“முதல்வர் பதவியை தக்க வைப்பது குறித்தோ, ஆட்சியை காப்பாற்றுவது குறித்தோ எனக்கு ஒரு துளி கூட கவலை இல்லை; ஆனால் எனது சொந்த கட்சியினரே என் முதுகில் குத்தியது தான் மிகவும் வலிக்கிறது” என்று மகாராஷ்ட்ரா முதல்வரும் சிவசேனா கட்சி தலைவருமான உத்தவ் தாக்கரே உருக்கமாக தெரிவித்தார்.
மகாராஷ்ட்ராவில் ஆளும் சிவசேனாவுக்கு எதிராக அக்கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்களே போர்க்கொடி தூக்கியுள்ளனர். அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 30-க்கும் மேற்பட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் தற்போது அசாம் மாநிலம் குவாஹாட்டியில் முகாமிட்டுள்ளனர். மேலும் 10 சிவசேனா எம்எல்ஏக்கள் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான ‘மகா விகாஸ் அகாடி’ ஆட்சி கவிழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அதிருப்தி எம்எல்ஏக்களிடம் சிவசேனா தலைவர்கள் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் இறங்கி வருவதாக தெரியவில்லை. இதனைத் தொடர்ந்து, அந்த எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வது குறித்து முதல்வர் உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தி வருகிறார். ஆனால், அவ்வாறு தகுதி நீக்கம் செய்தால் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சிவசேனாவுக்கு பாதிப்பு ஏற்பட்டு, பாஜகவுக்கு சாதகமாக மாறிவிடும் என்பதால் குறிப்பிட்ட சில எம்எல்ஏக்களை மட்டும் தகுதி நீக்கம் செய்து மற்ற எம்எல்ஏக்களை மீண்டும் தங்கள் வசம் இழுக்கும் முயற்சியில் சிவசேனா ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு உத்தவ் தாக்கரே ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் அவர், “பாஜகவின் உத்தரவின் பேரிலேயே ஏக்நாத் ஷிண்டே சிவசேனா எம்எல்ஏக்களை அசாமில் தங்க வைத்துள்ளார். இதில் பல எம்எல்ஏக்கள் மிரட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் உள்ளாகியுள்ளனர். சிவசேனாவை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என பாஜக நினைக்கிறது. இதற்கான கருவியாக ஏக்நாத் ஷிண்டேவை அக்கட்சி பயன்படுத்துகிறது. ஏக்நாத் ஷிண்டே கூறுவது போல அவர்களிடம் மூன்றில் இரண்டு பகுதி எம்எல்ஏக்கள் இல்லை. எனவே அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்வது எளிதானது தான். முதல்வர் பதவியை தக்க வைப்பது குறித்தோ, ஆட்சியை காப்பாற்றுவது குறித்தோ எனக்கு ஒரு துளி கூட கவலை இல்லை. ஆனால் எனது சொந்த கட்சியினரே என் முதுகில் விட்டார்களே என நினைக்கும் போது வலிக்கிறது” என அவர் கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM