புதுடெல்லி: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கவச வாகனங்கள் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட நிலையில், அவை லடாக் எல்லைப் பகுதிகளில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு உள்நாட்டிலேயே ஆயுதங்கள் உற்பத்தியை ஊக்குவித்து வருகிறது. அதன்படி நிறைய ஆயுதங்கள் தயாரிக்கப்படுகின்றன.
இதுகுறித்து ராணுவத்தின் வடக்கு பிராந்திய கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர துவிவேதி நேற்று கூறும்போது, “உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐபிஎன்வி என்ற கவச வாகனங்கள் இந்திய ராணுவத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சேர்க்கப்பட்டன. மலைப்பாங்கான லடாக் பகுதியில் இவை சோதிக்கப்பட்டு, அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அங்குள்ள வீரர்களின் போர்த்திறனை இந்த வாகனங்கள் மேம்படுத்தியுள்ளன. இந்த வாகனத்தை ஒருவர் எளிதாக ஓட்ட முடியும். அதிலிருந்து 1,800 மீட்டர் தொலைவு வரை பார்க்க முடியும். இதில் பொருத்தப்பட்டிருக்கும் ஆயுதங்களை அதன் உள்ளே இருந்தே கட்டுப்படுத்த முடியும்” என்றார்.
டிஆர்டிஓ (பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்) மற்றும் டாடா குழுமம் இணைந்து ஐபிஎம்வி கவச வாகனங்களை தயாரித்தன.