கடந்த இரண்டு வாரங்களாகவே அ.தி.மு.க-தான் ஹாட் டாக்! பொதுக்குழுவில் முடிந்துவிடும் பிரச்னை என்று நினைத்திருந்தால், தொடர் கதைபோல நீண்டுகொண்டே செல்கிறது விவகாரம். இதில் பா.ஜ.க-வின் பிளான் என்ன? என்பது குறித்து அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரிடம் பேசினோம்.
“தமிழ்நாட்டில் கடந்த இரு வாரங்களாக என்ன நடந்தாலும், அ.தி.மு.க மட்டுமே ஃபோக்கஸில் இருந்தது. இதனால் பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும், அ.தி.மு.க விவகாரம் அடங்கட்டும் என்றுக் காத்திருந்தார். அதற்குள்ளாக குடியரசுத் தலைவர் வேட்பாளராக முர்மு அறிவிக்கப்பட்டதால், அந்தந்த மாநிலங்களிலுள்ள, பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சிகளிடம் ஆதரவு கேளுங்கள் என்று டெல்லி தலைமை சொல்லிவிட்டது. அதனால்தான், பொதுக்குழு முடிந்த கையோடு எடப்பாடியையும், பன்னீர்செல்வத்தையும் அப்செட்டில் இருந்த நேரமாக இருந்தாலும் தனித்தனியாகச் சந்தித்து ஆதரவு கோரினார் அண்ணாமலை. அப்போதே, ‘அ.தி.மு.க பிரச்னை, உட்கட்சி விவகாரம் அதில் பா.ஜ.க தலையிடாது’ என்று கூறிவிட்டார்.
ஜெயலலிதாவுக்குப் பிறகு சசிகலா தலைமையை விரும்பாமல், ஓ.பி.எஸ்-ஸைக் கையிலெடுத்து கேம் ஆடியது டெல்லி தலைமை. பிறகு, டெல்லிதான் இரு அணிகளையும் இணைத்தும் வைத்தது. இரு தலைமைக்குள்ளும் என்றாவது ஒருநாள் பிரச்னை வெடிக்கும் என்பதை டெல்லி முன்பே கணித்திருந்தது. அதுபோலவே, பிரச்னை வெடிக்கவே தமிழ்நாடு பா.ஜ.க-வினரோ, `இதுதான் சரியான நேரம் அ.தி.மு.க-வை மொத்தமாக முடித்துவிட்டால், தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய கட்சியாக பா.ஜ.க-வை நிலைநிறுத்திவிடலாம்’ என்று டெல்லித் தலைமைக்கு தகவல் அனுப்பினராம்.
ஆனால், டெல்லி பா.ஜ.க அதனை ரசிக்கவில்லை. தமிழ்நாட்டில் உடனடியாக பெரும் மாற்றம் ஏற்படப்போவதில்லை என்பதை உணர்ந்து, `அ.தி.மு.க உட்கட்சி விவகாரத்தில் தலையிட வேண்டாம். என்ன நடக்கிறது? யார் பக்கம் ஆதரவு அதிகம்? இருவரின் கருத்தும் என்ன? என்பது பற்றி மட்டும் விசாரித்து அறிக்கை அனுப்புங்கள்’ என்று மட்டுமே டெல்லி கூறியது. அதன்படி விசாரிக்கத்தான், அண்ணாமலையுடன் தமிழ்நாடு மேலிடப் பார்வையாளர் சி.டி.ரவியும் சென்றிருந்தார்.
பன்னீர்செல்வம், எடப்பாடி இருவருமே தங்களுக்கு நெருக்கமானவர்கள் என்பதால், இருவரில் ஒருவரை ஆதரிக்க பா.ஜ.க தயங்குகிறது. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 5 சீட் ஒதுக்கியது எடப்பாடிதான். அதனால், பன்னீரை ஆதரித்தால், கட்சியின் முக்கால்வாசிப் பேர் எடப்பாடி பக்கம் நிற்பதைப் பார்க்க வேண்டியுள்ளது. அதனையும் தாண்டி, பன்னீரை ஆதரிக்கலாம் என்றால், ஏற்கெனவே சசிகலாவுக்கு எதிரான விவகாரத்திலேயே அவரது செயல்பாட்டினை டெல்லி கணித்துவிட்டது.
அதனால், நடப்பது நடக்கட்டும் என்று அமைதிகாக்கிறது. தேர்தல் கமிஷனில் இருதரப்பும் புகாரளித்தாலும், அதிலும் பா.ஜ.க தலைமை தலையிடாது என்றுதான் நினைக்கிறோம். ஏனெனில், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டாண்டுகளே உள்ளன. அத்தேர்தல் முடிந்து மீண்டும் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர், இதுபோன்ற பிரச்னை ஏற்பட்டது என்றால், அன்று எடுக்கக்கூடிய முடிவே வேறுமாதிரியாக இருக்கும். ஆனால், தேர்தலுக்கு முன்பாக நடப்பதால், எதையும் செய்யமுடியவில்லை.
இருவருக்கும் இடையே சமாதானம் பேசவும் டெல்லி தயாராக இருக்கிறது. இருவரில் ஒருவரோ அல்லது பேசி பிரச்னையை சுமுகமாக முடித்துக்கொண்டு, இருவருமோ இந்த இரண்டாண்டுகளுக்குள் செட்டிலாக வேண்டும். பன்னீர் தலைமையில் கட்சி வந்தாலும், எடப்பாடி தலைமை வந்தாலும், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் எப்படியும் குறைந்தபட்சம் 10 முதல் 15 சீட் பெற்றுவிட வேண்டும் என்பதே இலக்காக உள்ளது. அதேநேரம், குடியரசுத் தலைவர் தேர்தல், வட மாநில விவகாரங்கள் என ஆயிரத்தெட்டுப் பிரச்னைகள் டெல்லி பா.ஜ.க தலைமையைச் சுற்றி இருப்பதால், தமிழ்நாட்டில் கூட்டணிக் கட்சி ஒன்றில் நடக்கும் நிகழ்வுகளில் தலையிட விரும்பவில்லை. இப்போதைக்கு பா.ஜ.க பார்வையாளராக மட்டுமே இருந்தபோதும், இருதரப்பில் இருந்தும் டெல்லியிடம் தனித்தனியாக உதவி கோரிவருகிறார்கள். ஒருவேளை மோடி-அமித் ஷா கூட்டணி இதில் தலையிட முடிவெடுத்தால், பிரச்னையை சுமுகமாக முடித்துவைப்பார்கள்!” என்று முடித்தார் விரிவாக.
தமிழ்நாடு பா.ஜ.க முன்னாள் ஊடகப்பிரிவுத் தலைவர் பிரசாத்திடம் இதுபற்றி கேட்டபோது, “டெல்லி பா.ஜ.க., தமிழ்நாடு பா.ஜ.க என்ற பாகுபாடில்லை, ஒரே பா.ஜ.க-தான். இந்த அ.தி.மு.க விவகாரத்தைப் பொறுத்தவரை, முழுமையான உட்கட்சிப் பிரச்னை. சில நேரங்களில் மாநிலக் கட்சிக்குள் உட்கட்சிப் பிரச்னை ஏற்படுவதும், பிறகு இணக்கமாவதும் வழக்கமான ஒன்றுதான். இந்தப் பிரச்னையும் நல்லபடியாக முடிந்து, வருகிற நாடாளுமன்றத் தேர்தலை எங்களுடன் நிச்சயம் ஒன்றாகச் சந்திப்பார்கள். அண்ணாமலையும், சி.டி.ரவியும் சந்தித்தது முழுக்க முழுக்க குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பானது. அதில் அரசியல் எதுவும் பேசப்படவில்லை. பா.ஜ.க-வுக்கு எந்தக் கட்சியையும் வெட்டுவதும், சேர்ப்பதும் வேலையல்ல, பா.ஜ.க-வைத் தமிழ்நாட்டில் பலமானக் கட்சியாக உருவாக்கவே பாடுபடுகிறோம். இப்போது, எதிர்க்கட்சிக்கானப் பணிகளைச் சிறப்பாகச் செய்துவருகிறோம், அடுத்து ஆளுங்கட்சியாக ஆவதற்கான முயற்சியில் இருக்கிறோம். அதேசமயம், எங்களது கூட்டணி கட்சியான அ.தி.மு.க வலுவானக் கட்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களது எண்ணம்” என்றார்.