வெளிநாட்டு நாணயத்தை வைத்திருப்பதில் வரையறை – பொது மன்னிப்பு காலமும் அறிவிப்பு

வெளிநாட்டு நாணயத்தை வைத்திருப்பதில் வரையறை விதிக்கப்பட்டுள்ளதுடன் அது தெடார்பில் விதிமுறைகள மற்றும் நிபந்தனைகளில் திருத்தத்தை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

பொதுமக்கள் தமதுவசமுள்ள வெளிநாட்டு நாணயத்தை முறையான வங்கி முறைக்குள் ஈர்க்கும் நோக்கத்துடன், நிதியமைச்சர் 2017 ஆம் ஆண்டின் அந்நியச் செலாவணிச் சட்டம் எண்.12 இன் பிரிவு 8 இன் கீழ் இதுதொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதற்கமைலாக இலங்கை பிரஜை ஒருவர் அல்லது இலங்கையில் வசிக்கும் ஒருவர் தம்வசம் வைத்திருக்கும் வெளிநாட்டு நாணயத்தின் தொகை 15,000 அமெரிக்க டொலர்களில் இருந்து 10,000 அமெரிக்க டொலர்களாக அல்லது அதற்கு சமமானதாக குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக உள்ள வெளிநாட்டு நாணயங்களை ஒரு வெளிநாட்டு வணிக நாணயக் கணக்கில் வைப்பீட செய்யப்பட வேண்டும் அல்லது உரிமம் பெற்ற வணிக வங்கிக்கு விற்கப்பட வேண்டும்.

இம்மாதம் 16ஆம் திகதி முதல் 14 வேலை நாட்களுக்கு அமைவாக பொது மன்னிப்புக் காலம் வழங்கப்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந்த பொதுமன்னிப்புக் காலத்திற்கு மேலாக , இந்த விதிமுறையை மீறி வெளிநாட்டு நாணயங்களை வைத்திருப்பவர்களுக்கு எதிராக அந்நிய செலாவணி சட்டத்தின் விதிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

பொதுமக்களின் கைகளிலுள்ள வெளிநாட்டு நாணயத்தை முறைசார்ந்த வங்கித்தொழில் முறைமையினுள் கொண்டுவரும் நோக்குடன், நிதி அமைச்சர் 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் 8ஆம் பிரிவின் கீழ் வழங்கப்பட்ட கட்டளைக்கு பின்வருமாறு திருத்தமொன்றினை வழங்கியுள்ளார்.

இலங்கையிலுள்ள, அல்லது வதிகின்ற ஆளொருவரினால் உடமையில் வைத்திருக்கப்படும் வெளிநாட்டு நாணயத் தொகையை ஐ.அ.டொலர் 15,000 இலிருந்து ஐ.அ.டொலர் 10,000 அல்லது வேறு வெளிநாட்டு நாணயங்களில் அதற்குச் சமனான தொகைக்குக் குறைத்தல்.
வெளிநாட்டு நாணயத்தை உடமையில் வைத்திருக்கின்ற இலங்கையிலுள்ள, அல்லது வதிகின்ற ஆட்களுக்காக பின்வருவனவற்றுக்காக கட்டளைத் திகதியிலிருந்து (2022 யூன் 16) செயற்படத்தக்கவாறு 14 வேலை நாட்களைக் கொண்ட பொதுமன்னிப்புக் காலத்தை வழங்குதல்:
i.கட்டளையில் குறித்துரைக்கப்பட்டவாறு தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கில் அல்லது வியாபார வெளிநாட்டு நாணயக் கணக்கில் வைப்பிலிடுதல், அல்லது

ii.அதிகாரமளிக்கப்பட்ட வணிகருக்கு (உரிமம்பெற்ற வர்த்தக வங்கி அல்லது தேசிய சேமிப்பு வங்கி) விற்பனை செய்தல்.

சொல்லப்பட்ட பொதுமன்னிப்புக் காலப்பகுதியின் இறுதியில் வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் நியதிகளுக்கமைய கட்டளையை மீறி வெளிநாட்டு நாணயத்தை உடமையில் வைத்திருக்கின்ற ஆட்களுக்கெதிராக நடவடிக்கைகளைத் தொடுப்பதற்கு இலங்கை மத்திய வங்கி உரிமையைக் கொண்டிருக்கும்.

மேலதிகத் தகவல்களுக்கு நீங்கள்;

(அ) ஏதேனும் உரிமம்பெற்ற வர்த்தக வங்கியை அல்லது தேசிய சேமிப்பு வங்கியைத் தொடர்புகொள்ளலாம்.

(ஆ) வெளிநாட்டுச் செலாவணித் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.dfe.lk ஊடாக 2284/34 ஆம் இலக்க 2022 யூன் 16ஆம் திகதியிடப்பட்ட வர்த்தமான பத்திரிகை (அதிவிசேட) அறிவித்தலில் வெளியிடப்பட்ட வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் 8ஆம் பிரிவின் கீழான கட்டளையைப் பார்க்கலாம்.

(இ)வெளிநாட்டுச் செலாவணித் திணைக்களத்தை 011-2477255, 011-2398511 என்ற இலக்கமூடாகவும் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சலூடாகவும் தொடர்புகொள்ளலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.