வயநாடு: கேரளாவில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியின் அலுவலம் சூறையாடப்பட்டது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.யாக உள்ளார். வயநாட்டில் அவரது அலுவலகம் உள்ளது. நேற்று பிற்பகல் 3 மணி அளவில் ராகுல் காந்தியின் அலுவலகத்தில் புகுந்த சிலர் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். அங்கிருந்த ஊழியர்களையும் தாக்கிவிட்டு அந்தக் கும்பல் தப்பிச் சென்றுவிட்டது. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இது தொடர்பாக கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, ‘‘இந்திய மாணவர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ராகுல் காந்தியின் அலுவலகத்தில் புகுந்து ஊழியர்களை தாக்கியதோடு அலுவலகத்தையும் சூறையாடி உள்ளனர்.
அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி உள்ளனர். இதை போலீஸார் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர். இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டமிட்ட சதி. தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
ராகுல் காந்தியின் அலுவலகம் சூறையாடப்படும் காட்சிகளை காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதோடு, ‘‘கேரள முதல்வர் பினராயி விஜயன், மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி ஆகியோரின் அரசியல் சிந்தனை இதுதானா?’’ என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
8 பேர் கைது
இதனிடையே, ராகுல் காந்தி அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் இருந்து குறைந்தபட்சம் ஒரு கி.மீ. தூரம் கட்டாய சுற்றுச்சூழல் மண்டலமாக மாற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி போராட்டங்கள் நடந்து வருகிறது.
இது தொடர்பாக வயநாட்டில் இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்று ஊர்வலமாகச் சென்றனர். அப்போது, இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி தலையிடாமல் அமைதியாக இருப்பதைக் கண்டித்து ஊர்வலத்தில் சென்றவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
மத்திய அரசு மீது புகார்
புதிய இந்தியாவில் நண்பர்களுக்கு மட்டுமே அரசு காது கொடுக்கிறது, நாட்டின் நாயகர்களுக்கு அல்ல என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
மத்திய அரசின் அக்னிபாதை திட்டத்தை, பரம்வீர் சக்ரா விருது பெற்ற கேப்டன் பானா சிங் விமர்சித்திருந்தார். அவரது ட்விட்டர் பதிவின் ஸ்கிரீன் ஷாட்டை ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டு பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து ராகுல் தனது பதிவில், “ஒரு பக்கம் நாட்டின் பரம்வீர். மறுபக்கம் பிரதமரின் ஆணவமும் சர்வாதிகாரமும். புதிய இந்தியாவில் நண்பர்களுக்கு மட்டுமே அரசு காது கொடுக்கிறது. நாட்டின் நாயகர்களுக்கு அல்ல” என்று கூறியுள்ளார்.
கேட்டன் பானா சிங் தனது ட்விட்டர் பதிவில், “அக்னிபாதை திட்டம் நம்மை மோசமாக பாதிக்கும். ராணுவத்தை அழித்துவிடும். இந்தியா ஒரு முக்கியமான கட்டத்தில் செல்கிறது. நமது தாய்நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள்” என்று கூறியிருந்தார். பிறகு அவர் தனது ட்வீட்டை நீக்கிவிட்டார்.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது பதிவில், “பரம்வீர் சக்ரா விருது பெற்ற ஒருவர் அக்னிபத் திட்டத்துக்கு எதிரான நேர்மையான, இதயப்பூர்வமான ட்வீட்டை நீக்க வேண்டியிருந்தது. மோடியின் இந்தியாவில் பேச்சு சுதந்திரம் மட்டுமல்ல, பேச்சுக்கு பிந்தைய சுதந்திரமும் ஆபத்தில் உள்ளது என்பதையே இது காட்டுகிறது” என்று கூறியுள்ளார்.