கடந்த 14ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுகவில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை என்ற விவகாரம் பூதாகரமாக வெடித்தது. அன்றுமுதல் பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி தரப்புகள் இரு அணிகளாக பிரிந்தது வெட்ட வெளிச்சமானது.
இதில், ஓபிஎஸ் தரப்பை பொறுத்தவரை இரட்டை தலைமை தான் சிறந்தது என்று போர்க்கொடி தூக்க, எடப்பாடி பழனிசாமி தரப்போ ஒற்றை தலைமை தான் வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்று வருகிறது.
மேலும், எடப்பாடி பழனிசாமி தரப்பில் அதிமுகவின் மூத்த தலைவர்கள் செங்கோட்டையன், தம்பிதுரை, தமிழ்மகன் உசேன் உள்ளிட்டோரும் இணைந்திருப்பதால், எடப்பாடி பழனிசாமி கை ஓங்கி உள்ளது.
இதனிடையே கடந்த இருபத்தி மூன்றாம் தேதி நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில், ஒற்றைத்தலைமைக்கு தீர்வு எட்டப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படாமல் பொதுக்குழு கூட்டம் நடந்து முடிந்தது.
ஓ பன்னீர்செல்வம் பொதுக் குழுவில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். மேலும் அடுத்த பொதுக்குழு காண தேதியும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டபின் செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில்,
“எம்ஜிஆர், ஜெயலலிதா வகித்த பதவியை பல கோடிகள் செலவழித்து அடைய நினைக்கிறார்கள். தவறான நபர்களின் கையில் அதிமுக சிக்கியுள்ளது” என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.