புதுடெல்லி: ஐந்து மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் மக்களவை 3, சட்டப்பேரவையின் 7 தொகுதிகளுக்கான தேர்தல் முடிந்துள்ளது. நாளை மறுநாள் வெளியாகவிருக்கும் இதன் முடிவுகளின் தாக்கம் என்ன எனும் கேள்வி எழுந்துள்ளது.
இதில் டெல்லி, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், திரிபுரா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. திரிபுராவின் நான்கு சட்டப்பேரவைத் தொகுதி தேர்தலில் முதல்வர் மாணிக் சாஹா ஒரு முக்கிய வேட்பாளராக உள்ளார். பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் தங்கள் வேட்பாளர்களை நான்கிலும் போட்டியிட வைத்துள்ளன. இந்த நிலை, வாக்குகள் பிரிந்து பாஜகவிற்கு சாதகமாகும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த முறை, இடைத் தேர்தலின் முடிவுகள் டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு மிகவும் முக்கியமாகி விட்டது. இக்கட்சியிடம் இருந்த பஞ்சாபின் சங்ரூர் மக்களவை மற்றும் டெல்லியின் ராஜேந்தர்நகர் சட்டப்பேரவை ஆகியன இருந்தன. சங்ரூரின் எம்.பியாக இருந்த பக்வந்த் மான் கடந்த பிப்ரவரி 20-இல் முடிந்த பஞ்சாப் சட்டப்பேரவையின் தூரி தொகுதியில் போட்டியிட்டிருந்தார். இதன் எம்எல்ஏவானவர், பஞ்சாபின் முதல்வர் பதவியிலும் அமர்ந்துள்ளார்.
தற்போது பஞ்சாபில் ஆம் ஆத்மிக்கு எதிராக சட்டம் – ஒழுங்கு புகார்கள் எழுந்துள்ளன. இதற்கு அம்மாநில மொழியின் பிரபல பாடகரான சித்து மூஸ்வாலாவின் படுகொலை காரணமாகி விட்டது. பஞ்சாபின் முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ் சங்ரூரில், தனது முன்னாள் எம்எல்ஏவான தல்வீர்சிங் கோல்டியை போட்டியிட வைத்துள்ளது. சிரோமணி அகாலி தளம் தன் கட்சியில் கமல்தீப் கவுர் போட்டியிடுகிறார். இவர், பஞ்சாபின் முன்னாள் முதல்வரான பியாந்தர்சிங் கொலை வழக்கின் குற்றவாளியான பல்வந்த்சிங் ரஜாவுனாவின் சகோதரி.
பாஜகவில் கடந்த ஜூன் 4-இல் கட்சியில் இணைந்த முன்னாள் எம்எல்ஏவான கேவல் தில்லானுக்கு வாய்ப்பளித்துள்ளது. இதனால், எதிர்கட்சிகள் அனைவருமே ஆளும் ஆம் ஆத்மிக்கு கடும் போட்டியாளர்களாகி விட்டனர். இந்த இடைத்தேர்தலில் வெல்வதை பொறுத்தே ஆம் ஆத்மியின் தேசிய அரசியல் இருக்கும். ஏனெனில், அக்கட்சியின் தேசிய அமைப்பாளரான டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், 2024 மக்களவை தேர்தலில் தம் கட்சி நாடு முழுவதிலும் தனித்து போட்டியிடும் என அறிவித்திருந்தார்.
இதற்கு டெல்லியின் ராஜேந்தர்நகர் சட்டப்பேரவை தொகுதியின் இடைத்தேர்தலும் ஆம் ஆத்மிக்கு சவாலாகிவிட்டது. சிலசமயம் சிறிய இடைத்தேர்தல் முடிவுகளால் பெரிய அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து விடுவது உண்டு. ராஜேந்தநகரில் டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி சார்பில் துர்கேஷ் பாதக் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜகவின் வேட்பாளரான ராஜேஷ் பாட்டியா கடும் போட்டியாளராக உள்ளார்.
வழக்கமாக இடைத்தேர்தல்களில் அம்மாநிலத்தில் ஆளும் ஆளும் கட்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, பஞ்சாபின் சங்ரூரிலும், டெல்லியின் ராஜேந்தர்நகரிலும் ஆம் ஆத்மி தோற்றால் அக்கட்சிக்கு பாதிப்புகள் உண்டு. ஏனெனில் ஹரியாணா, இமாச்சலப்பிரதேசம் மற்றும் குஜராத்திலும் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தல்களிலும் ஆம் ஆத்மி அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இங்கு எம்.எல்.ஏவாக இருந்த ராகவ் சட்டாவை ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பியாக்கியது.
இதனால், காலியான ராஜேந்தர்நகர் தேர்தல் முடிவு ஆம் ஆத்மி மற்றும் பாஜகவிற்கு பெரிய எதிர்பார்ப்பை வளர்த்துள்ளது. இதேநிலை, உத்தரப் பிரதேசத்தில் இரண்டு மக்களவை தொகுதி இடைத்தேர்தல்களிலும் பாஜகவிற்கு உருவாகிவிட்டது. அங்கு முக்கிய எதிர்கட்சியான சமாஜ்வாதியின் தலைவர் அகிலேஷ்சிங் யாதவால் ஆஸம்கர் காலியானது. இதன் மூத்த தலைவர் ஆஸம்கானால், ராம்பூர் தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெறுகின்றன.
சமாஜ்வாதியில் இரண்டு தலைவர்களும் கடந்த மார்ச்சில் முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் எம்.எல்.ஏவாகி விட்டனர். இதனால், தம் இரண்டு மக்களவை தொகுதிகளையும் தக்க வைப்பது சமாஜ்வாதிக்கு முக்கியமாகி விட்டது. இதைவிட அதிக முக்கியமாக அந்த தொகுதிகள் பாஜகவிற்கு உள்ளன. உத்தரப் பிரதேசத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக இந்த இடைத்தேர்தல் வெற்றியைக் காட்டி 2024-இல் வரும் மக்களவைத் தேர்தலை சந்திக்க வேண்டும்.
இந்த இரண்டில் அகிலேஷ் ராஜினாமா செய்த ஆஸம்கர் தொகுதியில் சமாஜ்வாதியை தோற்கடிக்க தீவிரம் காட்டபடுகிறது. இங்கு முன்னாள் முதல்வரும் மற்றொரு எதிர்கட்சியுமான மாயாவதி தன் வேட்பாளரை நிறுத்தியுள்ளார். இவர், வழக்கமாக இடைத்தேர்தல்களில் போட்டியிடாமல் விலகி இருப்பவர் ஆஸம்கரில் மட்டும் போட்டியில் இறங்கியுள்ளார். இதனால், முஸ்லிம்கள் அதிகம் கொண்ட ஆஸம்கரில் வாக்குகள் பிரிந்து பாஜக சாதகம் பெறும் வாய்ப்புகள் உள்ளன.
நேற்று முடிந்த வாக்குப்பதிவில் டெல்லியில் மட்டுமே 43.75 சதவிகிதம் என அதிகம். மற்ற தொகுதிகளில் இவற்றை விடக் குறைவாகவே வாக்குகள் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.