மகாராஷ்ட்ராவில் அரசியல் குழப்பங்கள் உச்சத்தை தொட்டிருக்கின்றன. ஆட்சி கவிழும் சூழலில் அடுத்தடுத்த திருப்பங்கள் நடந்துவருகின்றன. இந்நிலையில், அதிருப்தி அமைச்சர்கள் அடுத்த 24 மணி நேரத்தில் தங்களது பதவிகளை இழப்பார்கள் என்று சிவசேவை கட்சி எம்பியும் மூத்த தலைவருமான சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவசேனாவின் 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு துணை சபாநாயகர் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ள ஏக்நாத் ஷிண்டே, அசாமில் உள்ள சொகுசு விடுதியில் தனது ஆதரவாளர்களுடன் முகாமிட்டுள்ளார். அதிருப்தி எம்.எல்.ஏ.-க்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், உத்தவ் தாக்கரேவின் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, சிவசேனாவின் தேசிய செயற்குழு கூட்டம் உத்தவ் தாக்கரே தலைமையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, கவுகாத்தியில் தங்கியுள்ள 16 அதிருப்தி எம்.எல்.ஏ.-க்களுக்கு மராட்டிய துணை சபாநாயகர் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவர்கள் அனைவரும் வரும் திங்கட்கிழமைக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிருப்தி அமைச்சர்கள் அடுத்த 24 மணி நேரத்தில் தங்களது பதவிகளை இழப்பார்கள் என்று சிவசேவை கட்சி எம்பியும் மூத்த தலைவருமான சஞ்சய் ராவத் கூறியுள்ளார். மேலும், “சிவசேனா தொண்டர்களுக்கு விஸ்வாசமானவர்கள் என்று கருதப்பட்ட குலப்ராவ் பாட்டில், ததா புஷே, சண்டிபன் பும்ரே ஆகியோருக்கு உத்தவ் தாக்கரேவால் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு போதுமான அளவிற்கு எல்லாமே செய்து கொடுத்தாகிவிட்டது. அவர்கள் தவறான பாதையை தேர்வு செய்துவிட்டனர். 24 மணி நேரத்தில் அவர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM