முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க தலைமைக்கு பெரும் போராட்டம் நடந்து வருகிறது. தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமைக்கான விவகாரம் உச்சத்தை எட்டியிருக்கிறது. அ.தி.மு.க தற்போது ஓ.பி.எஸ், இ.பி.ஸ் அணி எனத் தனியாகப் பிரிந்து கிடக்கிறது. இ.பி.எஸ்-ன் கை கட்சியில் ஓங்கியிருப்பதால், ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். பொதுக்குழு அடுத்த மாதம் 11-ம் தேதி நடைபெறவிருக்கும் சூழலில், ஓ.பி.எஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சித் தொண்டர்களைச் சந்திக்கத் தொடங்கியிருக்கிறார்.
இந்த நிலையில், இன்று வெளியான `நமது அம்மா’ பதிப்பில் நிறுவனர் பெயரிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் நீக்கப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளிதழான `நமது அம்மா’-வில் நிறுவனர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரின் பெயர்கள் இதுநாள் வரை குறிப்பிடப்பட்டு வந்தன. நேற்றுவரை இவரின் பெயரும் குறிப்பிடப்பட்டு வந்த நிலையில், இன்றைய பதிப்பில் ஓ.பி.எஸ்-ன் பெயர் நீக்கப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், இந்த விவகாரம் அந்தக் கட்சியில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
ஓ.பி.எஸ் பெயர் திடீரென நீக்கப்பட்டிருப்பது குறித்து `நமது அம்மா’ நாளிதழின் மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். “ஆமாம் இன்று வெளிவந்த பதிப்பில் ஓ.பி.எஸ் பெயர் நீக்கப்பட்டிருக்கிறது. நேற்றைய தினம் தீர்மானிக்கப்பட்டு ஓ.பி.எஸ் நாளிதழின் நிறுவனர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
அதனால், அவரின் பெயர் நிறுவனர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது. இனி வரும் பதிப்புகளில் எடப்பாடி கே.பழனிசாமி என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும். கட்சி மேலிடம் கலந்தாலோசித்து எடுத்த முடிவு இது.” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.