இலங்கையின் சமகால அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையில் தீவிரம் அடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நியமித்த போதும், இருவருக்கும் இடையிலான அதிகார மோதல் உட்பூசலமாக மாறியுள்ளது.
உள்ளக மோதல் தீவிரம்
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரை நியமிப்பதில் ஏற்பட்ட இழுபறியே இதற்கான காரணமாகும். எனினும் ஜனாதிபதியின் கடும் அழுத்தம் காரணமாக தற்போதைய ஆளுநரை தொடர்ந்தும் செயற்பட ரணில் இணக்கம் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் மத்திய வங்கி ஆளுநரை பதவியில் இருந்து நீக்குவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் பொதுஜன பெரமுன கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ரணிலுக்கு கடும் எச்சரிக்கை
மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவை நீக்குவதனால் அரசாங்கத்தின் உள்ளகத்தில் தேவையற்ற நெருக்கடிகள் உருவாகும் என அந்த உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, மத்திய வங்கியின் ஆளுநரை நீக்கும் தீர்மானம் இருந்தால் உடனடியாக அதனை நிறுத்த வேண்டும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் புஷ்ப குமார பிரதமருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நந்தலால் வீரசிங்க ஒரு இக்கட்டான சூழ்நிலையிலிருந்து நாட்டைக் காப்பாற்ற முன்வந்த திறமையான நேர்மையான அதிகாரி என்று அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சதி நடவடிக்கையில் பசில்
இவ்வாறான திறமையான அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பாமல், அவர்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாமல் மத்திய வங்கி ஆளுநரை நீக்கினால் தேவையற்ற நெருக்கடிகள் உருவாக கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியில் அகற்றும் வேலைத்திட்டங்களை திரைமுறையில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ முன்னெடுத்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.