10 அத்தியாவசிய உணவுப் பொருட்களை திறந்த கணக்கு மூலம் பணம் செலுத்தி இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
திங்கட்கிழமை (27) 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களை திறந்த கணக்குகள் மூலம் இரண்டு மாதங்களுக்கு இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.
உண்டியல் / ஹவாலா தீர்வு முறைகள் மூலம் செய்யப்படும் அதிகாரப்பூர்வமற்ற பணப் பரிமாற்றங்களைத் தடுப்பதற்காக, திறந்த கணக்கு மூலம் பணம் செலுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது.
இருப்பினும் தற்போது ஏற்பட்டுள்ள சவாலான நெருக்கடியை சமாளிக்க பிரதமர் அலுவலகம் தலைமையில் வர்த்தக அமைச்சு, மத்திய வங்கி மற்றும் இறக்குமதியாளர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான திறந்த கணக்கு இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மிளகாய், உருளைக்கிழங்கு, வெங்காயம், அரிசி, பருப்பு மற்றும் கோதுமை மாவு ஆகியவை அத்தியாவசிய உணவுப் பொருட்களில் அடங்கும், அவை திறந்த கணக்கின் மூலம் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வரையறுக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்க அனுமதிக்கும் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.