அஸ்ஸாமில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 45 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு, நிவாரணம் மற்றும் பிற அவசரகால உதவிகளுக்காக மாநில அரசு அவசர உதவி எண் அறிவித்திருக்கிறது.
அஸ்ஸாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிக்கையின்படி, “அஸ்ஸாமின் மோரிகான் மாவட்டத்தில் வெள்ள நீர் வடியத் தொடங்கியுள்ளது. அஸ்ஸாமில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட குறைந்தது நான்கு பேர் இறந்துள்ளனர். சனிக்கிழமையன்று இறப்பு எண்ணிக்கை 121-ஆக உயர்ந்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில், அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பராக் பள்ளத்தாக்கு பகுதியை பார்வையிட்டார். அப்போது அந்தப் பகுதியில் குடியிருக்கும் இளைஞர் ஒருவர் கழுத்தளவு வெள்ளத்தில் இறங்கிச் சென்று சால்வை வழங்கி முதல்வருக்கு வாழ்த்துத் தெரிவித்தார். கையில் சால்வையை வைத்துக்கொண்டு வெள்ள நீரில் தள்ளாடியபடி முதல்வரை நெருங்கிய அந்த இளைஞரை, மீட்பு படையினர் பத்திரமாக முதல்வர் அருகில் அழைத்து சென்றனர். இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.
இளைஞரிடமிருந்து சால்வையை பெற்றுக்கொண்ட முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, அவருக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.