ராமநாதபுரம்: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். அதனையடுத்து தனுஷ்கோடி அரிச்சல்முனை, அப்துல் கலாம் இல்லம், அப்துல் கலாம் நினைவிடம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். பின்னர் நேற்று மாலை மதுரையிலிருந்து கார் மூலம் ராமேசுவரம் செல்லும் வழியில் ராமநாதபுரம் அரசு விருந்தினர் இல்லத்தில் சற்று ஓய்வு எடுத்துவிட்டு சென்றார்.
பின்னர் ராமேசுவரம் தனியார் தங்கும் விடுதியில் குடும்பத்தினருடன் தங்கினார். இன்று அதிகாலை தங்கும் விடுதியிலிருந்து அக்னி தீர்த்தக் கடற்கரைக்குச் சென்று, ஆளுநரும், அவரது குடும்பத்தினரும் தலையில் தீர்த்தம் தெளித்துக் கொண்டனர்.
அதன்பின் கிழக்கு கோபுரம் வழியாக ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்த ஆளுநருக்கு கோயில் சார்பில் பூர்ண கும்ப மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை ஆகியோர் உடனிருந்தனர்.
அதனையடுத்து ஸ்படிக லிங்க பூஜையில் பங்கேற்றார். தொடர்ந்து கோயில் வளாகத்திற்குள் கலசங்களில் வைக்கப்பட்டிருந்த 22 தீர்த்தங்களின் புனித நீரை தலையில் தெளித்துக்கொண்டு, ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்மாள் சன்னதிகளில் குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார்.
தொடர்ந்து உலகப்புகழ் பெற்ற மூன்றாம் பிரகாரத்தையும் ஆளுநர் பார்வையிட்டார். கோயிலில் உள்ள வருகைப்பதிவேட்டில் ஆளுநர் கையெழுத்திட்டார். அதன்பின் ஆளுநர் தனுஷ்கோடி அரிச்சல்முனை சென்று பார்வையிட்டார்.
பின்னர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் இல்லத்திற்குச் சென்று பார்வையிட்டார். அங்கு கலாமின் அண்ணன் மகள் நசீமா மரைக்காயர், அண்ணன் பேரன் சேக் சலீம் ஆகியோரை சந்தித்து பேசினார்.
அதன்பின் தங்கச்சிமடம் பேக்கரும்பில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவிடத்திற்குச் சென்று, அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் ஆளுநர் காரில் மதுரை விமான நிலையம் புறப்பட்டுச் சென்றார். ஆளுநர் வருகையை முன்னிட்டு ராமேசுவரம் கோயில், பேருந்து நிலையம், தனுஷ்கோடி அரிச்சல் முனை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.