Doctor Vikatan: முகம், முதுகு, இடுப்புப் பகுதிகளிலும் பரவும் பருக்கள்… காரணமென்ன?

Doctor Vikatan: என் வயது 21. தலையில் பொடுகு அதிகமிருக்கிறது. அது மட்டுமன்றி முகத்திலும் இடுப்பு உள்ளிட்ட பகுதிகளிலும் பருக்கள் அதிகமிருக்கின்றன. நான் தினமும் மேக்கப் உபயோகிக்கிறேன். மேக்கப்பை தாண்டி பருக்களின் தொந்தரவு வெளியே தெரிகிறது. இதற்குத் தீர்வு என்ன?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் செல்வி ராஜேந்திரன்

டாக்டர் செல்வி ராஜேந்திரன்

பொடுகுக்கும் பருக்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. பருக்கள் இருந்தால் தலையில் பொடுகு இருக்கிறதா எனப் பார்த்து உடனடியாக சரி செய்ய வேண்டியது அவசியம். பொடுகை நீக்கும் ஷாம்பூ உபயோகித்து அதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

சருமத்தின் இயற்கையான எண்ணெய்ச் சுரப்புக்குக் காரணம் செபேஷியஸ் சுரப்பியில் இருந்து சுரக்கப்படும் சீபம் சுரப்பு. இந்தச் சுரப்பு அதிகமாக உள்ள இடங்களில் எல்லாம் பரு வரும். அப்படிப் பார்த்தால் முகம், மண்டைப் பகுதி, தோள்பட்டை, முதுகு மற்றும் கீழ் இடுப்புப் பகுதி வரை எங்கு வேண்டுமானாலும் வரலாம்.

தீவிரமான பருத்தொந்தரவு இருப்பவர்களுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுக்க வேண்டியிருக்கும். அதற்கும் அடுத்த நிலையில் இருப்பவர்களுக்கு ஐஸோட்ரெட்டினாயின் வகை மருந்துகள் பரிந்துரைக்கப்படும். இவை எண்ணெய் சுரப்பிகளையே சுருங்கச் செய்யக்கூடியவை.

ஆனால் இவை, கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை என்பதால் கர்ப்பிணிகள் உபயோகிக்கக்கூடாது. மற்றவர்களும் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே இதை உபயோகிக்க வேண்டும்.

அதிக எண்ணெய்ப் பசையான சருமம் உள்ளவர்கள், சாலிசிலிக் அமிலம் கலந்த ஃபேஸ் வாஷ் உபயோகிக்கலாம். ஆன்டி பாக்டீரியல் சோப் உபயோகிக்கலாம்.

பென்ஸாயில் பெராக்சைடு உள்ள க்ரீம் உபயோகிப்பதன் மூலம் பருக்களுக்கு காரணமான பாக்டீரியா நீங்கும். அதிகப்படியான எண்ணெய் சுரப்பும் கட்டுப்படும். ரெட்டினாயிடு கலந்த ஃபேஸ் வாஷ் சருமத் துவாரங்களின் அடைப்புகளை சரி செய்யும்.

சருமப் பராமரிப்பு

பருக்கள் அதிகமிருப்பவர்கள் எப்போதும் தலையில் எண்ணெய் வைத்தபடி இருக்கக்கூடாது. அது சருமத் துவாரங்களை அடைத்து பருக்களின் தீவிரத்தை அதிகரிக்கும். எண்ணெய் வைத்து மணி நேரத்தில் தலையை அலசிவிட வேண்டும்.

பருக்கள் உள்ளவர்கள் மேக்கப் விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். நான்காமிடியோஜெனிக் ( noncomedogenic) என குறிப்பிடப்பட்டிருக்கும் அழகு சாதனங்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.

உங்கள் விஷயத்தில் பொடுகுதான் பருக்களுக்கான முக்கிய காரணமாகத் தெரிகிறது. எனவே சரும மருத்துவரை அணுகி, பொடுகுத்தொல்லைக்கும் சிகிச்சை எடுக்க வேண்டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.