அசாமில் தொடரும் கனமழை: நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 121 ஆக உயர்வு.! தொடரும் மீட்பு பணி

கவுகாத்தி: அசாமில் கனமழை காரணமாக பலி எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது. அசாமில் தொடர்ச்சியாக பல நகரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் நேற்று உயிரிழந்தனர். இதன்மூலம் வெள்ளம், நில சரிவுகளால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு 121 ஆக உயர்ந்துள்ளது. அசாம் வெள்ளத்திற்கு 27 மாவட்டங்களை சேர்ந்த 2,894 கிராமங்களில் வசிக்கும் 25.10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  பஜாலி, பக்ஸா, பர்பேடா, பிஸ்வநாத், கச்சார், சிராங், தர்ராங், தேமாஜி, துப்ரி, திப்ரூகர், திமா ஹசாவ், கோல்பாரா, கோலாகாட், ஹைலகண்டி, ஹோஜாய், கம்ரூப், கம்ரூப் பெருநகரம், கர்பி அங்லாங் மேற்கு, கரீம்கஞ்ச், லகிம்பூர், மோரிகாவன், நகாவன், சோனித்பூர், தெற்கு சல்மாரா, தமுல்பூர் மற்றும் உடல்குரி ஆகிய 27 மாவட்ட மக்களும் வெள்ள பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர், போலீசாரும் இணைந்து இந்த மீட்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர். வெள்ளம் அதிகம் பாதித்த பகுதிகளுக்கு ஹெலிகாப்டரில் சென்றும், ஒரு சில பகுதிகளில் நேரில் சென்றும் அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ், அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார். மீட்பு பணியில் படகுகளில் சென்றும் மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.