மும்பை தாக்குதல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியும், பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டவருமான தீவிரவாதி ஷாஜித் மிர்ரை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதியன்று பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பைக்குள் நுழைந்து பல இடங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தினர். தாஜ் ஓட்டல், டிரிடெண்ட் ஓட்டல், சிஎஸ்டி ரயில் நிலையம், காமா மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 170 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட 9 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டார். பின்னர் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்தியா மட்டுமல்லாமல் உலகையே உலுக்கிய இந்த தீவிரவாத தாக்குதலுக்கு, பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜமாத் உல் தாவா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சையது, ஜாகீர் உர் ரஹ்மான், ஷாஜித் மிர் உள்ளிட்ட தீவிரவாதிகளே மூளையாக செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய அரசு பாகிஸ்தானுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தது. ஆனால், அந்தக் கோரிக்கையை பாகிஸ்தான் ஏற்கவில்லை. பின்னர் இந்தியா கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அமெரிக்கா இந்த விவகாரத்தில் தலையிட்டு மேற்கூறிய தீவிரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பாகிஸ்தானை வலியுறுத்தியது. அமெரிக்கா இந்த விஷயத்தில் தலையிடும் என எதிர்பார்க்காத பாகிஸ்தான், ஹஃபீஸ் சையது, ஜாகீர் உர் ரஹ்மான் உள்ளிட்டோரை தீவிரவாதத்துக்கு நிதியுதவி அளித்த வழக்குகளில் அண்மையில் கைது செய்தது. ஆனால், இந்த நடவடிக்கையை கண்துடைப்பு நாடகம் என இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.
இதனிடையே, மும்பை தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி ஷாஜித் மிர் ஒரு விபத்தில் உயிரிழந்து விட்டதாக சில ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் அறிவித்தது. எனினும், பாகிஸ்தானின் இந்த அறிவிப்பை இந்தியா நம்பவில்லை. ஷாஜித் மிர் உயிருடன் தான் இருக்கிறார் என கூறி வந்தது. இந்த சூழலில், இறந்ததாக கூறப்பட்ட ஷாஜித் மிர்ரை பாகிஸ்தான் ராணுவம் நேற்று கைது செய்தது. தீவிரவாத இயக்கத்துக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். கராச்சி நீதிமன்றம் அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையை விதித்துள்ளது.
ஷாஜித் மிர் உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்களை இந்திய உளவு அமைப்புகள் திரட்டி வந்தன. இந்த ஆதாரங்களை, இந்தியா சர்வதேச தளங்களில் வெளியிட்டால், தீவிரவாத நிதி வழங்கல் தடுப்புப் படையின் (எஃப்ஏடிஎஃப்) தடை பட்டியலில் இருந்து வெளிவர முடியாது என்ற அச்சத்தின் காரணமாகவே ஷாஜித் மிர்ரை அவசர அவசரமாக பாகிஸ்தான் கைது செய்துள்ளதாக இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM