உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு பதிலடியாக பொருளாதாரத் தடைகளை விரிவுபடுத்தும் நோக்கில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் G7 நாடுகளின் தலைவர்களும் ரஷ்யாவிலிருந்து தங்கத்தின் இறக்குமதிக்கு தடை விதிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மக்களுக்கு எதிரான விளாடிமிர் புடினின் ரத்தக்களரி நடவடிக்கைக்கு பணம் ஈட்டும் அனைத்து நடவடிக்கைகளையும் தடை செய்யும் முயற்சியில் அமெரிக்கா உலக நாடுகளுடன் களமிறங்கியுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்க கருவூலத் திணைக்களமானது ரஷ்யாவில் இருந்து புதிதாக தங்கத்தை இறக்குமதி செய்வதைத் தடை செய்வதற்கான தீர்மானத்தை செவ்வாயன்று வெளியிடும் என கூறப்படுகிறது.
இந்த நகர்வானது தங்க சந்தையில் பங்கேற்பதைத் தடுப்பதன் மூலம் உலகப் பொருளாதாரத்தில் இருந்து ரஷ்யாவை மேலும் தனிமைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் வர்த்தக தங்க ஏற்றுமதிகளை நேரடியாக குறிவைக்கவில்லை. ஆனால் பல வங்கிகள், ஏற்றுமதி செய்பவர்கள் மற்றும் சுத்திகரிப்பாளர்கள் உக்ரைனில் போர் தொடங்கிய பின்னர் ரஷ்ய தங்கத்தை கையாள்வதை நிறுத்திவிட்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் வெட்டி எடுக்கப்படும் தங்கத்தில் ரஷ்யா 10% உற்பத்தி செய்கிறது. 2014ல் உக்ரைன் பகுதியான கிரிமியாவை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததில் இருந்து ரஷ்யாவின் தங்கம் கையிருப்பு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
தற்போது ரஷ்ய தங்கத்தின் இறக்குமதிக்கு தடை விதிப்பது என்பது, விளாடிமிர் புடின் நிர்வாகத்திற்கு பேரிடியாக அமையும் என்றே கூறப்படுகிறது.