மும்பை: அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி மஹாராஷ்டிரா மாநில போலீஸ் கமிஷனர் மற்றும் மும்பை போலீஸ் கமிஷனருக்கு மஹாராஷ்டிரா கவர்னர் பகத் சிங் கோஷியாரி கடிதம் எழுதியுள்ளார்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, சிவசேனா மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே, கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ளார். அவருடன், 40 சிவசேனா எம்.எல்.ஏ.,க்களும், ஏழு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இவர்கள் அசாம் மாநிலம், கவுஹாத்தியில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர். இதனால், மஹாராஷ்டிராவில் கூட்டணி அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. சமாதான பேச்சு நடத்த அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுக்கு உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்தும் பலனில்லை. அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை மாநில அரசு விலக்கி கொண்டது.
இந்நிலையில், ரமேஷ் போனரே, மங்கேஷ் குடால்கர் உள்ளிட்ட 15 அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மஹா., மாநில டிஜிபி மற்றும் மும்பை போலீஸ் கமிஷனருக்கு அம்மாநில கவர்னர் கடிதம் எழுதியுள்ளார்.
முதல்வர் உத்தவ் தாக்கரே வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தொண்டர்கள் அமைதியாக இருக்க வேண்டும். சட்டம் ஒழுங்கை காக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.
எம்.எல்.ஏ.,க்களின் மனைவியுடன் பேச்சு
உத்தவ் தாக்கரேயின் மனைவி ரேஷ்மி தாக்கரே, அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களின் மனைவிகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி வருகிறார் உங்கள் கணவர்களை சமாதானப்படுத்தி மீண்டும் சிவசேனாவுக்கு அழைத்து வாருங்கள் எனக்கூறி வருகிறார்.
இதனிடையே, சஞ்சய் ராவத் வெளியிட்ட அறிக்கையில், இன்னும் எத்தனை நாட்களுக்கு பதுங்கி இருக்க போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், 16 எம்.எல்.ஏ.,க்களுக்கு துணை சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளதை மேற்கோள் காட்டியுள்ளார்.