைவுக்கு எதிராகவும் நான் போராடினேன்.
இதை எதிரிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர். எனினும், இந்த நெருக்கடியில் இருந்து வெற்றி பெற்று வருவோம்” என்றார்.
மும்பையில் சேனா பவனில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வரின் மகனும் அமைச்சருமான ஆதித்ய தாக்கரேவும் கலந்து கொண்டார். சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறும்போது, “தோல்வியை நாங்கள் ஒப்புக்கொள்ள மாட்டோம். எங்கள் அரசு அதன் பதவிக் காலம் முழுவதும் நீடிக்கும்” என்றார்.
எம்எல்ஏ அலுவலகம் மீது தாக்குதல்
மகாராஷ்டிராவின் குர்லா சட்டப்பேரவை தொகுதி சிவசேனா எம்எல்ஏ மங்கேஷ் குண்டல்கர், அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டேவுடன் கைகோத்துள்ளார். அவரது அலுவலகம் குர்லாவில் உள்ளது. அந்த அலுவலகத்தை சிவசேனா தொண்டர்கள் நேற்று சூறையாடினர்.
தலைநகர் மும்பை, அகமது நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சொந்தமான இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.