பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அழைக்கப்படும் நடிகர் ஷாருக்கான் திரைப்படத்துறைக்கு வந்து 30 ஆண்டுகள் ஆகின்றன. 1988ம் ஆண்டு டிவி நடிகராக நடிப்புத் துறைக்கு அறிமுகமான ஷாருக்கான், தொடர்ந்து சில ஆண்டுகள் டிவி தொடர்களில் நடித்து வந்தார்.
1992ம் ஆண்டு ‘தீவானா’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அதே ஆண்டு அவரின் நடிப்பில் மேலும் 3 படங்கள் வெளியாகின. அதோடு அந்த ஆண்டு பாலிவுட் பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் சிறந்த அறிமுக நடிகர் விருதையும் பெற்றார். ஆரம்பத்தில் சில படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் ஷாருக்கான், பின்னர் காதல் படங்களில் அதிகமாக நடிக்க ஆரம்பித்தார். இதனால் ஷாருக்கான் ரொமான்டிக் ஹீரோ என்று அனைவராலும் கொண்டாடப்பட்டார். 1999 – 2003ம் ஆண்டுகளுக்கு இடையே ஷாருக்கான் நடித்த சில படங்கள் சரியாக ஓடாததால் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டார்.
இதனால் சொந்தமாகத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு பாலிவுட்டிற்கு எத்தனையோ பேர் வந்தாலும், ஷாருக்கான் அசைக்க முடியாத பாட்ஷாவாகத் திகழ்ந்து வருகிறார். அதோடு ஐபிஎல் அணிகளை முதன்முதலில் ஏலம் விட்டபோது கொல்கத்தா அணியை தனது தோழியும் நடிகையுமான ஜூஹி சாவ்லாவுடன் சேர்ந்து வாங்கினார். இன்று மேலும் பல பிரான்சைஸ்கள் அவரிடம் உள்ளன.
கடந்த 2018-ம் ஆண்டு கடைசியாக ‘ஜீரோ’ என்ற படம் ஷாருக்கான் நடிப்பில் வெளியில் வெளியானது. அதன் பிறகு எந்தப் படமும் வெளியாகவில்லை. அடுத்த ஆண்டு ஜனவரியில் அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் அவரின் ‘பதான்’ படம் வெளியாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் ‘ஜவான்’ உட்படத் தொடர்ச்சியாக படங்கள் வர இருக்கின்றன.
ஷாருக்கான் திரைப்படத்துறையில் நுழைந்து 30 ஆண்டுகள் ஆவதை அவரோடு சேர்ந்து அவரது ரசிகர்களும் சமூகவலைங்களில் இதனைக் கொண்டாடுகின்றனர்.
ஷாருக்கான் தன் 30 வருடப் பயணத்தைச் சிறப்பிக்கும் விதமாக ‘பதான்’ படத்தின் புதிய லுக் கொண்ட ஒரு மோஷன் போஸ்டரை வெளியிட்டு, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தீபிகா படுகோன், ஜான் அபிரகாம் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் இந்தப் படம் ஜனவரி 25, 2023 அன்று இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகும்.